Also Watch
Read this
பாஜகவில் இருந்து விலகி, இனி க்ளீன் அரசியல் எனக்கூறி We The Leaders என்ற இயக்கத்தை ஆரம்பித்த அண்ணாமலை, அவரே எதிர்பார்க்காத அளவிற்கு இரண்டே வாரங்களில் மளமளவென சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை பார்த்து வாயடைத்து போனார். அதன் தொடர்ச்சியாக தான் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்து Home tour போன்று நேரலையில் பேசிய அண்ணாமலை, 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தபிறகே அடுத்த நகர்வு என சஸ்பென்ஸ் வைத்துள்ள நிலையில், அந்த அடுத்த நகர்வு உள்ளாட்சி தேர்தலில் போட்டி எனவும், அந்த ரிசல்ட்டை வைத்து மக்களவை தேர்தலில் அண்ணாமலையே போட்டி எனவும் அவரது நெருங்கிய வட்டாரம் தரப்பில் கூறப்படுகிறது.

அண்ணாமலை வருகை
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து வெளியேறி, எந்தவித ஆர்ப்பாட்டமோ, ஆரவாரமோ இல்லாமல் கடந்த ஜூன் 5ஆம் தேதி We the leaders என்ற அமைப்பை சமூக வலைதள பக்கம் வாயிலாக அறிவித்தார்.

அப்போது, தேமுதிகவில் இன்டெர்ன்ஷிப்பாக பணியாற்றியது, ரஜினிகாந்த் அரசியலுக்கு அழைத்தது, அதற்கு மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தது, கடந்த 18 மாதகாலமாக கட்சிக்குள் தனக்கு நடந்த பிரச்சினைகளை கத்தி கூச்சல் போடாமல், தலைவர்களிடம் கூறியது, அப்படி இருந்தும் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்காதது, அதன்பிறகு தேர்தல் முடியும்வரை களத்தில் பணியாற்றி அரசியல் தர்மத்தோடு வெளியேறியது என அனைத்தையும் விலாவாரியாக விளக்கினார்.

இரண்டே வாரத்தில்...
அதோடு, We the leaders இயக்கத்தில் இணைவது எப்படி? அந்த இயக்கத்தின் நோக்கம் என்ன? அதன் மூலம் உருவாக்கப்படும் அரசியல் பாதை எப்படி இருக்கும்? என்பதையும் கூறினார். இவரது இந்த வீடியோ வெளியான இரண்டே வாரத்தில் www.wetheleader.org என்ற இணையதளம் வாயிலாக, அந்த இயக்கத்தில் 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மளமளவென இணைந்தனர்.
அடுத்து அடுத்து...
இப்படி ஒரு வேகம், அண்ணாமலையே எதிர்பார்க்காத ஒன்றுதான். அதனால், தன் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து பக்குவமாக எடுத்து வைக்கும் அவர் தனது அமைப்பு விரைவில் கட்சியாக மாறும் என அறிவித்தார். ஆனால், செய்தியாளர் சந்திப்புக்கு தற்போதுவரை க்ரீன் சிக்னல் கொடுக்கவே இல்லை. அதனால், அண்ணாமலையின் செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது? We the leader இயக்கம் எப்போது அரசியல் கட்சியாக மாறப்போகிறது?

உள்ளாட்சி தேர்தலில் இந்த அமைப்பு களம் காணுமா? என பல்வேறு கேள்விகள் எழ ஆரம்பித்தன. இதற்கு எல்லாம் பதில் சொல்லும்வகையில் சுமார் ஒரு மணிநேரம் நேரலையில் இணைந்த அண்ணாமலை, பல்வேறு சூசக பதிலையும் பகிர்ந்து கொண்டார். சுத்தமான அறை, அருகில் அழகுக்கு பூ ஜாடி, ஜன்னலில் பளிச்சென்ற திரைச்சீலை என்ற வழக்கமான நேரலை டெம்லேட்டையே மாற்றி தான் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்து நேரலையில் வந்தார் அண்ணாமலை.

ஹோம் டூரில் அரசியல் எதிர்காலம்...
அப்படியே வாங்க, இதுதான் விவசாய பொருட்களை காயவைக்கும் களம். இந்த களம் தான் ஒரு காலத்தில் தனது படுக்கையறை, இங்குதான் ஆட்டுப்பட்டி உள்ளது, மாட்டுக்கொட்டகை உள்ளது, தனது சைக்கிளை இங்குதான் நிறுத்துவேன், இங்கு அமர்ந்து தான் வீட்டுப்பாடம் எழுதுவேன், கயிற்றுக் கட்டில் தான் பேரானந்தம், ஆடு மாடு சத்தம்தான் சங்கீதம், முருங்கையில்தான் தங்கள் வீட்டுக்கு வருமானமே, ஆடு-மாடுகள் உயிரிழந்தால்கூட குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் உயிரிழந்தது போன்று சொந்தபந்தங்கள் துக்கம் விசாரிப்பார்கள், மொத்தத்தில் இந்த விவசாய நிலம் தனக்கு ரொம்ப ஸ்பெஷல் என யூடியூப் சேனலில் வலம் வரும் Home tour வீடியோக்கள் போன்று சிலாகித்து பேசினார் அண்ணாமலை. அது பார்க்க Home tour வீடியோபோன்று இருந்தாலும், அவைகளை எல்லாம் ஒப்பிட்டு அவர் பேசிய கருத்துக்கள் ஒவ்வொன்றும் அரசியல் எதிர்காலம் பற்றியதாகவே இருந்தது.

அடுத்த கட்ட நடவடிக்கை
We the leaders இயக்கத்தில் இணைந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை, ஜூலை மாதம் முதல் செயல்பாடுகள் அதிக அளவில் இருக்கும் எனவும், 50 லட்சம் பேர் இணைந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் எனவும் கூறினார். அந்த அடுத்தகட்ட நடவடிக்கைதான் அரசியல் கட்சியா? அதனைதான் சூசகமாக சொல்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு, வரும் உள்ளாட்சி தேர்தலில் நமது அமைப்பின் சார்பில் களம் காண பலரும் ஆர்வம் காட்டுவதாக அண்ணாமலை கூறி உள்ளது, வரும் உள்ளாட்சி தேர்தலில் வி தி லீடர்ஸ் அமைப்பு போட்டியிடபோவது தெளிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தலில்...
4 சுவர்களுக்கு மத்தியில் அமர்ந்து அரசியல் இயக்கத்தை அறிவித்த அண்ணாமலை, மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து, தற்போது வலிமையான அடித்தளத்தை போட ஆரம்பித்துள்ளதாகவும், வரும் நாட்களில் அவரின் செயல்பாடு தீவிரமாக இருக்கும் என்றும், உள்ளாட்சி தேர்தலில் வி தி லீடர்ஸ் அமைப்பு நிச்சயம் களம் காணும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது, வலிமையான அரசியல் கட்சியாக உருவெடுத்ததும் வரும் மக்களவை தேர்தலை அண்ணாமலை எதிர்கொள்வார் எனவும் அவரது நெருங்கிய நட்பு வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved