news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குறி வைக்கப்படும் பூவிருந்தவல்லி
tv

Also Watch

tv

Read this

குறி வைக்கப்படும் பூவிருந்தவல்லி

இடையில் கட்டம் கட்டும் சா.மு.நாசர்

22

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகை வரும் சட்டமன்ற தேர்தலில் பூவிருந்தவல்லி தொகுதி மீது கண் வைத்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. பணம் கொழிக்கும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை விட்டுவிட்டு பூவிருந்தவல்லி தொகுதியை குறிவைக்க செல்வப்பெருந்தகை என்ன விவரம் இல்லாதவரா எனக்கூறும் அரசியல் பார்வையாளர்கள் அந்த தொகுதியின் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏ கிருஷ்ணசாமிக்கு மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் சைலண்ட்டாக கட்டம் கட்டி வருவதாக கூறுகின்றனர்.

1977ல் உருவான பூவிருந்தவல்லி
தனி தொகுதியான பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதி 1977ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் 5 முறை திமுக, 2 முறை அதிமுக, 3 முறை காங்கிரஸ், தலா ஒரு முறை தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் பாமக ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றன. ஆரம்பகாலகட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸின் கோட்டையாக இருந்த பூவிருந்தவல்லி தொகுதி கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக வசம் சென்றது. அந்த ஆண்டில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மதியழகனை எதிர்த்து போட்டியிட்ட மணிமாறன் வெற்றி பெற்றார். அதேபோல் அடுத்து நடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏழுமலை, திமுக வேட்பாளர் பரந்தாமனைவிட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இப்படி, 2011 மற்றும் 2016 ஆகிய 2 முறையும் அதிமுக வெற்றியை தங்கள் வசம் வைத்திருந்தாலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்களான தண்ணீர்குளம் ஏழுமலை, மணிமாறன் ஆகியோர் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

பூவிருந்தவல்லிக்கு குறி வைக்கும் செல்வப்பெருந்தகை
2019ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் எம்பி கிருஷ்ணசாமி களமிறக்கப்பட்டார். அதிமுக சார்பில் போட்டியிட்ட வைத்தியநாதனைவிட அதிக வாக்குகளை குவித்து எம்எல்ஏ ஆனார் கிருஷ்ணசாமி. இதனை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு திமுக சார்பில் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிட, பூந்தமல்லி தொகுதி அதிமுக கூட்டணியில் இருந்த பாமகவிற்கு ஒதுக்கப்பட்டது. பாமக சார்பில் களமிறங்கிய ராஜமன்னாரை எதிர்த்து மீண்டும் கிருஷ்ணசாமியே எம்எல்ஏ பதவியை தன்வசமாக்கினார். இப்படி, பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ கிருஷ்ணசாமி அசைக்க முடியாத நபராக இருப்பதால் வரும் 2026 தேர்தலிலும் அவருக்கே வெற்றி வாய்ப்பு என சொல்லப்படுகிறது. இதுஒருபுறமிருக்க, பூவிருந்தவல்லி தொகுதியில் 3 முறை தாங்கள் வெற்றியை பார்த்ததாகவும் அதனால் இந்த தேர்தலில் அந்த தொகுதி தங்களுக்கே வேண்டும் எனவும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுத்து வருகிறார்களாம். அதிலும், குறிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை இந்தமுறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு மாறாக பூவிருந்தவல்லி தொகுதியில் நின்று வெற்றியை தனதாக்க முனைப்போடு உள்ளதாக கூறப்படுகிறது.

விழிபிதுங்கும் தொழிற்சாலை உரிமையாளர்கள்
செல்வப்பெருந்தகை இப்படி ஒரு முடிவெடுக்க காரணமே ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள கூட்டணி கட்சியினரும், அங்குள்ள தொழிற்சாலை உரிமையாளர்களும் தானாம். வரும் தேர்தலில் செல்வப்பெருந்தகைக்கு தங்கள் சப்போர்ட் இருக்காது என சொல்லாமல் சொல்லிவிட்டதாகவும் அதனால்தான் உஷாராக பூவிருந்தவல்லி தொகுதியை கைப்பற்றும் முடிவில் இருக்கிறாராம். கூட்டணி கட்சியினரும், தொழிற்சாலை நிறுவனத்தினர்களும் தேர்தல் நேரத்தில் எதிராக திரும்பியதற்கு என்ன காரணம் என மெல்ல விசாரித்தபோது செல்வப்பெருந்தகையின் தலையீடு தொகுதியிலும் சரி தொழிற்சாலை நிறுவனங்களிலும் சரி தலைவலியை கொடுக்கும் அளவுக்கு இருந்ததாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக, ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலைகளில் இருந்து வரும் இரும்பு கழிவுகளை யார் வாங்குவது என்பதில் அங்குள்ள திமுகவினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் போட்டோ போட்டி நிலவி வந்துள்ளது. ஆனால், செல்வப்பெருந்தகையை மீறி சிறு இரும்பு துகளைகூட திமுகவினர் தொட முடியவில்லை என கூறப்படுகிறது. இவர்களுக்கிடையில் சிக்கிக்கொண்டு விக்கவும் முடியாமல் கக்கவும் முடியாமல் விழிபிதுங்கும் தொழிற்சாலை உரிமையாளர்கள் செல்வப்பெருந்தகைக்கு எதிராக திரும்பி உள்ளார்களாம்.

திமுகவில் மோதல்
இதுஒருபுறமென்றால் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமிக்கும், மாவட்டச் செயலாளரான சா.மு.நாசருக்கும் ஏழாம் பொருத்தம் தான். கலைஞர் காலத்திலேயே எம்.பி.யாக இருந்த கிருஷ்ணசாமியின் கை ஓங்கி நிற்பதால் மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் தொகுதியில் தன் கை ஓங்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நிகழ்வுகளையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். கட்சியின் கடைநிலை நிர்வாகிகளின் நகர்வைகூட கண்கொத்தி பாம்பாக கவனித்து அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பி வருகிறாராம். மொத்தத்தில் கட்சியின் சீனியரான கிருஷ்ணசாமிக்கும் சா.மு.நாசருக்கும் ஆண்டுக்கணக்கில் cold war நடந்து வருவதாகவும், அதனால் கிருஷ்ணசாமிக்கு சீட் கிடைக்கக்கூடாது என்பதற்காக நாசர் சைலண்டாக சில உள்ளடி வேலைகளில் ஈடுபடுவதாகவும் பேச்சு அடிபடுகிறது. அதுமட்டுமல்லாது, மாவட்ட பொருளாளர் நரேஷ் என்பவரும் பூவிருந்தவல்லியில் கோதாவில் குதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு கட்சி நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க உள்ளார்களாம்.

தொகுதி யாருக்கு?
இப்படி கிருஷ்ணசாமியை காலி செய்ய வேண்டும் என சா.மு.நாசர் ஒருபக்கம் இருக்க, வருமானம் கொட்டக்கூடிய ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தங்கள் வசம் வர வேண்டும் என்பதற்காக திமுகவினரும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ்காரர்களுக்கு பூவிருந்தவல்லி தொகுதிக்கு செல்ல வேண்டும் என ஒரு கணக்குப்போட அதற்கு ஏற்றார்போல செல்வப்பெருந்தகையும் தனது விருப்ப லிஸ்டில் அதே தொகுதியையே குறிவைக்க பூவிருந்தவல்லி தொகுதிக்கான வேல்யூ தாறுமாறாக அதிகரித்துள்ளதாம். அதேபோல், அதிமுகவிலும் முன்னாள் எம்எல்ஏ மணிமாறன் கடுமையாக முயற்சி செய்து வருவதாகவும், ஆனால் டிடிவி தினகரனின் அமமுகவில் உள்ள மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏழுமலை சீட் கேட்டு ஒற்றைக்காலில் நிற்பதாகவும் கூறப்படுகிறது. இதற்குமத்தியில் பாமகவும் அதிமுக கூட்டணியில் சீட் கேட்பதாக சொல்லப்படுகிறது.

Related Link
தேசியக்கட்சிகளின் ஒரே நம்பிக்கை

தேசியக்கட்சிகளின் ஒரே நம்பிக்கை

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
7 hrs 6 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved