Also Watch
Read this
மதுரையில் போதைப் பொருள் விற்பனை நடக்கிறதா? என சோதனைக்கு சென்ற மாநகர காவல்துறை அதிகாரிகள், விஜய்யின் வாத்தி ரெய்டு பாடலை இணைத்து அதிகாரப்பூர்வ பக்கத்தில் ரீல்ஸ் வீடியோவாக பதிவு செய்திருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரீல்ஸ் வீடியோவில் கமிஷ்னரே இடம் பெற்றிருக்கும் நிலையில், யாரை திருப்திபடுத்த வீடியோ பதிவு செய்யப்பட்டது? வழக்கமான சோதனையை மிகைப்படுத்தி வெளியிட அழுத்தம் கொடுக்கப்படுகிறதா? என்று பேசு பொருளாகி உள்ளது.

போதையை ஒழிக்க தனிப்படை
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதுமே போதைப் பொருள் புழக்கத்தை ஒழிக்க தனிப்படை அமைக்கும் திட்டத்தில் தான் கையெழுத்து போட்டார். போதைப் பொருள் புழக்கம் மூலம் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் முதலமைச்சர் விஜய்யின் முதல் கையெழுத்து அமைந்தது. அதோடு மட்டுமல்லாமல், பதவியேற்றதில் இருந்து காவல் துறையை முடுக்கி விட்டு போதைப் பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. முதலமைச்சரின் உத்தரவை அடுத்து காவல்துறையினர் பல இடங்களில் சோதனை நடத்தி போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

மதுரையில் அதிரடி
இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி விஜய் பதவியேற்ற நாளன்று மதுரை மாநகர காவல்துறை போதைப்பொருள் விற்பனை நடக்கிறதா? என சிட்டி லிமிட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த சோதனையில் 461 கிலோ குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, 11 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மேலும், போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ரீல்ஸ் மோகம்
காவல்துறையின் போதை ஒழிப்பு நடவடிக்கை ஒரு பக்கம் பாராட்ட வேண்டியதாக இருந்தாலும், ஒரே ஒரு ரீல்ஸ் வீடியோ தான் தற்போது சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது. அதாவது, சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்களை வீடியோ எடுத்து, அந்த வீடியோவுக்கு வாத்தி ரெய்டு பாடலை இணைத்து ரீல்ஸ் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வீடியோவில் மதுரை மாநகர கமிஷ்னர் அபிஷேக் தீக்சித்தும் இடம் பெற்றிருக்கும் நிலையில், கமிஷ்னரே ரீல்ஸ் வீடியோவுக்கு இடம் கொடுப்பதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய் பாடலுடன் ரீல்ஸ்
மதுரை போலீஸ் கமிஷ்னராக லோகநாதன் IPS பணிபுரிந்த நிலையில், தேர்தல் சமயத்தின் போது தேர்தல் ஆணையம் மூலம் லோகநாதன் மாற்றப்பட்டு அபிஷேக் தீக்சித் நியமனம் செய்யப்பட்டார். கடந்த காலங்களில் சோதனை நடத்தும் போதெல்லாம் வெறுமனே வீடியோவாக வெளியிடும் போலீசார், இந்த முறை விஜய்யின் பாடலை இணைத்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருப்பது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.

பதிவு நீக்கம்
எந்த ஆட்சியாக இருந்தாலும் காவல்துறையின் நடவடிக்கை எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்க வேண்டுமே தவிர, ஆட்சிக்கு ஏற்ற மாதிரி வழக்கமான நடவடிக்கையை மிகைப்படுத்தி காட்டப்படுகிறதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. சர்ச்சையை அடுத்து முகநூலில் பதிவு செய்திருந்த வீடியோவை மதுரை மாநகர போலீஸ் நீக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved