Also Watch
Read this
தமிழகத்தில், சன்னரக அரிசி விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் ராக்கெட் வேகத்தில் புதிய உச்சத்தை தொட்டு, மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையை பதம் பார்த்திருக்கிறது. சாமானியர்களை நிலைகுலைய செய்துள்ள இந்த அதிரடி அரிசி விலை உயர்வுக்கு உண்மையான பின்னணி என்ன? அண்டை மாநில வறட்சியா? அல்லது டீசல் விலை உயர்வால் எகிறிய போக்குவரத்து வாடகையா?

இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தமிழகத்தில் சமையலறைகளில் இப்போது எரியும் நெருப்பை விட, அரிசி விலையை கேட்டு கிளம்பும் அதிர்ச்சி தீதான் அதிகமாக தகிக்கிறது. பொதுமக்களின் தினசரி உணவில் மிக முக்கிய பங்கெடுக்கும் பொன்னி போன்ற சன்ன ரகங்களின் விலை, சில்லறை விற்பனை சந்தையில் திடீரென கிலோ 60 முதல் 70 ரூபாய் வரை எகிறி கிடப்பது இல்லத்தரசிகளின் மளிகை பட்ஜெட்டை முற்றிலுமாக தலைகீழாக மாற்றிப்போட்டுள்ளது.

உயர்ந்த அரிசி விலை
தற்போதைய நிலவரப்படி, அனைத்து ரக பொன்னி புழுங்கல் அரிசியும் கிலோவிற்கு 4 ரூபாயும், 26 கிலோ எடை கொண்ட சிப்பம் மூட்டைக்கு 100 ரூபாயும் உயர்ந்து ஆயிரத்து 900 வரை விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், பச்சை அரிசி கிலோவிற்கு 6 ரூபாயும், மூட்டைக்கு 150 ரூபாயும் அதிகரித்து ஆயிரத்து 350க்கும், ஸ்டீம் அரிசி கிலோவிற்கு 8 ரூபாயும், மூட்டைக்கு 200 வரை எகிறி ஆயிரத்து 400க்கு விற்பனையாகிறது. இட்லி அரிசி மட்டும் இப்போதைக்கு விலை மாற்றமின்றி விற்கப்பட்டாலும், இது எவ்வளவு நாளைக்கு தாங்கும் என்பதே மில்லியன் டாலர் கேள்வி.

அரிசிக்கு கடும் தட்டுப்பாடு
இந்த திடீர் விலை உயர்வு குறித்து பேசிய அரிசி வியாபாரிகள், தமிழக சந்தைக்கு தேவையான சன்னரக அரிசியானது ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்துதான் அதிகளவில் கொண்டு வரப்படுவதாகவும், கடந்த 2 ஆண்டுகளாக முறையான இருப்பு இல்லாத காரணத்தால், தற்போது சன்னரக அரிசிக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுதாக தெரிவிக்கின்றனர்.

அரிசி கிடைத்தால் போதும்...
போதிய பருவமழை இல்லாததால், விளைச்சல் பாதிக்கப்பட்டது ஒருபுறமிருக்க, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து வாடகை சிப்பம் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டதும் இந்த விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.

தமிழகத்தின் பெரும்பாலான உணவகங்கள், விடுதிகளில் சன்னரக அரிசிதான் சாப்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய தட்டுப்பாட்டால், வாடிக்கையாளர்களுக்கு தரமான சாப்பாடு வழங்க முடியாமல் ஹோட்டல் உரிமையாளர்கள் திணறி வருகின்றனர். விலை உயர்ந்தாலும் பரவாயில்லை, அரிசி கிடைத்தால் போதும் என்ற விளிம்புநிலைக்கே சிலர் தள்ளப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலையும்...
இதுகுறித்து, பேசிய வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, இது அரிசி தட்டுப்பாடல்ல, வறட்சியால் ஏற்பட்ட வரத்து குறைவு என்றும், தமிழக அரசும் தனியாரும் போட்டி போட்டு நெல்லை கொள்முதல் செய்து சேமித்து வைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

நாளொன்றுக்கு 20 கிலோ அரிசி கொள்முதல் செய்யும் தங்களை போன்ற சாலையோர வியாபாரிகள், தற்போது கிலோ 100 ரூபாய் என்ற உச்ச விலைக்கு அரிசியை வாங்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். அதேபோல், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கறுப்பு ஆடுகளின் மீது...
தமிழக சந்தை வெளி மாநிலங்களை சாந்திருக்கும் நிலையை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை உடனடியாக பெருக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாடு இருக்கிறது. அதற்கு, தமிழகத்திலேயே அதிக தேவையுள்ள சன்னரக நெல் சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு தேவையான சிறப்பு ஊக்க தொகையையும், நவீன தொழில்நுட்ப உதவிகளையும் போர்க்கால அடிப்படையில் அரசு உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அரிசி வரத்து குறைவை சாதகமாக்கிக்கொண்டு, செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி அரிசியை பதுக்கி வைக்கும் கறுப்பு ஆடுகளின் மீது உணவுப் பொருள் வழங்கல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved