Also Watch
Read this
கீழே விழுந்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மூதாட்டி, அங்கு எலிகள் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தால் தனது கால் கட்டை விரலையே இழந்த சம்பவம், மருத்துவமனையின் பராமரிப்பு, சுகாதாரம் உள்ளிட்டவற்றை கேள்விக்குறியாக்கி உள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் விறுவிறுவென பரவி பெரும் விவாதப் பொருளாக மாறியதை அடுத்து, அரக்கபறக்க மருத்துவமனை வளாகம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில்...
சிகிச்சைக்கு வந்த மூதாட்டியின் கால் கட்டை விரலை எலிகள் கடித்துக் குதறிய சம்பவம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனை அவசர அவசரமாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதிநவீன உயர்சிகிச்சை வசதிகள், 1800 படுக்கை வசதிகள் கொண்ட திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையில், நாளொன்றுக்கு 1000 பேர் உள்நோயாளிகளாகவும், 1500க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.

எலிகள் கடித்ததே தெரியாமல்...
இந்நிலையில், பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி தமிழ்க்கொடி, கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பொது வார்டில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் தான் காலில் கட்டுடன் படுத்திருந்த மூதாட்டியின் கால் கட்டை விரலை பதம் பார்த்திருக்கின்றன எலிகள். காலில் காயம் இருந்த பகுதிகளை கடித்து தின்ற எலிகள் கட்டை விரலை முழுவதுமாக கடித்துக் குதறி சிதைத்திருக்கின்றன. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு வலி தெரியாமல் இருக்க மருந்து கொடுக்கப்பட்டு இருந்ததால், எலிகள் கடித்ததே தெரியாமல் இருந்துள்ளார். சக நோயாளிகள் கூறிய பிறகே எலிகள் கடித்ததை அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார்.

எலி, பாம்பு...
மூதாட்டியை உடனிருந்து கவனித்து வந்த அவரது இளையமகன் விஜயகுமார், இரு தினங்களுக்கு முன்பே எலி தொல்லை குறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் முறையிட்டதாகவும், ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தனது தாயாரை கடித்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். ஆனால், இந்த வார்டில் எலிகள் நடமாடுவது ஒன்றும் புதிதல்ல என்று கூறப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுமார் 15 ஆண்டுகள் பழமையான 3 கட்டடங்களைச் சுற்றி குப்பைகள் தேங்கி கிடப்பதோடு, திறந்தவெளியில் கழிவுநீர் தேங்குவதால், எலி, பாம்பு போன்ற விஷ ஜந்துகளுக்கு வசிப்பிடமாகி அவ்வப்போது வார்டுக்குள் நுழைவது வாடிக்கையாக இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

சுத்தம் செய்யப்படுமா?
இதனிடையே, மூதாட்டி விவகாரம் விஸ்வரூபமெடுத்ததால், உடனடியாக பொதுவார்டில் இருந்து ஐசியூவுக்கு மாற்றப்பட்டு உயர்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மருத்துவமனை ஊழியர்களுடன், மாநகராட்சி தூய்மை பணியாளர்களும் வரவழைக்கப்பட்டு, தேங்கிக் கிடந்த குப்பைகளும், அடைத்து கிடந்த கழிவுநீர் குழாய்களும் ஒரே நாளில் சுத்தம் செய்யப்பட்டன. மேலும் 30க்கும் மேற்பட்ட எலி வளைகள் கண்டுபிடிக்கப்பட்டு மருந்து தெளிக்கப்பட்ட போதே, எலிகள் குதித்து ஓடின. எப்போதுமே சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டிய மருத்துவமனை வளாகம், இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்ததால் சுத்தம் செய்யப்படுமா? என நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.