Also Watch
Read this
மின்வெட்டு பிரச்சனை பற்றி எகத்தாளமாக பேசி, ட்ரோலில் சிக்கிய நாட்டாமை பட பஞ்சாயத்து காட்சி நாயகன் மகேந்திரன், தாம் அந்த அர்த்தத்தில் சொல்லவே இல்லையென அந்தர் பல்டியடித்து, முகம் நிறைய சோக ரேகையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். மக்களோடு மக்களாக கஷ்டப்பட தயார் என்ற கோணத்தில் தான் பேசியதாகவும், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ள மகேந்திரன், மக்களை பார்த்து ஏளனமாக சிரிப்பவன் என்ற பட்டத்தை கொடுத்து தனக்கு கட்டம் கட்டி விடாதீர்கள் என கையெடுத்து கும்பிட்டு கெஞ்சி உள்ளார்.

அன்றும் இன்றும்
சோலார் சிஸ்டம் எதற்கு உள்ளது, அதில் இருந்து கரண்ட் எடுக்க தமக்கு தெரியும் என தெனாவெட்டு பாடி லாங்குவேஜூடன் பேசிய மாஸ்டர் மகேந்திரன், அடுத்த 3 நாட்களிலேயே பாடி லாங்குவேஜை மாற்றிக் கொண்டு, "அய்யோ சாமி அப்படி சொல்லவே இல்லை" என அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு கையெடுத்து கும்பிட்டு கெஞ்சி உள்ளார். இந்த 2 காட்சிகளையும் பார்த்த மக்கள், துடுக்குத்தனமாக ஏன் பேச வேண்டும்? பிறகு ஏன் கெஞ்ச வேண்டும்? என கூறி வருகின்றனர்.

வார்த்தைகளை விட்டு...
தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு பிரச்சனை தொடர்பாக சமூகவலைதள பேட்டி ஒன்றில் பேசிய நாட்டாமை பட பஞ்சாயத்து சீன் குட்டி ஹீரோ மாஸ்டர் மகேந்திரன், சோலார் சிஸ்டம் என்ற ஒன்றை கண்டுபிடித்து உள்ளார்களே, அதை யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? கரண்ட் போனால் முதலமைச்சரை நோக்கியா கேள்வி கேட்க முடியும்? என வரிந்து கட்டி சப்போர்ட் செய்கிறேன் என்ற பெயரில் வார்த்தையைவிட்டு வாங்கி கட்டிக் கொண்டார்.

இணையவாசிகள் ட்ரோல்...
சப்போர்ட் செய்ததையும், சோலார் பேனல் என்பதற்குப் பதிலாக சோலார் சிஸ்டம் என்று பிழையுடன் சொன்னதையும் கூட ஏற்றுக் கொள்ளலாம், ஆனால், நக்கலாக சிரித்தபடி பேசிய அந்த பாடி லாங்குவேஜ் தான் மக்களையும் இணையவாசிகளையும் TRIGGER செய்துள்ளது. மாஸ்டர் மகேந்திரனின் இந்த திமிர் பேச்சை, இணையவாசிகள் ட்ரோல் செய்து வறுத்தெடுத்தனர். அந்த வறுவலில் வாடிய மகேந்திரன், மக்கள் கையில் சிக்கினால் வெளுத்து எடுத்து விடுவார்களோ? கொத்துக்கறி ஆக்கி விடுவார்களோ? மாஸ்க் அணிந்து கொண்டு தான் வெளியே சுற்ற வேண்டுமோ? பேசாமல் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாமோ? என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டார்.

விளக்க வீடியோ வெளியீடு
அதனால், கண்கள் நிறைய கவலைகளுடனும், முகம் நிறைய வருத்தங்களுடனும் மீண்டும் ஒரு விளக்க வீடியோ வெளியிட்டு உள்ளார் மாஸ்டர் மகேந்திரன். சினிமாவில்கூட கிளைமாக்ஸ் காட்சியில் தான் வில்லன் திருந்தி சுபம் என்ற வார்த்தையுடன் திரைப்படம் முடியும். ஆனால், அவசரத்திற்கு 5 நிமிடத்தில் ரெடி செய்யப்படும் நூடுல்ஸ் போல வெறும் மூன்றே நாளில் படக்கென மனம் வருந்திய மாஸ்டர் மகேந்திரன் தன் தரப்பு விளக்கத்தை கூறி உள்ளார்.

புத்திசாலி மாணவன் இல்லை
மக்களின் உணர்வுகளை வைத்து அரசியல் செய்பவர்கள் மற்றும் எதற்கெடுத்தாலும் கடைசி வரை கேள்வி மட்டுமே கேட்டுக் கொண்டிருப்பவர்களை நோக்கி தான் ”நீங்கள் கேள்வி கேட்டால் கரண்ட் வந்துவிடுமா?’‘ என கேட்டதாக கூறிய மகேந்திரன், 6 மாத காலம் அவகாசம் கொடுங்கள், கேள்வியே கேட்காதீர்கள் எனக் கூறியதுகூட முதலமைச்சர் விஜய் கேட்ட அதே அவகாசத்தை தான் என்றும், முதலமைச்சர் விஜய் மீது இருக்கும் நம்பிக்கை மற்றும் அன்பின் காரணமாகவே அப்படி கேட்டதாகவும் அந்தர் பல்டி அடித்தார். அதேபோல், நான் ஒன்றும் பெரிய புத்திசாலி மாணவன் இல்லை என கூறிய மகேந்திரன், சோலார் சிஸ்டம் என கூறியது வார்த்தைப் பிழை தான், அதற்குப் பதிலாக சோலார் எனர்ஜி, சோலார் பவர் அல்லது சோலார் பேனல் என்று நான் சொல்லியிருக்க வேண்டும் என விளக்கமளித்தார்.

தவறான புரிதல்...
அடுத்து, கேரளத்தின் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சோலார் எனர்ஜியை குறிப்பிட்ட மாஸ்டர் மகேந்திரன், 2011-லேயே அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அதனை கொண்டு வந்ததாகவும், அதனை நாம் பின்பற்றவில்லை என்ற ஆதங்கத்துடன் தன் வாய்க்கு வந்தபடி கொட்டி விட்டதாகவும் பரிதாபமாக பேசினார். தன் வீட்டிலும் கரண்ட் கட் ஆனாலும் பரவாயில்லை என்ற அர்த்தத்தில் தான் தன் வீட்டில் இருந்து வேண்டுமானால் கரண்டை எடுத்துக் கொள்ளுங்கள், மக்களோடு மக்களாக கஷ்டப்பட தாம் தயார் என்று கூறினேனே தவிர, மக்களை பார்த்து சிரிப்பவன் அல்ல எனவும் நான் பேசிய அத்தனையுமே தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், கண்ணீர் வடிக்காத குறையாக பேசினார்.

மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்
அதேபோல், தான் திமிர் பிடித்தவன் அல்ல, இயக்குநர் மணிரத்னம் முன்பு கால்மேல் கால் போட்டு அமரவில்லை, 2 ஆண்டுகளுக்கு முன்பு பரவிய அவதூறு வீடியோவை தோண்டி எடுத்து பரப்புவது நியாயமா? மக்களை ஏளனமாக பேசுபவன் என்ற பட்டத்தை எல்லாம் கொடுத்து தன்னை கட்டம் கட்டாதீர்கள், தன் பேச்சு யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், என் மக்களிடம் மன்னிப்பு கேட்பதில் எனக்கு என்ன கௌரவம்? என டச்சிங்காக பேசினார்.

2 வீடியோக்களையும்...
ட்ரோலுக்கு முன் ட்ரோலுக்கு பின், என மகேந்திரனின் 2 வீடியோக்களையும் ஒரே நேரத்தில் பிளே செய்து பார்க்கும் மக்கள், 360 டிகிரி கோணத்தில் பார்த்தாலும் தவறாக புரிந்து கொள்ளும்படி இல்லையே? ஒருவேளை நம் கண்ணுக்குதான் மகேந்திரனின் உடல் பாவனையில் திமிர் தெரிகிறதா? அல்லது நம் காதுக்கு தான் அவரது பேச்சில் தெனாவெட்டு தெரிகிறதா? என குழம்பிப் போய் உள்ளார்களாம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved