Also Watch
Read this
By: Manigandan Raja

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள கலிஞ்சிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முதியவரான பழனி அடிக்கடி வெளியூர்களில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டுவிட்டு 5 நாட்கள் அல்லது ஒரு வாரம் கழித்து வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் பழனி கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் ஒரு வாரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
அப்போது அவரை பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்காததால் அவரது மூத்த மகன் செல்லமுத்து (34) வளவனூர் காவல் நிலையத்தில் தனது தந்தையை காணவில்லை என புகார் செய்தார். அதன்பேரில் காணாமல்போன பழனி குறித்து போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இதனிடையே கடந்த 30-ந் தேதியன்று கரையாம்புத்தூர் வயல்வெளி பகுதியில் முகம் சிதைந்த நிலையில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்ததையடுத்து அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவரின் புகைப்படத்தை வைத்து அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர் இதையறிந்த செல்லமுத்து, காவல் நிலையத்திற்கு சென்று, அந்த புகைப்படத்தில் இருப்பவர் காணாமல் போன தனது தந்தை தான் எனக்கூறி முண்டியம்பாக்கம் அரசு \மருத்துவமனை சவக்கிடங்கில் இருந்த முதியவரின் உடல் பிரேத பரிசோதனை செய்து உடல உடலை பெற்று வந்துள்ளார்.

அதனை தொடர்ந்து செல்லமுத்து குடும்பத்தினர், உறவினர்கள் பழனியின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்து உடலை கடந்த 01.07.2026 ஆம் தேதி தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அடக்கம் செய்தனர். இந்நிலையில் 02.07.2026 தேதி மாலை 5 மணியளவில் பழனி, தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது பழனியை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது, பழனி புதுச்சேரியில் உள்ள வீராம்பட்டினத்தில் உள்ள கோவிலில் சில நாட்கள் தங்கிவிட்டு வந்ததாக பழனி தனது
குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் அக்கம், பக்கத்தில் உள்ள பொதுமக்களிடையே காட்டுத்தீ போல பரவியதையடுத்து உடனே அக்கம், பக்கத்தில் உள்ள பொதுமக்கள் செல்லமுத்து வீட்டிற்கு சென்று பழனியை அதிசயமாக பார்த்தனர்.
மேலும் இதுகுறித்து செல்லமுத்து, போலீசாரை தொடர்பு கொண்டு தனது தந்தை உயிருடன் தான் இருக்கிறார், திருவண்ணாமலை கோவிலுக்கு சென்ற அவர் தற்போது தான் வீடு திரும்பியுள்ளார் என்று கூறினார்.
அப்படியானால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்ட முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்றும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்தும் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்ததாக கூறப்பட்டவர் உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.