Also Watch
Read this
நாம் குரங்குகளில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தால், ஏன் இன்னும் குரங்குகள் நீடித்திருக்கின்றன? இப்போது ஏன் குரங்குகள் பரிணாம வளர்ச்சி அடைவதில்லை? பரிணாம வளர்ச்சிக் கொள்கையை சந்தேகிப்பவர்கள் வழக்கமாக எழுப்பும் கேள்வி இது. இதற்கு நவீன உயிரியல் சொல்லும் விடை உங்களுக்கு அதிர்ச்சியை தரக்கூடும். பூமியில் வாழும் எந்த குரங்கில் இருந்தும் மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடையவில்லை என்பதுதான் அந்த விடை.

"பரிணாம வளர்ச்சிக் கொள்கை"
பலருக்கும், பரிணாம வளர்ச்சி பற்றிய தவறான புரிதலே உள்ளது. உதாரணமாக, நாம் "பரிணாம வளர்ச்சிக் கொள்கை" (the theory of evolution) என்று சொல்லப் பழகிவிட்டோம். உண்மையில் பரிணாம வளர்ச்சி என்ற பதாகையின் கீழ் ஒரு கொள்கை அல்ல, பல கொள்கைகள் உள்ளன. 1809ல் ஜீன்-பாப்டிஸ்ட் லாமார்க் (Jean-Baptiste Lamarck) என்பவரால் முன்மொழியப்பட்ட லாமார்க்கிசம் (Lamarckism) என்ற கொள்கை, உயிரினங்கள் தங்கள் வாழ்நாளில் பண்புகளைப் பெற்று, அந்த மாற்றங்களைத் தங்கள் சந்ததிகளுக்குக் கடத்துகின்றன என்று கூறியது. இது பரிணாம சிந்தனைக்கு வழிவகுத்த போதிலும், இதன் மையக் கருத்து பிற்காலத்தில் தவறு என நிரூபிக்கப்பட்டது. தத்தமது சூழலுக்கு மிகவும் பொருத்தமான பண்புகளைக் கொண்ட உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் அதிக வாய்ப்புள்ளது என்று சார்லஸ் டார்வினும் ஆல்ஃபிரட் ரஸ்ஸல் வாலஸும் (Alfred Russel Wallace) முன்மொழிந்தனர். இயற்கை தேர்வு என்ற அடிப்படையில் இது டார்வினிசம் என அழைக்கப்படுகிறது.

பரிணாம வளர்ச்சி...
ஹ்யூகோ டி வ்ரீஸ் (Hugo de Vries) என்பவரால் முன்மொழியப்பட்ட பரிணாம வளர்ச்சிக் கொள்கை mutation theory of evolution எனப்படுகிறது. புதிய உயிர் இனங்களும் பண்புகளும் படிப்படியான மாற்றங்களால் அல்லாமல், திடீர் மற்றும் பெரிய அளவிலான மரபணுச் சடுதி மாற்றங்களால் Sudden, large-scale genetic mutations உருவாகின்றன என்று இந்த கொள்கை கூறியது. நவீன உயிரியலில் தற்போது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மேலோங்கிய பரிணாம வளர்ச்சிக் கொள்கை என்பது நியோ-டார்வினிசம் எனப்படுகிறது. இதை நவீன ஒருங்கிணைப்புக் கொள்கை என்று குறிப்பிடுகின்றனர். இது டார்வினின் இயற்கை தேர்வு கோட்பாட்டை கிரிகோர் மெண்டலின் மரபியல் விதிகளுடன் இணைத்து பரிணாமத்தை விளக்குகிறது.

சூழலுக்கு ஏற்ப...
அதாவது, தரவுகளுடன் (data) மிகச்சரியாகப் பொருந்தும் கொள்கைகளே இன்றும் நிலைத்திருக்கின்றன. அவற்றில் நமக்கு நன்கு தெரிந்த ஒன்று டார்வினின் 'இயற்கைத் தேர்வு' (natural selection) கோட்பாடு. ஒரு சூழலுக்கு மிகச் சரியாகப் பொருந்திக் கொள்ளும் அல்லது தங்களை பொருத்திக் கொள்ளும் உயிரினங்கள் உயிர் வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் முடிகிறது; அதே சமயம், சூழலுக்குப் பொருந்தாதவை மெல்ல மெல்ல அழிந்துபோகின்றன.

மனித உயிரியல் பண்பு
பரிணாம வளர்ச்சி என்பது மிகவும் எளிமையானது, ஏனெனில் அது ஒரு கண்கூடான உண்மை. theory of gravity என்று சொல்லப்படும் ஈர்ப்புக் கொள்கை எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்குப் பரிணாம வளர்ச்சிக் கொள்கையும் ஒரு உண்மை. அதை மிக எளிதாக நிரூபிக்கவும் முடியும்.
நம்மிடம் உள்ள உயிரியல் பண்புகள் அனைத்தும் மனிதர்களிடம் திடீரென தோன்றியவை அல்ல. அவை வெவ்வேறு உயிரினங்களிடம் இருந்து அந்தந்த உயிரினங்களின் அனைத்து வழித்தோன்றல்களுக்கும் கடத்தப்பட்டன; அதேபோல நமக்கும் கடத்தப்பட்டன. தொப்புளை எடுத்துக் கொள்ளுங்கள் - இது நமக்கு மட்டுமல்ல நஞ்சுக்கொடி கொண்ட பாலூட்டிகளுக்குப் (placental mammals) பொதுவானது. இதேபோல முதுகெலும்பு (backbone) எனப்படுவது, நமக்கு மட்டுமல்ல மற்ற முதுகெலும்புள்ள உயிரினங்களுக்கும் (vertebrates) பொதுவானது. இதேபோல டிஎன்ஏ (DNA) என்பது நமக்கு மட்டுமல்ல பூமியில் உள்ள மற்ற அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது.

குரங்கில் இருந்து வந்தவன்...
தாவரங்களும் பாக்டீரியாக்களும் ஆதி உயிரினங்கள் என்றும், மீன்களிலிருந்து நீரிலும் நிலத்திலும் வாழும் இருவாழ்விகள் (amphibians) தோன்றி, அதன்பின் ஊர்வன (reptiles) மற்றும் பாலூட்டிகள் (mammals) வந்தன என்றும், இறுதியில் பரிணாம வளர்ச்சியின் உச்சமாக ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் 'நாம்' உருவானதாக கற்றுக் கொள்கிறோம். ஆனால், உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி ஒரு நேர்கோட்டில் அமைவதில்லை; அது நம்முடன் முடிந்துவிடுவதும் இல்லை. இருப்பினும், பரிணாம வளர்ச்சி எப்போதும் அப்படித்தான் சித்தரிக்கப்படுகிறது. குரங்கு, சிம்பன்சி, அழிந்துபோன மனித இனங்கள் என அனைத்தும் ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் நம்மை நோக்கி ஒரு சீரான முன்னேற்றப் பாதையில் பயணிப்பதாகக் காட்டப்படுகிறது. இதில் இருந்துதான் எல்லாக் கோளாறும் தொடங்குகிறது. அதாவது, தொடக்கத்தில் நாம் உயிரியலைக் கற்றுக்கொள்ளும் விதத்தால் குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்று புரிந்து கொள்கிறோம்.

ஒற்றை செல் உயிரினம்
எனவே, "நாம் எங்கிருந்து வந்தோம்?" என்ற அந்தப் பழமையான கேள்வியை, பரிணாம வளர்ச்சியை சரியாகப் புரிந்து கொள்ளாமல் நம்மால் கேட்க முடியாது. இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாதது, பூமியில் உள்ள பிற உயிரினங்களை நாம் எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்தும், இனம் மற்றும் பாலினம் அடிப்படையில் ஒருவரையொருவர் எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்தும் பல சிக்கலான மற்றும் தவறான கண்ணோட்டங்களை உருவாக்கி உள்ளது. எனவே, நாம் 400 கோடி ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செல்வோம். நாம் அனைவரும் தோன்றியதற்கு மூலம் ஒற்றை-செல் உயிரினம். தொடக்கத்தில் இது மற்ற ஒற்றை-செல் உயிரினங்களின் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்தது; ஆனால் அவை இன்றும் தொடர்ந்து பரிணமித்து வருகின்றன.

முதுகெலும்பும் மீன்களும்
இந்தக் குழுவில் பெரும்பகுதியை உருவாக்கும் ஆர்க்கியா (Archaea) மற்றும் பாக்டீரியா (Bacteria) ஆகியவை தான் பூமியில் மிகவும் வெற்றிகரமான உயிரினங்கள். நாம் அழிந்தாலும் நிச்சயமாக அவை இங்கு தொடர்ந்து இருக்கும். சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பல-செல் உயிரினங்கள் (multicellularity) தோன்றின. இவற்றில் பூஞ்சைகள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் அடங்கும். முதுகெலும்பை வளர்த்துக்கொண்ட முதல் விலங்குகள் மீன்களே.

முதனிலை உயிரிகள்...
மீன்களின் ஒரு குறிப்பிட்ட மரபுவழித் தோன்றல்கள் நிலத்திற்கு வந்து, பாலூட்டிகள் (mammals) மற்றும் ஊர்வன (reptiles) போன்ற உயிரினங்களின் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்தன. சில ஊர்வன, பறவைகளாக மாறின; சில பாலூட்டிகள் பிரைமேட்டுகளாக (primates) அதாவது முதனிலை உயிரிகள் எனப்படும் உயர்நிலைப் பாலூட்டி இனம் ஆக மாறின; சில முதனிலை உயிரிகள் வால் கொண்ட குரங்குகளாக மாறின; மற்றவை மனித இனத்தின் பல்வேறு வகைகள் உட்பட great apes எனப்படும் 'வாலில்லாப் பெருங் குரங்குகள்' வகையாக மாறின. அதாவது குரங்குகள் என்பவை பிரைமேட்ஸ் எனப்படும் முதனிலை உயிரிகள் வகையை சேர்ந்தவை. ஆனால், எல்லா முதனிலை உயிரிகளும் குரங்குகள் அல்ல.

10 லட்சம் ஆண்டுகள் மட்டுமே...
அதாவது, நாம் குரங்குகளிலிருந்து பரிணமிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்; ஆனால் அவற்றுடன் நாம் ஒரு பொதுவான மூதாதையரைப் பகிர்ந்து கொள்கிறோம். இதே பரிணாம காலகட்டத்தில், ஏராளமான பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் எண்ணற்ற மீன்கள் என நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களும் தொடர்ந்து பரிணமித்து வந்தன. உயிரினங்கள் பரிணமிக்கும் அதே வேளையில், அவை முற்றாக அழிந்துபோகவும் செய்கின்றன. பெரும்பாலான உயிரின வகைகள் சில 10 லட்சம் ஆண்டுகள் மட்டுமே நிலைத்திருக்கின்றன. இன்று நம்மைச் சுற்றி நாம் காணும் பூமியின் பெரும்பாலான உயிரினங்கள், ஏறக்குறைய நம்முடைய இனத்தின் அதே காலத்தைச் சேர்ந்தவை தான்.

நீண்ட செயல்முறை விளைச்சல்
ஆகவே, "பாக்டீரியாக்களும் தாவரங்களும் ஆதிநிலை உயிரினங்கள்; அவற்றோடு ஒப்பிடும்போது பரிணாம வளர்ச்சியில் மிகப் பிந்தைய கட்டத்தை சேர்ந்த நாம் ஏதோ ஒரு வகையில் சிறப்பானவர்கள்" என்று நினைப்பது ஆணவம் அல்லது தன்னை மையப்படுத்திக் கொள்ளும் போக்கு ஆகும். இந்தப் பூமியை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் எண்பது லட்சம் உயிரினங்கள் அனைத்தும், 400 கோடி ஆண்டுகாலப் பரிணாம வளர்ச்சியின் விளைவாக உருவானவை. அவை அனைத்தும் பரிணாம வளர்ச்சி என்ற நீண்ட செயல்முறையின் விளைச்சல்களே.

மனிதர்களும் குரங்குகளும்
பரிணாமம் என்பது ஒரு நேர்க்கோடு அல்ல, அது கிளைவிடும் ஒரு குடும்ப மரம் போன்றது. அந்த மரத்தின் கிளைகள் வெவ்வேறு சூழல்களில் உயிர்வாழ வெவ்வேறு வகையில் தங்களைத் தகவமைத்துக் கொண்டன. இதனால்தான் மனிதர்களும் நவீன குரங்குகளும் இன்றும் நிலைத்திருக்கின்றன. மனிதர்கள் நவீன குரங்குகளிலிருந்து பரிணாமம் அடையவில்லை. மாறாக, மனிதர்களும் நவீன குரங்குகளும் ஒரு தொன்மையான, பொதுவான மூதாதையரைப் பகிர்ந்து கொள்கின்றன. லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, தற்போது அழிந்து போன ஒரு தொன்மையான பிரைமேட் இனம் பூமியில் சுற்றித் திரிந்தது. காலப்போக்கில், இந்த மூதாதை இனக்குழு வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்தது. சில குழுக்கள் மரங்களிலேயே தங்கி இன்றைய குரங்குகளாகப் பரிணமித்தன, மற்றவை காலப்போக்கில் தரையில் வாழப் பழகி, நிமிர்ந்து நடந்து, தொடக்ககால ஹோமினிட்களாகவும் இறுதியில் ஹோமோ சேபியன்ஸாகவும் பரிணமித்தன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved