Also Watch
Read this
பெரும் தடைகளை தாண்டி வெளியாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தை ஊரே கொண்டாடிவரும் வேளையில், தேனியில் உட்கட்சி மோதலால் கொண்டாட்டம் கூட களேபரம் ஆகியிருப்பது விஜய் ரசிகர்களை அப்செட் ஆக்கியிருக்கிறது. நடந்தது என்ன?

தேனியில் ஜனநாயகன் பஞ்சாயத்து
"ஜனநாயகன் தான் பஞ்சாயத்தாகி ரிலீஸ் ஆகிறது என்று பார்த்தால், படத்தை கொண்டாடுவதும் பஞ்சாயத்தில் முடிந்தால், என்னதான்யா பண்ணுறது," அப்படிங்குறது தான் இப்ப தேனிக்காரங்க மைண்ட் வாய்ஸாக இருக்க முடியும்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு லெஃப்ட் பாண்டி கீழ் ஒரு வீட்டு பிள்ளையாக இருந்த தேனி தவெக, தேர்தலுக்கு பின்பு இரண்டாக பிரிந்தது என்றே சொல்லலாம். தேர்தலுக்கு சிலகாலம் முன்பு கட்சியில் சேர்ந்த ஜெகநாத் மிஸ்ரா, கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஆனதுமே நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என சொல்லப்படுகிறது. என்னதான் மாவட்ட செயலாளராக லெப்ட் பாண்டி இருந்தாலும், எம்.எல்.ஏ. என வந்ததும் தவெகவினர் சிலரே அதிகாரத்துக்கு விரும்பி அணி மாறியதாக கூறப்படுகிறது.

எம்எல்ஏ vs மாவட்ட செயலாளர்
இந்நிலையில் தான், பல தடைகளை தாண்டி வெளியாகியுள்ள ஜனநாயகனை கொண்டாடித் தீர்க்க தவெகவினர் போட்டி போட்டு பேனர் கட்டி ஆட்டம் பாட்டம் என ஜமாய்க்கும் சூழலில், தனது தொகுதிக்குட்பட்ட சின்னமனூரில் உள்ள பாரத் தியேட்டருக்கு சென்று ஏற்பாடுகளை பார்வையிட்டுள்ளார் ஜெகநாத் மிஸ்ரா. அத்தகு நேரத்தில் தான் அங்கு தடல்புடல் ஏற்பாடுகளை செய்துவந்த லெஃப்ட் பாண்டி ஆதரவாளர்கள், எம்.எல்.ஏ. தரப்பை நோக்கி, உங்களுக்கு இங்கு என்ன வேலை, எனக்கேட்டு வம்பிழுத்துள்ளனர். இருதரப்புக்கும் இடையே பற்றிய வாக்குவாதம் கைகலப்பில் முடிந்ததால் எம்.எல்.ஏ. மிஸ்ரா தலையிட வேண்டியதாயிற்று.

எம்எல்ஏ கார் மீது கல்வீச்சு
ஆனால், எம்.எல்.ஏ. என்றும் பாராமல் அவரையும் ஆபாசமாக வசைபாடிய கும்பல், அவரது டிரைவர் மற்றும் ஆதரவாளர்கள் இருவரை துரத்தி துரத்தி அடித்ததோடு எம்.எல்.ஏ.வின் காரையும் கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. லெஃப்ட் பாண்டி ஆதரவாளர்களின் செயலால் கொந்தளித்துப் போன மிஸ்ராவின் ஆதரவாளர்கள், சின்னமனூர் காவல் நிலையத்தில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு எம்.எல்.ஏ.வுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் எப்படி? என சூடாக இருந்தவர்களை, நடவடிக்கை எடுப்பதாக சொல்லி கூலாக்கி அனுப்பி வைத்தது காவல்துறை.

காவல் நிலையம் முற்றுகை
ஆனால், மறுநாள் காலை வரை ஒரு துரும்பை கூட போலீஸ் கிள்ளிப் போடாததால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் படைதிரட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பரபரப்புக்கு உள்ளாக்கினர். இந்த சம்பவம் உயரதிகாரிகள் மட்டம் வரை செல்லவே, வேறு வழியில்லாமல் நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், தவெக சீனியர்கள் சிலரும் தலையிட்டு இருதரப்பையும் சமாதானப்படுத்தி கப்சிப் ஆக வைத்ததாக தெரிகிறது.

மீண்டும் மீண்டும்?
எது எப்படி இருந்தாலும், இது ஒரு தற்காலிக தீர்வு தான் என அறுதியிட்டு சொல்லும் தவெகவினர், தலைமை தலையிடும் வரை மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறத்தான் செய்யும் என்கின்றனர்.