Also Watch
Read this
By: Pari karthick

மதுரவாயல் அருகே பியூட்டி அகாடமியின் பூட்டை உடைத்து ரூ. 80 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டதாக அதன் பெண் உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.
சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் ஏகாம்பரம் எஸ்டேட்டில் உள்ள 'ஆவணி காம்ப்ளக்ஸ்' முதல் தளத்தை கடந்த 2024 மே மாதம் சமூகவலைதலத்தில் பிரபலமான பிரசாந்தி என்பவர் மாத வாடகை ரூ. 78,000-க்கு ஒப்பந்தம் செய்து எடுத்தார்.
அங்கு சுமார் ரூ. 40 லட்சம் முதலீட்டில் இன்டீரியர் வேலைகளைச் செய்து, கடந்த 2024 டிசம்பர் மாதம் 'ஷான்ஸ் மேக்கப் அகாடமி' என்ற பெயரில் அழகு கலை பயிற்சி நிலையத்தைத் தொடங்கினார்.
ஆனால், அகாடமி தொடங்கிய மூன்று மாதங்களிலேயே கட்டிட உரிமையாளர் கல்யாணராமன் கூடுதல் கட்டணம் கேட்டு, மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பைத் துண்டித்து நெருக்கடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து கடந்த ஜனவரி மாதம் பிரசாந்தி மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையே, கடந்த ஜனவரி 14-ஆம் தேதி பிரசாந்தியின் பூட்டை உடைத்துவிட்டு மாற்றுப் பூட்டைப் போட்ட கல்யாணராமன், உள்ளே இருந்த லேப்டாப், ஐபோன் மற்றும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ. 80 லட்சம் மதிப்புள்ள அழகு சாதனப் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளார்.
போலீசார் கட்டிட உரிமையாளருக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் மனமுடைந்த பிரசாந்தி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னரே போலீசார் விசாரணை நடத்தினர்.
தற்போது பூந்தமல்லி நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கல்யாணராமன் அந்த இடத்தை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். முதலீட்டையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் தனக்குத் தமிழக அரசு நீதியைப் பெற்றுத்தர வேண்டும் எனப் பிரசாந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved