Also Watch
Read this
பிளஸ்-2 மாணவி பாலியல் கொலை வழக்கு தொடர்பாக, வேடநத்தம் கிராமத்தில் 800 ஆண்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அறிவியல் பூர்வமான விசாரணை, போதிய ஆதாரங்கள் அடிப்படையில் தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டதாக, தூத்துக்குடி எஸ்பி மதன் விளக்கம் அளித்தார்.

சிறுமியின் அடையாளம் வெளியிட்டால் நடவடிக்கை
தூத்துக்குடியில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆயிரத்து 500 பேரை கண்காணித்த காவல்துறை, மூதாட்டி பாலியல் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த தர்ம முனீஸ்வரனையும் கண்காணித்ததாக எஸ்பி விளக்கம் தந்துள்ளார். விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் கொலை செய்யப்பட்டது உறுதி என்று, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் கூறி உள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம், பெயரை பயன்படுத்தினால் போக்சோ சட்டம் பாயும் என்றும், விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் கொலை வழக்கு தொடர்பாக, தூத்துக்குடி எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எந்த அழுத்தமும் இல்லை
மேலும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் கூறியதாவது;
இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான விசாரணை, சிசிடிவி காட்சிகள், மருத்துவ பரிசோதனை அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலேயே தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டு உள்ளார். சம்பவம் நடந்த கிராமத்தில் மட்டும் சுமார் 800 ஆண்களிடம் விசாரணை நடத்தினோம். எந்த அழுத்தத்திற்கும் ஆளாகாமல், ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளியை கண்டறிந்துள்ளோம்.

நீதி கிடைக்கும் வகையில்...
குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்போம். விசாரணை தீவிரமாக தொடர்கிறது. மாணவியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு எஸ்பி மதன் கூறினார்.

அதிர வைத்த சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, கடந்த மார்ச் 10ஆம் தேதி மாலை இயற்கை உபாதைக்காக தனது வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் நீண்ட நேரமாகியும் அந்த சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள் காட்டுப் பகுதிக்குள் சென்று தேடினர். இதனையடுத்து சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததது 11ஆம் தேதி காலை தெரிய வந்தது. இதனையடுத்து உடற்கூறாய்வுக்காக மாணவியின் சடலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் இயற்கை உபாதைக்காகக் காட்டுப்பகுதிக்குச் சென்ற மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. குளத்தூர் காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்திற்குரிய நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், முனீஸ்வரன் சிக்கி உள்ளான்.

சிக்கிய குற்றவாளி
இந்த கொலை வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த 30 வயதான தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. இந்த தர்ம முனீஸ்வரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். எப்படி கொலை செய்தார்? என்பது குறித்து போலீசா தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.