Also Watch
Read this
By: Manigandan Raja

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட குண்டு பெரும்பேடு ஊராட்சியில் அமைந்துள்ள ராஜன் தாங்கள் ஏரி, அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், கால்நடைகளின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வரும் முக்கிய நீர்நிலையாக உள்ளது.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் மீன்பிடிக்கும் நோக்கில் டிராக்டரில் ராட்சத பம்ப்செட் அமைத்து மோட்டார் இயந்திரத்தின் மூலம் ஏரியில் உள்ள நீரை வேகமாக வெளியேற்றி வருவதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதன் காரணமாக ஏரியின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் குடிநீரின்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், வரவிருக்கும் மழைக்காலத்தில் ஏரி நிரம்பினாலும், கண்மாய் வழியாக விவசாய நிலங்களுக்கு நீர் செல்வதில் தாமதம் ஏற்பட்டு விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
பொதுமக்களின் பயன்பாட்டிற்கும், விவசாயிகளின் நலனிற்கும் உரிய ஏரியின் நீரை தனிப்பட்ட தேவைக்காக சட்டத்துக்கு புறம்பாக உறிஞ்சி வெளியேற்றுவோர் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
"விவசாயத்தின் உயிர்நாடியான ஏரியை காப்பாற்றுங்கள்; விவசாயிகளின் எதிர்காலத்தையும், கால்நடைகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திடுங்கள்" என்பதே அப்பகுதி மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved