news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews இந்தியாவை விழுங்கும் சைபர் சூறாவளி ஆன்லைனில் தொடரும் டிஜிட்டல் வேட்டை
tv

Also Watch

tv

Read this

இந்தியாவை விழுங்கும் சைபர் சூறாவளி ஆன்லைனில் தொடரும் டிஜிட்டல் வேட்டை

டிஜிட்டல் வேட்டை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Digital world

(Coutesy : hanwhadatacenters )

தொழில்நுட்ப வளர்ச்சிகள் உச்சத்தை எட்டியுள்ள இந்த தருணத்தில் இந்தியாவை உள்ளுக்குள்ளேயே அரித்துத் தின்னும் ஒரு அமைதியான, கண்ணுக்குத் தெரியாத போர் சைபர் குற்றம். கடந்த ஆறே ஆண்டுகளில், இந்தியர்கள் இழந்த தொகை மட்டுமே ஐம்பத்தி இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஆறு கோடி ரூபாய்.

இது வெறும் எண் இல்ல — இது லட்சக்கணக்கான குடும்பங்களின் வியர்வை, கனவு, ஓய்வூதியம், ஆயுள் சேமிப்பு. யார் இந்த வலையில் விழுகிறார்கள்? எப்படி பணம் காணாமல் போகிறது? ஏமாற்றுபவர்கள் சிக்குகிறார்களா? அதிர்ச்சியூட்டும் பதில்கள் இதோ உங்களுக்காக.

நேரம் — காலை 11 மணி 14 நிமிடங்கள். ஒரு போன் கால். நீங்கள் CBI அதிகாரியுடன் பேசுகிறீர்கள்... உங்கள் ஆதார் எண் ஒரு பணம் மோசடி வழக்குடன் இணைக்கப்பட்டுள்ளது என்ற குரல் கேட்கிறது. இந்த அழைப்பு, இந்த நொடி. இந்தியாவின் எந்தவொரு மூலையிலும், எந்தவொரு வீட்டிலும் இப்போதே நடந்துகொண்டிருக்கலாம். ஏனெனில், ஒவ்வொரு மூன்று வினாடிக்கும் இந்தியாவில் ஒரு சைபர் குற்றப் புகார் பதிவு செய்யப்படுகிறது.

ஆண்டு 2000. இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. IT Act 2000. அப்போது யாருக்கும் தெரியாது, அந்தச் சட்டம் ஒரு நாள் இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்புப் போரின் முதல் கவசமாக மாறும் என்று. 2012-ல் பதிவான சைபர் குற்ற வழக்குகள் எத்தனை தெரியுமா? வெறும் 3,477. இது ஒரு சிறிய எண்ணிக்கை என்பதால் கவலைப்பட வேண்டியதில்லை என நினைத்தோம்.

ஆனால் 2014-இல் இந்த எண்ணிக்கை 9,622 ஆனது. 2017-இல் ஒரே ஆண்டில் 77 சதவீத பாய்ச்சல். 2023-இல் 86,420. மற்றும். 2024-இல், இந்திய காவல்துறை வரலாற்றிலேயே முதல்முறையாக, சைபர் குற்ற வழக்குகள் ஒரு லட்சத்தைக் கடந்தன. ஆம் மொத்தம் 1,01,928 வழக்குகள். அதாவது 12 ஆண்டுகளில் சுமார் 29 மடங்கு உயர்வு.

கற்பனை செய்யுங்கள். உங்கள் வீட்டு கதவை யாரும் தட்டவில்லை. ஆனால் உங்கள் திரையில், போலீஸ் சீருடையில், அதிகாரபூர்வ லோகோவுடன், ஒரு அதிகாரி தோன்றுகிறார். உங்கள் பேரில் வாரண்ட் இருக்கிறது. நீங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறுகிறார்.

உண்மையைச் சொன்னால் இந்தச் வாக்கியத்திற்கு இந்திய சட்டத்தில் எந்த அர்த்தமும் இல்லை. ஆம். டிஜிட்டல் கைது என்று எதுவுமே கிடையாது. ஆனாலும், 2022-இல் 39,925 ஆக இருந்த இந்த மோசடி வழக்குகள், 2024-இல் 1,23,672 ஆக குதித்தது. இதனால் மட்டுமே ஒரே ஆண்டில் மக்கள் இழந்த தொகை 1,935 கோடி ரூபாய்.

Courtesy : QuoteInspector.com

ஆனால், இவை எல்லாவற்றையும் விட பெரிய மோசடி ஒன்று இருக்கிறது. அதன் பெயர்தான் முதலீட்டு மோசடி. WhatsApp குழுக்கள், Telegram சேனல்கள், கேரண்டியான லாபம் கிடைக்கும் என்ற வாக்குறுதிகள். நீங்கள் முதலில் சிறிய லாபம் காண்பீர்கள். நம்பிக்கை வரும். பின்னர், உங்கள் ஆயுள் சேமிப்பை முழுவதுமாக கொட்டுவீர்கள். கடைசியாக... withdraw பட்டன் வேலை செய்யாது.

இந்த ஒரு மோசடி வகையே, 2025-இல் இந்தியர்கள் இழந்த மொத்தத் தொகையில் 75 முதல் 77 சதவீதம் வரை அதாவது நாட்டின் ஒட்டுமொத்த சைபர் இழப்பில் முக்கால் பங்கு ஆகும்.

பாலியல் மிரட்டல், போலி வேலைவாய்ப்பு, கடன் ஆப் சுரண்டல், UPI QR கோட் மோசடி என இந்த மோசடிப் பட்டியலுக்கு ஒரு முடிவே இல்லை. ஒவ்வொரு வாரமும், ஏமாற்றுபவர்கள் ஒரு புதிய தந்திரத்தை கண்டுபிடிக்கிறார்கள். நாம் கற்றுக்கொள்வதற்குள், அவர்கள் அடுத்த தந்திரத்திற்கு மாறிவிடுகிறார்கள்.



2021-இல் இந்தியர்கள் இழந்த தொகை சுமார் 551 கோடி ரூபாய். ஆனால் இது 2024-இல்... 22,845 கோடி ரூபாய்.

வழக்குகள் எண்ணிக்கை வெறும் 7 மடங்கு அதிகரித்த நிலையில், இழப்போ 41 மடங்கு உயர்ந்தது. இதற்கு காரணம் என்ன தெரியுமா? தனிப்பட்ட மோசடிக்காரர்களின் எல்லையைத் தாண்டி, ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச குற்ற வலையமைப்புகளின் தொழிலாகவும் அது மாறிவிட்டது.

2025-ஆம் ஆண்டு ஒன்றில் மட்டும் 19,800 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு மாதமும் சராசரியாக சுமார் 1,650 கோடி ரூபாய், இந்தியர்களின் கைகளில் இருந்து, கண்ணுக்குத் தெரியாத கைகளுக்கு நழுவிச் செல்கிறது.

மாதத்திற்கு சரியாக 1,650 கோடி ரூபாய், சிந்தித்துப் பாருங்கள் இதைக் கொண்டு எத்தனை மருத்துவமனைகள் கட்டமுடியும், எத்தனை குழந்தைகளின் கல்விக்கு செலவிட முடியும்.

ஓய்வுபெற்ற ஒரு பொறியாளர் ஒருவர் தனது 40 ஆண்டு கால சேவைக்குப் பின் கிடைத்த பணி ஓய்வுத் தொகையான 19 லட்சம் ரூபாயை ஒரே ஒரு போன் காலில் இழந்தது கொடுமையிலும் கொடுமை. ஒரு பெண்மணி பாலியல் மிரட்டலுக்கு பயந்து, யாரிடமும் சொல்ல முடியாமல், தனியாக துன்பப்படுகிறார். மேலும் ஒரு பெண் முதலீட்டு மோசடியில் இழந்த தொகை 1.53 கோடி ரூபாய் .

மூத்த குடிமக்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள், வெறும் இரண்டே ஆண்டுகளில் (2020-22) 86 சதவீதம் அதிகரித்துள்ளன. ஏன் தெரியுமா? அவர்கள்தான் அதிகம் நம்பிக்கையுடையவர்கள், அதிகம் பயப்படக்கூடியவர்கள், டிஜிட்டல் உலகின் வேகத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் போராடுபவர்கள்.


இன்னும் கொடூரமான உண்மை என்ன தெரியுமா? UPI பயன்படுத்தும் ஒவ்வொரு 5 பேரில் ஒருவர் மோசடி முயற்சியை எதிர்கொண்டுள்ளனர். ஆனால் இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அதாவது 51% பேர் யாரிடமும் புகார் கூட செய்யவில்லை. அவமானம், பயம், தன்னை யாரும் நம்ப மாட்டார்கள் என்ற அவர்களின் எண்ணமே மோசடிக்காரர்களுக்கு ஊக்கமாக அமைகிறது.

இப்போது, நாங்கள் உங்களுக்கு சொல்லப்போவது இந்த முழு கட்டுரையின் மிக அதிர்ச்சியூட்டும் திருப்பம். உங்களை அலைபேசியில் அழைக்கும் அந்த ஏமாற்று பேர்வழியும், இதே முறையில் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம்.

