Also Watch
Read this
By: Manigandan Raja

ஆறு நாட்களுக்கு பிறகு குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம் :
வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கத்தின் போது கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட ஒன்றரை வயது குழந்தை ஆறு நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தண்ணீரும், உணவுமின்றி ஆறு நாட்களாக கட்டட இடிபாடுகளுக்குள் மயக்க நிலையில் சிக்கிக் கிடந்த ஆண் குழந்தையை, தெர்மல் இமேஜிங் கேமரா மூலம் மீட்பு படையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக குழந்தையை மீட்ட அவர்கள், ஆம்புலன்சிலேயே உயிர்காக்கும் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அரசியலமைப்பு சீர்த்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு :

செனகல் நாட்டின் அரசியலமைப்பு சீர்த்திருத்த மசோதாக்களுக்கு எதிராக மக்கள், நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக நீதித்துறையின் சுதந்திரத்தை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தங்கள் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளன.
நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டம் தீவிரமடைந்ததால், போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் மக்களை வெளியேற்றினர். இது முழுக்க முழுக்க அதிகார துஷ்பிரயோகம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக வெடித்த போராட்டம் :

தென்னாப்பிரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை வெளியேற வலியுறுத்தும் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. உரிய ஆவணங்களின்றி தென்னாப்பிரிக்காவில் குடியேறி வாழ்பவர்களால் உள்நாட்டு மக்களின் வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதாக மக்கள் கொந்தளித்துள்ளனர்.
இதன் காரணமாக போராட்டத்தில் குதித்துள்ள மக்கள், மாபெரும் பேரணியை முன்னெடுத்துள்ளனர். காவல்துறையினரை எதிர்கொள்ளும் வகையில் கையில் தடியுடனும், பாதுகாப்பு உபகரணங்களுடனும் மக்கள் பேரணி சென்றது கவனத்தை ஈர்த்துள்ளது.
மேற்கூரை இடிந்து விழுந்து 14 குழந்தைகள் பலி :
பாகிஸ்தானில் பயிற்சி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், 5 பேர் காயமடைந்தனர். லாகூரின் கஹ்னா பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, மேல் தளத்தில் நடைபெற்ற கட்டுமான பணியின்போது, திடீரென பயிற்சி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், 19 குழந்தைகள் படுகாயமடைந்த நிலையில், கஹ்னா தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அதற்குள் 14 குழந்தைகள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம் இல்லை :

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம் இல்லை என அடக்குமுறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவலகோட் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய கூட்டுக்குழு தலைவர் சர்தார் அமான் கான், பாகிஸ்தான் தங்களுக்கு தேவையில்லை எனவும், பாகிஸ்தானுக்குத்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேவைப்படுவதாகவும் கூறினார்.
மேலும், உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்ந்தால், அப்பகுதி மக்கள் உதவிக்காக இந்தியாவை நாடக்கூடும் எனவும் தெரிவித்தார்.