Also Watch
Read this
By: Manigandan Raja

வாக்கு எண்ணும் மையங்களில் முறைகேடு நடப்பதாக புகார் :
மேற்குவங்கத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் முறைகேடு நடைபெறுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறிய குற்றச்சாட்டை தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால் நிராகரித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை எனவும், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளால் முறைகேடுகள் நடக்க சாத்தியமே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
புத்த பூர்ணிமா: முழு நிலவின் ஒளியில் ஜொலித்த இந்தியா கேட் :

புத்த பூர்ணிமாவை ஒட்டி, டெல்லியில் உள்ள இந்தியா கேட் முழு நிலவின் ஒளியில், மூவர்ண கொடி வண்ணத்தில் ஜொலித்தது. "Flower Moon" நிகழ்வுடன் பிரமிக்க வைக்கும் வகையில் ஒளிர்ந்த இந்தியா கேட்டை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். மேலும், டெல்லி உட்பட நாடு முழுவதும் உள்ள பௌத்த விகார்கள் மற்றும் மடாலயங்களில் பிரார்த்தனைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு :

மும்பையில் ஆயிரத்து 745 கோடி ரூபாய் மதிப்பிலான கோகைன் போதை பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். பெரிய அளவிலான சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டுள்ளதாகவும், இந்த சாதனையை நிகழ்த்திய போதைபொருள் கட்டுப்பாட்டு பணியக அதிகாரிகளுக்கு பாராட்டு எனவும் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது :
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஆயிரத்து 745 கோடி ரூபாய் மதிப்புள்ள 349 கிலோ எடையுள்ள உயர்தர கோகைன் போதை பொருளை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். நிழலுக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியும், போதைப் பொருள் கடத்தல் மன்னனுமான சலீம் டோலா, துருக்கியிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், இந்த பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2027-ல் நடைபெறவுள்ள கும்பமேளா நிகழ்ச்சி :

உத்தரகண்டில் 2027-ல் நடைபெறவுள்ள கும்பமேளா பணிகளுக்கு ஆயிரத்து 252 கோடி ரூபாய் நிதி ஒதுக்க முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், திரிவேணி பாதை மறுசீரமைப்பு செய்வதற்காக 115 கோடி ரூபாயும், ஹரித்துவார் கங்கை வழித்தட திட்டத்தின் கீழ் வடக்கு ஹர்கி பாவ்ரி மறுசீரமைப்பு பணிக்காக 69 புள்ளி 6 கோடியும் நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved