Also Watch
Read this
By: Web Team

கரூரில் நிகழ்ந்த துயர சம்பவத்தை, அரசியலாக பார்க்க விரும்பவில்லை என்று திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார்.
கரூரில், செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி கூறியதாவது:
கடந்த 27ஆம் தேதி, கரூரில் நடந்த துயர சம்பவம் மிக கொடுமையானது. யாராலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. துயர சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். சம்பவம் நடந்த அன்றே நேரில் வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாகவும், ஆறுதலாகவும் இருந்த முதலமைச்சருக்கு நன்றி கூறுகிறோம்.
யாராலும், எந்த சூழலிலும் ஏற்றுக் கொள்ள முடியாத துயர சம்பவம் இது. இதுபோன்ற துயர சம்பவம், வரக் கூடிய நாட்களில், நடக்காத அளவுக்கு முயற்சி எடுக்க வேண்டும்.
கரூர் சம்பவத்தில், அரசியல் குற்றச்சாட்டு இல்லாமல், அரசியலாக யாரும் பார்க்க வேண்டாம், மக்கள் நலனில் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்ய கூடிய பணியாக பார்க்கிறோம்.
தவெகவினர் முதலில் கேட்ட இடம் லைட் ஹவுஸ் கார்னர். அங்கே எவ்வளவு பேர் நிற்க முடியும்? அடுத்ததாக, உழவர் சந்தை, எவ்வளவு சிறிய இடம். பொது மக்களுக்கு இடையூறு இல்லாத இடமாக நினைத்து வேலுசாமிபுரம் கொடுக்கப்பட்டது.
லைட் ஹவுஸ் பகுதியில் சந்திப்பு நடந்திருந்தால் அமராவதி ஆறு ஓடுகிறது, அசம்பாவிதம் இன்னும் அதிகமாகி இருக்கும். எவ்வளவு கூட்டம் வருகிறதோ அதற்கு ஏற்றார்போல தான் இடத்தை அரசியல் கட்சி தேர்வு செய்ய வேண்டும். அனுமதி கேட்டதை விட அதிக எண்ணிக்கையில் மக்கள் வருவதை காவல்துறையினர் தீர்மானித்து செயல்படுவார்கள். வேலுசாமிபுரத்தில் 2 ஆயிரம் செருப்பு இருந்தது. ஒரு தண்ணீர் பாட்டிலாவது இருந்ததா?
வந்த மக்களுக்கு குடிநீர், பிஸ்கெட் பாக்கெட் உள்ளிட்ட வசதிகளை செய்யவில்லை. இதனை அவர்கள் செய்திருக்க வேண்டும்.
12 மணிக்கு நடக்க இருந்த கூட்டம், 7 மணியாகி விட்டது. 4 மணிக்கு 5 ஆயிரம் பேர் இருந்தனர். அப்போது கூட்டம் நடந்து இருந்தாலும் இந்த அசம்பாவிதம் நடந்து இருக்காது. காவல்துறை பாதுகாப்பு அளிக்கும், அரசு கேட்க கூடிய இடங்களை கொடுக்கும். அரசு தரப்பில் இருக்கும் இடங்களை கேட்டால் அனுமதி அளிக்கப்பட்டிருக்கும். கட்சி தலைவர் பேசக் கூடிய இடத்திற்கு மக்கள் கூட்டம் வருவதை பொறுத்து அந்த இடம் போதுமா என்பதை கட்சி தானே முடிவு எடுக்க வேண்டும்.
இனி வரக் கூடிய நாட்களிலாவது இதுபோன்ற தவறு நிகழாமல் இருக்க சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved