Also Watch
Read this
திருப்பத்தூர் தவெக மேற்கு மாவட்ட செயலாளர் முனுசாமி செயலால், மன உளைச்சலுக்கு ஆளான நிர்வாகிகள் அவரது முறைகேட்டை அம்பலப்படுத்தி உள்ளனர். மாவட்டம் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியதால், போஸ்டிங் போடவும், கார் வாங்கவும் பணம் கொடுத்திருப்பதாக கூறி, ஆதாரங்களை வெளியிட்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளரை உடனடியாக மாற்றக்கோரி போர்க்கொடி தூக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடக்கிறது திருப்பத்தூர் மாவட்ட தவெகவில்?

அடிமட்ட தொண்டராக...
விஜய் மக்கள் இயக்கம் தொடங்கிய காலம் தொட்டு, அமைப்பின் அடிமட்டத் தொண்டனாக, ஒன்றிய நிர்வாகியாகப் பணியாற்றி, தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் மேற்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருபவர் முனுசாமி. சமீபகாலமாக உட்கட்சிப் புகார்கள் மற்றும் பல்வேறு சர்ச்சைகளால் இவரது பெயர் உள்ளுர் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட முனுசாமி ஆளுங்கட்சியாக இருந்த திமுகவைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தபோதிலும், அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. எளிய விவசாயக் குடும்பப் பின்னணியைக் கொண்ட முனுசாமி, தேர்தல் களத்தில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யவில்லை என்ற அதிருப்தி தொண்டர்களிடையே அப்போதே நிலவியது. எதிர்க்கட்சிகளிடம் பெருந்தொகையைப் பெற்றுக் கொண்டு, அவர் திட்டமிட்டே தேர்தல் பிரச்சாரத்தைத் தவிர்த்ததாகச் சொந்தக் கட்சியினரே குற்றம் சாட்டினர்.

பொறுப்பு வாங்கித் தருவதாக...
தேர்தல் சர்ச்சை ஒருபுறமிருக்க, தற்போது கட்சி நிர்வாகிகளிடம் முனுசாமி முறைகேடாகப் பணம் வசூலித்ததாகப் புதிய புகார் எழுந்துள்ளது. தவெகவில் முக்கியப் பொறுப்புகள் மற்றும் போஸ்டிங் வாங்கித் தருவதாகக் கூறி, நிர்வாகிகளிடம் லட்சக்கணக்கில் பணம் கறந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், வாக்குறுதி அளித்தபடி பலருக்குப் பதவிகள் வழங்கப்படாமலும், வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமலும் அவர் முறைகேடு செய்ததாகப் பாதிக்கப்பட்ட நிர்வாகிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நாட்றம்பள்ளி ஒன்றியச் செயலாளர் குறளரசன், மாவட்டம் மீது அடுக்கடுக்கான புகார்களை வைக்கிறார்.

கார் வாங்க முன் பணம்...
இதேபோல், மாவட்ட செயற்குழு உறுப்பினரான புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சரவணன், கட்சியில் பதவி வழங்குவதற்கும், கார் வாங்குவதற்கும் மாவட்ட செயலாளருக்கு மூன்று லட்சம் வரை முன் பணம் கொடுத்து உள்ளதாகவும், ஆனால் பணம் பெற்றுக்கொண்டு பதவி வழங்கவில்லை எனக்கூறி, பணம் அனுப்பியதற்கான ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்தியும் பல்வேறு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

அமைச்சரிடம் புகார்...
கட்சி வளர்ச்சிக்காக, இரவும் பகலும் உழைத்தவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட பொறுப்பு அமைச்சரிடமும் புகார் அளித்த போது அவர், ’வெறும் வாயால் சொன்னால் போதாது, மாவட்ட செயலாளருக்கு எதிராக உரிய ஆதாரம் இருந்தால் கொடுங்கள், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,' என கூறி சென்றதாக சொல்லப்படுகிறது.

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என நினைத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளரின் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டுள்ளனர். அதனை சற்றும் செவி சாய்க்காத மாவட்ட செயலாளர் முனுசாமி, தனது பைக்கை எடுத்துகொண்டு அங்கிருந்து சட்டென்று கிளம்பினார்.

சமூக வலை தளங்களில்...
இதனால் விரக்தியடைந்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் முனுசாமியிடம் பணம் கொடுத்ததற்கான ஆடியோ பதிவுகள், பணப் பரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்கள் உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் ஆதாரங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது தவெக வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. ஆதாரத்தை வெளியிட்டவர்கள் மாவட்ட செயலாளரை உடனடியாக மாற்றவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொண்டர்கள் எதிர்பார்ப்பு
இதுகுறித்து மேற்கு மாவட்ட செயலாளர் முனுசாமியிடம் கேட்டபோது, இவை அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று தனக்கு எதிராக சொல்லப்படும் அத்தனை குற்றசாட்டுக்களையும் மறுத்தார் . அடுத்தடுத்து உட்கட்சிப் புகார்களிலும் பண மோசடி சர்ச்சைகளிலும் மாவட்ட செயலாளர் முனுசாமி சிக்கியிருப்பது திருப்பத்தூர் தவெகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் தலைமை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமா? என்பதைத் தொண்டர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved