Also Watch
Read this
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர்-பொத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள சிக்னலை தனது சட்டையால் மூடிமறைத்து, நேக்காக ரயிலை நிறுத்தி, ஒரு பெண் பயணியிடம் செயினை பறித்துவிட்டு தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரை 24 மணிநேரத்தில் போலீசார் கைது செய்தனர். பகலில் ஆட்டோ டிரைவராகவும், இரவில் ரயிலை நிறுத்தி வழிப்பறி கொள்ளையனாகவும் வலம்வரும் இரட்டைவேட குற்றவாளி, ஏற்கெனவே குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்த நிலையில், தற்போது மீண்டும் காக்கி சட்டையால் சிக்னலின் பச்சை விளக்கை மறைத்து சிறைக்கம்பிகளுக்குள் சென்றுள்ளார்.

திடீர் சிக்னல் கோளாறு...
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர்-பொத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த 15ஆம் தேதி இரவு 10 மணியளவில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டு, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. அதேநேரம், மற்றொரு விரைவு ரயிலும் மெதுவாக இயக்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர் கழிவறை செல்வதற்காக தனது இருக்கையைவிட்டு எழுந்து வந்துள்ளார்.

அப்போது, ரயில் பெட்டியின் வாசல் வழியாக திடீரென உள்ளே புகுந்த ஒரு மர்மநபர் அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்கச்செயினை படக்கென பறித்துள்ளார். அந்தநேரத்தில் சுதாரித்துக்கொண்ட பெண், தனது செயினை கெட்டியாக பிடித்தார். ஆனாலும் பாதி செயின் அந்த மர்மநபரின் கையிலும், மீதி செயின் அந்த பெண்ணின் கையிலும் இருந்துள்ளது. அறுந்த பாதிச்செயினுடன் மர்மநபர் தப்பி ஓட, அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். அதன்பிறகு ரயிலில் இருந்த பயணிகள் அளித்த தகவலின்படி, அங்கு வந்த தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ரயில்வே போலீசார் விசாரணை
இதனிடையே, சிக்னலில் எந்த கோளாறும் இல்லையே? பிறகு ஏன் ரயில் நிறுத்தப்பட்டது? என குழம்பிய போலீசார் தீவிர ஆய்வில் இறங்கினர். அப்போதுதான், ரயில் சிக்னல்களில் இருந்த பச்சை விளக்கை துணி வைத்து மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும், எதிரெதிர் வழித்தடங்களில் இருந்த இரண்டு சிக்னல்களின் பச்சை விளக்கு துணி வைத்து மறைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சிக்னலை துணியால் கட்டி மறைத்த அந்த திருட்டு நபர் யார்? என்பதை கண்டுபிடிப்பதற்காக, சம்பவம் நடந்த வழித்தடங்களில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் போலீசார் அலசி ஆராய்ந்தனர். அதில், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 35 வயதான குமரேசன் என்பவர்தான் சிக்னலில் துணிகளை கட்டியது தெரியவந்தது.

பகலில் ஆட்டோ ஓட்டுநர்... இரவில்...
பகலில் அம்பி போன்று பவ்வியமாக ஆட்டோ ஓட்டும் குமரேசன், இரவில் அந்நியன்போன்று ஆளையே அசால்டாக உருமாற்றி, திருட்டு வேலையில் ஈடுபடுவார் என்பது தெரியவந்தது. குறிப்பாக ரயில் பயணிகளை குறிவைத்து அவர்களது உடைமைகள், நகைகள், செல்போன்களை வழிப்பறி செய்வதுதான் குமரேசனின் பாணி. அதிலும், பேசின் பிரிட்ஜ், கொருக்குப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்கள் மெதுவாக செல்லும்போது பயணிகளிடமிருந்து உடைமைகளை வழிப்பறி செய்வதும், சென்னை புறநகர் பகுதிகளில் ரயில்வே சிக்னல்களில் துணியை வைத்து மறைத்து, ரயில்களின் இயக்கத்தை நிறுத்தி அதன்பிறகு வழிப்பறியில் ஈடுபடுவது தான் குமரேசனுக்கு நைட்ஷிப்ட்.

6 வழிப்பறி வழக்குகள்...
இவர் மீது சென்ட்ரல், கொருக்குப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட ரயில்வே காவல் நிலையங்களில் 6 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார். ஆனாலும் ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதுபோல் சிறைப் பறவையாகவே இருந்தாலும் இரவுநேர திருட்டுப்பணியை குமரேசனால் நிறுத்த முடியவில்லை. அதனால், வழக்கம்போல தனது காக்கி சட்டையை கழற்றி ரயில்வே சிக்னலின் பச்சை விளக்கை மறைத்து, ஒரு ரயிலை நிறுத்தி பெண்ணிடம் செயினை அறுத்துள்ளார்.

24 மணி நேரத்தில்...
ஆனால், சம்பவம் நடந்த 24 மணிநேரத்திலேயே இரட்டைவேட குமரேசனை மூன்றாவது கண் சிக்க வைத்தது. அவரிடமிருந்து, அந்த பெண்ணின் அறுந்த பாதி செயினை மீட்ட போலீசார், வழக்கம்போல அவரை சிறைக்குள் அடைத்தனர்.
எச்சரிக்கையாக இருங்கள்...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved