Also Watch
Read this
By: Manigandan Raja

இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள கேரளத்தை சேர்ந்த இளைஞர் :
பிஃபா உலகக் கோப்பை தொடரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 19 வயதேயான இளம் வீரர் முதல்முறையாக பங்கேற்கவுள்ளார். 23-வது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 11-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தொடரில், 19 வயதேயான கேரளத்தை சேர்ந்த தாஹ்சின் ஜம்ஷித், கத்தார் அணியில் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம், பிஃபா உலகக் கோப்பையில் விளையாடும் முதல் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர் என்ற வரலாற்றை படைக்கப்போகிறார். இவரது தந்தை 1996-ல் மனைவியுடன் தோஹாவுக்கு குடிபெயர்ந்தார்.
செக் குடியரசு இளம்வீரர் அரையிறுதிக்கு முன்னேற்றம் :

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் செக் குடியரசின் 20 வயது இளம்வீரர் ஜாகுப் மென்சிக் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
பாரீஸ் நகரில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பிரேசிலின் ஜோவ் பொன்சேகாவுடன் மோதிய அவர், 6-க்கு 4, 6-க்கு 3, 7-க்கு 6 என்கிற செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
அதேசமயம், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா அதிர்ச்சி தோல்வியடைந்தார். முதல் செட்டை சபலென்கா கைப்பற்றிய நிலையில், அடுத்த 2 செட்களையும் ரஷ்யாவின் டயானா சினைடர் வென்றார்.
பெண்கள் நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி :

பெண்கள் நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய பெண்கள் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் வரும் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை போட்டி நடைபெறுகிறது.
இந்த போட்டியில் "ஏ" பிரிவில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சலிமா டெடி கேப்டனாக செயல்படுவார் எனவும், கோல்கீப்பர்களாக சவிதா, பிச்சு தேவி கரிபாம் ஆகியோர் செயல்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தொடர்: இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி :
ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியை முன்னிட்டு, இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் அணி, ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது.
இதை முன்னிட்டு, வேகப்பந்து வீச்சாளர்கள் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னுார் பிரார், ஜம்மு காஷ்மீர் அகிப் நபி ஆகியோர் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டனர். மேலும், ஆப்கானிஸ்தான் டெஸ்டில் அறிமுக வாய்ப்பு பெறுவார் என நம்பப்படும் சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்ஷ் துபே, மானவ் சுதர் ஆகியோரும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்திய வீரர்கள் தோல்வியடைந்து வெளியேறினர் :

இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர்கள் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினர். பர்மிங்காமில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்றில் உலக தரவரிசையில் 24-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் அபய்சிங் 9-க்கு 11, 4-க்கு 11, 11-க்கு 7, 10-க்கு 12 என்ற செட் கணக்கில் 8-ம் நிலை வீரரான எகிப்தை சேர்ந்த முகமது ஜகாரியாவிடம் தோற்று வெளியேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 40-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் வீர் சோத்ராணி 10-க்கு 12, 9-க்கு 11, 3-க்கு 11 என்ற செட் கணக்கில் 6-ம் நிலை வீரரான வேல்ஸை சேர்ந்த ஜோயல் மாகினிடம் தோல்வியடைந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved