Also Watch
Read this
By: Fyrose Banu

சோழவரம் அருகே நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குடிநீர் ஆலைகள் இயங்கி வருகின்றன. மேலும் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் மூலமும் குடிநீர் உறிஞ்சப்பட்டு லாரிகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நல்லூர் ஊராட்சியில் இன்று கிராம மக்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
குடிநீரில் பல்வேறு வேதியியல் குறைபாடுகள்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கிராமத்தின் சார்பில் ஊராட்சியில் குடிநீர் மாதிரிகளை சேகரித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் குடிநீரில் பல்வேறு வேதியியல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். 
சிறுநீரகக் கோளாறு, வயிற்று வலி
குடிநீரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கிராம மக்களில் பலருக்கு சிறுநீரகக் கோளாறு, வயிற்று வலி என பல்வேறு உடல் உபாதைகளை சந்தித்து வருவதாக தெரிவித்தனர். 
அதிகாரிகளிடம் மனு அளித்தும்...
சட்டவிரோதமாக குடிநீர் ஆலைகள் செயல்படுவதால் நிலத்தடி நீர் மோசம் அடைந்து வருவதாகவும், பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

குடிநீர் ஆலைகளை அப்புறப்படுத்த வேண்டும்
இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு, சட்டவிரோத குடிநீர் ஆலைகளை அப்புறப்படுத்திட வேண்டும் என்றும் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
ஆர்ப்பாட்டம், மறியல் நடத்தப்படும்
அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. சட்டவிரோத ஆலைகளை அதிகாரிகள் சீல் வைத்த போதும் ஒரு சில நாட்களிலேயே அவை மீண்டும் இயங்குவதாகவும், கடுமையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தண்ணீர் திருட்டை அம்பலப்படுத்திய பொதுமக்கள்
நல்லூர் பகுதி மக்கள் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சும் 50க்கும் மேற்பட்ட போர்வெல்களை ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு அம்பலப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved