Also Watch
Read this
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்தும், அத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியும் முதலமைச்சர் ஜோசப் விஜய் முன் மொழிந்த தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

தமிழக சட்டப்பேரவையில்...
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணையை கட்டுவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசு துடிதுடித்து வருகிறது. ஏற்கெனவே உரிய நீரை திறக்காமல் உபரி நீரை திறந்துவிட்டு கணக்கு காட்டும் கர்நாடக அரசு, ஆற்றின் குறுக்கே அணையை கட்டி தமிழ்நாட்டை தண்ணீருக்கு கையேந்த வைப்பதா? என்ற கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன. நீண்ட காலமாக தொடர்ந்து வரும் இப்பிரச்னைக்கு தீர்வு காண தமிழ்நாடு அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் தவெக தலைமையில் ஆட்சியமைந்ததற்கு பின்பு கூடிய முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே மேகதாது விவகாரம் தொடர்பாக தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர்
சட்டமன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்காக நாம் அனைவரும் ஓரணியில் நின்று மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவை கண்டிக்கும் தீர்மானத்தை ஆதரிக்குமாறு கோரினார்.
காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமலும், மத்திய அரசின் அனுமதியையும் சம்மந்தப்பட்ட மாநிலங்களின் இசைவையும் பெறாமல் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகத்தை கண்டிப்பதாகவும், மத்திய அரசு மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்துவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ், விசிக ஆதரவு
அரசின் தீர்மானத்தை வரவேற்ற காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவரும், அமைச்சருமான ராஜேஷ்குமார், காவிரி உரிமையை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி எப்போதும் உறுதியோடு நிற்கும் என்றார்.
சமூக நீதித்துறை அமைச்சரான வன்னியரசு, அரசின் தீர்மானத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பதாக குறிப்பிட்டார்.

அனைத்துக் கட்சிகளும்...
அரசியல் அணுகுமுறைகள், கருத்து வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஓரணியில் நிற்பதாக சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தீர்மானத்தை வரவேற்றார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் பங்கெடுத்துள்ள காங்கிரஸ் கட்சி கர்நாடக காங்கிரஸ் அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டின் எதிர்ப்புகளையும் போராட்டங்களை மீறியும் மேகதாது அணை கட்டுவோம் என அடம்பிடிக்கும் கர்நாடக அரசின் செயலை ஏற்கமுடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. செல்லசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
கூட்டணிக் கட்சி என்பதால் மெத்தனப்போக்குடன் தவெக அரசு இருந்துவிடக்கூடாது என்றும், கூட்டணி தர்மத்தை விட தமிழ்நாட்டின் தர்மமே முக்கியம் என்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்.எல்.ஏ நித்தியானந்தம் வலியுறுத்தினார்.
அரசின் தீர்மானத்தை ஆதரித்து பேசிய மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகம் தவறான திசையில் செல்வதாகவும்,கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மதிமுக, தேமுதிக, பாமக ஆதரவு
தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைத்து அனைத்து நீர் நிலைகளையும் தூர் வாரி நம் மாநிலத்தை நீர்மிகை மாநிலமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்த பிரேமலதா, அரசின் தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறினார்.
காவிரி ஆற்றை தனக்கு மட்டுமே சொந்தம் என்பதை போல் கர்நாடக அரசு நடந்து கொண்டிருப்பதாக பேசிய மதிமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன், திமுக அதிமுக ஆகிய கட்சிகளை போல் தவெக அரசும் காவிரி உரிமைகளை பாதுகாத்திட வேண்டும் என்றார்.
மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீர் கூட வராது என்றுரைத்த பாமக எம்.எல்.ஏ சவுமியா அன்புமணி, டெல்டா பாலைவனமாகி குடிநீர் தட்டுப்பாடு அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்தார்.

கர்நாடக அரசுக்கு கண்டனம்
மேகதாது அணை திட்டத்துக்கு எதிரான தீர்மானத்தின் மீது உரையாற்றிய அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இரு மாநில நல்லுறவை பாதிக்கும் வகையில் செயல்படும் கர்நாடக அரசுக்கு கண்டனத்தை பதிவு செய்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை
நிறைவாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மேகதாது பிரச்னை தொடர்பாக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக உடனிருக்கும் என்றும், அரசின் தீர்மானத்தை கடிதமாக அனுப்புவதை தவிர்த்து அனைத்து எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் அடங்கிய குழுவுடன் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றும் பேசினார். அதோடு நதிநீர் பங்கீடு தொடர்பாக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற வலியுறுத்தலை தீர்மானத்தில் சேர்க்க கோரினார்.

நன்றி தெரிவித்த முதல்வர் விஜய்
எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை ஏற்று நடுவர் மன்றம் தொடர்பான வலியுறுத்தலை தீர்மானத்தில் சேர்ப்பதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார்,. அதோடு தீர்மானத்தை ஆதரித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். தலைவர்களின் உரையை அடுத்து மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானம் சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved