Also Watch
Read this
அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒத்துழைப்பு தருவதாக தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை
அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டமும், அதனைத் தொடர்ந்து தலைமைக்கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும், இன்று மே 19ஆம் தேதி நடைபெற்றது.

தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை
சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை அலுவலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில், நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, சட்டமன்ற பொதுத் தேர்தலில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டதன் காரணமாக, 47 சட்டமன்ற உறுப்பினர்களும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களும், ஆக மொத்தம் 53 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதற்கு முழுமுதற் காரணமாக விளங்கும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, மாவட்டச் செயலாளர்களும், தலைமைக் கழகச் செயலாளர்களும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு
இதனையடுத்து, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, மாவட்ட செயலாளர்களும், தலைமைக் கழகச் செயலாளர்களும் தங்களது முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்குவதாக இந்த கூட்டத்தில் உறுதிபட தெரிவித்துள்ளதாக, கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சிப் பணி மற்றும் மக்கள் பணி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved