Also Watch
Read this
தவெக அழைப்பு விடுத்துள்ள தோழமை கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என இடதுசாரிகள் அறிவித்துள்ளன. அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு தெரிவிப்பதாகவும், தவெகவுடன் கூட்டணியில் இல்லை என்றும் மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.

முதல்வருடன் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் விஜயுடன் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்கள் சண்முகம், வீரபாண்டியன் நேரில் சந்திப்பு நிகழ்த்தினர். காலி அரசுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தியதாக விளக்கம் அளித்தனர்.

தொழிலாளர்கள் மீது கவனம்
இ.கம்யூ. மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியதாவது;
முதல்வர் விஜய்யை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். உழைக்கும் மக்களின் கோரிக்கைகளில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும். சாலைப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்விடங்கள், பணிப் பாதுகாப்பு குறித்து அரசு ஆழ்ந்த சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினோம். அதேபோல விவசாயிகள், அரசு ஊழியர்கள் சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகள் கிடப்பில் இருக்கின்றன. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

ஆட்சியில் பங்கு பெறவில்லை
கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல்வர் விஜய்யின் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நாங்கள் ஆட்சியில் பங்கு பெறவில்லை. தோழமை கட்சியாக வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம். மக்கள் அதிகாரத்தை பாதுகாக்கவும், அது ஆளுநர் வசம் சென்றுவிடக் கூடாது என்கிற அரசியல் காரணங்களுக்காகவும் இருவரும் வெளியிலிருந்து பயணிக்கிறோம். ஒன்றிய அரசுடன் இருக்கும் நிர்வாக உடன்பாடு, இணக்கங்கள் வேறு, கொள்கை வேறு. மாநிலங்களின் உரிமையை பறிக்கிற ஒன்றிய அரசின் கடந்த கால அணுகுமுறையை இன்றைய அரசு உணர்ந்திருக்கும். அதிலிருந்து பாடங்களையும் பெற்றிருக்கும். அங்கு சமரசம் கூடாது.

தவெக அரசு உறுதி
ஒன்றிய அரசின் திட்டங்கள் நாட்டை சீரழிக்கிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் கார்ப்பரேட் நலனுக்கானது. அதைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. மாநில உரிமை, தொழிலாளர்களின் நலனில் தவெக அரசு உறுதியாக இருக்க வேண்டும்
இவ்வாறு வீரபாண்டியன் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved