Also Watch
Read this
Posted on: Mar 18, 2026 08:35 AM
தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில், தொகுதிப் பங்கீடு விரைவில் நடைபெறும் என்று, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
தவெக தனித்துப் போட்டி
நெல்லையில் அவர் கூறியதாவது:
நடிகர் விஜய்யின் தவெக தனித்துப் போட்டியிடுவது அல்லது கூட்டணி வைப்பது என்பது, அவர்களின் உரிமை. இதைப் பற்றி நான் ஏற்கனவே பலமுறை தெளிவு படுத்திவிட்டேன். திமுக எப்படி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறதோ? அதேபோல அவர்களும் ஒரு நிலைப்பாட்டை எடுத்து உள்ளனர். இதில், கருத்துச் சொல்ல ஏதுமில்லை.
பண பலம் இருந்தாலும்...
எவ்வளவு பெரிய பணபலம் இருந்தாலும், இந்தியாவை டாட்டாவோ பிர்லாவோ ஆள முடியாது. திமுகவிடம் 60,000 கோடி ரூபாய் இருக்கலாம், ஆனால், மக்கள் மனம் யாரிடம் இருக்கிறது? என்பது தான் முக்கியம். 5 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை. சொத்து வரி உயர்த்தப்படாது என்று கூறிவிட்டு 300 மடங்கு உயர்த்தினர். மின்கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என கூறிவிட்டு உயர்த்தினர். மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு முறை அமல்படுத்தப்படவில்லை.
மத்திய அரசின் திட்டம்...
தமிழகத்திற்கு சாலைகள், பாலங்கள் அமைப்பதற்காக மத்திய அரசு இதுவரை 14 லட்சம் கோடி ரூபாய் வழங்கி உள்ளது. ஆனால், எதையுமே தரவில்லை என்று, தமிழக அரசு பொய் கூறுகிறது. ரேஷன் கடைகளில் மத்திய அரசு இலவசமாக வழங்கும் பொருட்களுக்கு, மாநில அரசு தனது ஸ்டிக்கரை ஒட்டி, தங்களது திட்டம் போலக் காட்டி வருகிறது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து உள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் போர்ச் சூழலால் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இது, திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. இன்னும் 10 முதல் 15 நாட்களில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்
வருகிறார் பியூஸ் கோயல்
தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் 12 நாட்கள் அவகாசம் உள்ளது. பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வர உள்ளார்.
அவர் வந்தவுடன் தொகுதி பங்கீடு குறித்துப் பேசி இறுதி செய்யப்படும். அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து நாங்கள் ஒற்றுமையாகச் செயல்படுவோம்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved