Also Watch
Read this
தூத்துக்குடி விசாரணைக் கைதி மரண விவகாரத்தில் காவல்துறை வெளியிட்டுள்ள 8 நொடி வீடியோ அடுத்தடுத்து பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது. 12 மணி நேரம் லாக்கப்பில் இருந்த வீடியோவை வெளியிடாமல் வெறும் எட்டே நிமிட வீடியோவை வெளியிட்டு காவல்துறை யாரை திருப்திபடுத்த நினைக்கிறது என கேள்வி எழுப்பும் பலர், இளைஞர் ஜன்னலில் இருந்து விழுந்ததை பார்த்தால் வீக்கம்கூட ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை எனவும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

எட்டு நொடிகள் கொண்ட வீடியோ
பிளே செய்தவுடன் படக்கென முடியும் 8 நொடிகள் கொண்ட இந்த வீடியோ ஒன்று போதுமா வலிப்பு வந்துதான் அருணாச்சலம் உயிரிழந்தார் என்பதை நிரூபிக்க? அப்படியானால் மரணப்படுக்கையில் இருந்து இளைஞர் கொடுத்த வாக்குமூலம் பொய்யா? என்பதே பலரது கேள்வி.

கள்ளச்சந்தையில் மது விற்பனை
தூத்துக்குடியை சேர்ந்த 24 வயது இளைஞர் அருணாச்சலம் டாஸ்மாக் கடையில் பணியாற்றி வந்த நிலையில், கடை திறப்பதற்கு முன்பே மதுபான பாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பதாக எழுந்த புகாரில் கடந்த 17ஆம் தேதி காலை, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் மாலை திடீரென தலை மற்றும் காலில் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு திடீரென அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. அவரது தாயிடம்கூட அனுமதி வாங்காமல் அவசர அவசரமாக அறுவை சிகிச்சை நடந்ததாக கூறப்படும் நிலையில் காவல் நிலையத்தில் வைத்து எஸ்.ஐ. தரணி, வடிவேல், மீனாட்சி உள்ளிட்ட காவலர்கள் தன்னை தலையில் தாக்கியதாக இளைஞர் வாக்குமூலமும் கொடுத்திருந்தார்.

ஏழாவது நாளில் உயிரிழப்பு
இந்நிலையில், சம்பவம் நடந்த 7ஆவது நாளே உயிரிழந்துள்ளார் அருணாச்சலம். இளைஞரை அடித்துக்கொன்ற காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கொந்தளித்துள்ள நிலையில் 8 நொடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது காவல்துறை. அதாவது, அருணாச்சலம் மயங்கி விழுந்து வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்பதற்கான ஆதாரம்தான் அந்த வீடியோவாம்.

சிசிடிவி காட்சி எங்கே?
அவர்களின் ஆதாரப்படியே பார்த்தாலும் அடுத்தடுத்து பல்வேறு கேள்விகள் தான் எழுகிறது. கள்ளச்சந்தையில் மது விற்பது குற்றமா? என்றால் கண்டிப்பாக குற்றம்தான். ஆனாலும், குற்றவாளியை சட்டத்தின்முன் நிறுத்தி அதற்கு தகுந்த தண்டனையை வாங்கி கொடுப்பதுதானே நீதி. கண்மூடித்தனமாக தாக்குவது எந்தவகையில் நியாயம் என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள், அருணாச்சலத்தை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தது முதல் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதுவரை உள்ள சிசிடிவி காட்சியை ஏன் வெளியிடவில்லை? விசாரணை எவ்வளவு நேரம் நடந்தது? எப்படி நடந்தது? யாரெல்லாம் உடன் இருந்தார்கள்? குற்றம்சாட்டப்பட்டவர் எப்படி கையாளப்பட்டார்? என்பதையும் ஏன் வெளியிடவில்லை என கேள்வி எழுப்புகின்றனர்.

அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு...
அருணாச்சலம் திடீரென மயங்கி விழும் வெறும் 8 நொடி வீடியோவை மட்டும் வெளியிட்டால் அவருக்கு வலிப்பு வந்ததாக அர்த்தமா? அதற்கு முன்னால் போலீசார் அவரை தாக்கி இருக்க மாட்டார்களா? அந்த தாக்குதலில் வலி தாங்க முடியாமல் ஏன் அருணாச்சலம் விழுந்திருக்க கூடாது? என கேள்வி எழுப்பும் பலரும் சொடுக்கும் நொடியில் முடியும் வீடியோ தான் கூடுதல் சந்தேகத்தையே கிளப்புகிறது என்கின்றனர். ஜன்னலுக்கும், தரைக்கும் 2 அடி தூரம் கூட வாய்ப்பில்லாதபோது, அதில் இருந்து மயங்கி விழுந்த இளைஞரின் தலையில் அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கா காயம் ஏற்பட்டிருக்கும்? இளைஞர் விழுவதற்கு முன்பும் பின்பும் என்ன நடந்தது என்பதையும் சிசிடிவி காட்சியில் சேர்த்து வெளியிட வேண்டியது தானே? 12 மணிநேரம் லாக்கப்பில் இருந்த ஒருவரை 8 நொடி வீடியோவில் காட்டினால் அவருக்கு நடந்த மற்ற விஷயங்களை எப்படி தெரிந்து கொள்வது என்ற கேள்வியும் எழுகிறது.

அசுர வேகம் ஏன்?
12 மணிநேரம்கூட வேண்டாம், இரவு 8.30 மணிக்கு பதிவான காட்சியை தான் காவல்துறை வெளியிட்டுள்ளது. அதற்கு முன்பும், பின்பும் சேர்ந்து மொத்தம் 1 மணிநேரம் காட்சியையாவது வெளியிடலாமே? என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள், அருணாச்சலம் மயங்கி விழும்போது உடன் நிற்கும் ஒருவரிடம் ஏதோ பேசிக் கொண்டிக்கிறார், அந்த காட்சியையாவது வெளியிட்டால் என்ன? இதற்கு முன்பு நடந்த எந்த லாக்கப் மரணத்திலும் இவ்வளவு வேகமாக சிசிடிவி ஆதாரத்தை காவல்துறை கொடுக்காதபோது, இந்த வழக்கில் மட்டும் அப்படி என்ன அசுரவேகம்? தங்கள்மீது தவறு இல்லை நாங்கள் களங்கமற்றவர்கள் என்பதை நிரூபிக்க காவல்துறை வீடியோவை கசிய விட்டுள்ளார்களா? அந்த சிசிடிவி காட்சியை வைத்து அருணாச்சலம் வலிப்பு வந்துதான் கீழே விழுந்தார் என்ற முடிவுக்கு வந்துவிட முடியுமா? எனவும் கேள்விக்குமேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சிசிடிவி ஆய்வு, கோரிக்கை
எல்லாவற்றுக்கும் மேலாக, சிகிச்சையில் இருந்த அருணாச்சலமே காவலர்கள் தன்னை தலையில் தாக்கியதாக வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் அந்த வீடியோவை காவல்துறை பார்த்தார்களா? அதை பார்த்து விட்டுமா 8 நொடி வீடியோவை வெளியிட்டு நோகாமல் வழக்கை முடிக்க பார்க்கிறார்கள்? என்ற கேள்வியை முன்வைக்கும் பலர் காவல்துறை உயரதிகாரிகள் தான் 12 மணிநேர சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து நடந்தது லாக்கப் மரணமா அல்லது வலிப்பு மரணமா என்பதை வெளிக்கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.