கம்போடியா, மியான்மர், லாவோஸ் உள்ளிட்ட நாடுகளில், முள்கம்பி வேலிகளுக்குள், ஆயுதம் ஏந்திய காவலர்களுக்கு கீழ் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். அதிக சம்பள வேலை என்ற போலி விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு பாஸ்போர்ட் பறிக்கப்பட்டு, நாள்தோறும் 16 மணி நேரம், உங்களையும் என்னையும் போன்றவர்களை ஏமாற்ற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இலக்கை அடையத் தவறினால் அடி, பட்டினி, இன்னும் மோசமான தண்டனைகள்.

2022 முதல் 2025 வரை, இந்திய அரசு கம்போடியாவில் இருந்து 2,533 பேரையும், லாவோஸில் இருந்து 2,297 பேரையும், மியான்மரில் இருந்து 2,400-க்கும் அதிகமானோரையும் சேர்த்து சுமார் 7000 பேரை மீட்டுள்ளது.
மியான்மர் மற்றும் கம்போடியா மட்டும் சேர்த்து, 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த ஸ்கேம் காம்பவுண்டுகளில் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அதிர்ச்சியூட்டும் மதிப்பீடு தெரிவிக்கிறது.

எனவே அடுத்தமுறை யாராவது உங்களை ஏமாற்ற முயலும்போது, அந்தக் குரலுக்குப் பின்னால், ஒருவேளை, விடுதலைக்காக ஏங்கும் இன்னொரு பாதிக்கப்பட்டவரும் இருக்கலாம்.கன்னித் தீவு கதை போல இந்த சைபர் மோசடிகளுக்கு தீர்வே இல்லையா என்றால் இருக்கிறது. அதற்கு பெயர் தங்க நேரம். மோசடி நடந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் நீங்கள் 1930-ஐ டயல் செய்தால், உங்கள் பணத்தை மீட்கும் வாய்ப்பு 60 சதவீதம் வரை இருப்பதாக கூறுகின்றனர் துறை வல்லுநர்கள்.

ஆனால் 24 மணி நேரம் தாமதித்தீர்கள் என்றால் பணம் திரும்பக் கிடைப்பதற்கான வாய்ப்பு 15 சதவீதத்திற்கும் கீழே சரிந்துவிடும்.2025-இல் மட்டும், அரசு 13 லட்சத்திற்கும் அதிகமான மோசடி கணக்குகளை முடக்கியது, 12 லட்சத்திற்கும் அதிகமான போலி SIM அட்டைகளை ரத்து செய்தது. இருப்பினும் ஏமாற்றியவர்கள் என்னவாகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலைப் பெறுவது அவசியமாகிறது.

தேசிய அளவில் சைபர் குற்ற வழக்குகளில் தண்டனை விகிதம் என்பது ஒரே ஒரு சதவீதத்திற்கும் குறைவு. கைது செய்யப்பட்டவர்களில் கூட, தண்டிக்கப்படுவோர் 3 சதவீதத்திற்கும் குறைவானவர்களே.82 லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் பதிவாகியும், FIR ஆக மாறியது வெறும் 1,84,000 — அதாவது 2.2%. கர்நாடகா போன்ற மாநிலங்களில் சில ஆண்டுகளில் ஒரு தண்டனை வழக்கு கூட பதிவாகவில்லை.

இந்த கட்டுரையில் நீங்கள் சந்தித்த இந்த நவீன மோசடி உலகம் தொலைதூரத்தில் இல்லை. இது உங்கள் கைபேசியில், இப்போதே, ஒரு SMS-ஆகவோ, ஒரு கால் ஆகவோ காத்திருக்கலாம்.எனவே, OTP-ஐ யாரிடமும் பகிராதீர்கள். அதிக லாபத்திற்கு கேரண்டி என்று யாரும் சொன்னால், அது பொய் என்று உறுதியாக நம்புங்கள்.

டிஜிட்டல் கைது என்று யாராவது மிரட்டினால், அது சட்டப்பூர்வமான நடைமுறை அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடனடியாக அழைப்பை துண்டித்து, 1930 என்ற தேசிய சைபர் உதவி எண்ணைத் தொடர்புகொள்ளுங்கள்.ஏனெனில், இந்தப் போரில் உங்கள் முதல் ஆயுதம் பணம் இல்லை. விழிப்புணர்வு.

Related Link
ராக்கெட் வேகத்தில் உயரும் அரிசி விலை, அதிர வைக்கும் நிலவரம்

ராக்கெட் வேகத்தில் உயரும் அரிசி விலை, அதிர வைக்கும் நிலவரம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மேகவெடிப்பு காரணமாக கொட்டித் தீர்த்த கனமழை

0
11 mins agoshare
ஹிமாச்சல பிரதேசம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau