Also Watch
Read this
By: Manigandan Raja

தொடரில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான், நெதர்லாந்து :
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தொடரின் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் ஒரு வெற்றிகூட பெறாத நிலையில், இரு அணிகளும் மோதிக் கொண்டன.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் குல் பெரோசா 63 ரன்கள் குவித்தார். தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 18 ஓவரில் 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இரு அணிகளும் ஏற்கெனவே உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.
இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம் :

யு.எஸ். ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். தைவானின் லியாவ் ஜோ பூ உடன் மோதிய அவர், 21-க்கு 9 என முதல் செட்டை கைப்பற்ற, பதிலுக்கு லியாவ் ஜோ பூ 2-வது செட்டை 21-க்கு 12 என கைப்பற்றினார்.
பின்னர் நடைபெற்ற வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை கிடாம்பி 21-க்கு 8 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரோனக் சவுகான் 23-க்கு 21, 21-க்கு 11 என்கிற நேர்செட் கணக்கில் இஸ்ரேலின் மிஷா ஜிப்லர்மேனை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
செக் குடியரசின் கரோலினா முசோவாவுக்கு சாம்பியன் பட்டம் :

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செக் குடியரசின் கரோலினா முசோவா சாம்பியன் பட்டம் வென்றார். ஜெர்மனியில் நடைபெற்ற போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்கொண்ட, கரோலினா முசோவா சிறப்பாக விளையாடி முதல் செட்டை 6-க்கு 1 என கைப்பற்றினார்.
2-வது செட்டிலும் 1-க்கு 0 என முசோவா முன்னிலை பெற்றிருந்தபோது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நவோமி ஒசாகா போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, கரோலினா முசோவா சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.