Also Watch
Read this
தருமபுரியில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை ஒரு இளைஞன் கத்தியால் குத்திக் கொ* செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தன்னை காதலிக்காவிட்டால் உயிரோடே இருக்க வேண்டாம் எனக்கூறி ரத்தவெள்ளத்தில் துடிக்கவிட்ட இளைஞனை, பொதுமக்கள் புரட்டி எடுத்து போலீசில் ஒப்படைத்த நிலையில் இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒரு தலைக் காதல்...
தருமபுரி மாவட்டம்,தேங்காய்மரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் இளைஞர் சின்னசாமி. ஆர்ஓ சர்வீஸ் வேலை செய்து கொண்டிருக்கும் இவன்
அதே பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். அந்த பெண் ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வரும் நிலையில் தினமும் பின்தொடர்ந்து சென்றதோடு காதலிப்பதாக கூறி உள்ளான். அந்த காதலை ஏற்க மறுத்த இளம்பெண், பலமுறை இளைஞன் பின்தொடர்ந்த போதும் கண்டித்து அனுப்பி உள்ளார். ஆனாலும், விடாமல் விரட்டிய சின்னசாமி இளம்பெண்ணுக்கு லவ் டார்ச்சர் கொடுத்ததாக தெரிகிறது. ஒருகட்டத்தில், எரிச்சலடைந்த இளம்பெண் தனக்கு விருப்பமில்லை, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள் எனக்கூறியதோடு இனிமேலும் பின்தொடர்ந்தால் தனது பெற்றோரிடம் கூறிவிடுவேன், அல்லது போலீசில் புகார் அளிப்பேன் எனக்கூறியதாக தெரிகிறது.

பேருந்து நிலையத்தில் விபரீதம்
இதனால், ஆத்திரமடைந்த சின்னசாமி, இளம்பெண் எப்போது வேலை முடிந்து கடையைவிட்டு வெளியே வருவார் என காத்திருந்தான். அதன்படி, வீட்டுக்கு செல்வதற்காக தருமபுரி பஸ் ஸ்டாண்டிற்கு வந்த இளம்பெண் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சின்னசாமி தன்னை காதலித்தால் உயிரோடு இருக்கலாம், இல்லாவிட்டால் உலகத்தில் வாழவே வேண்டாம் எனக்கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணின் கழுத்து, நெஞ்சுப்பகுதி, முதுகு, தோள் என உடம்பின் பல இடங்களில் ஆக்ரோஷமாக குத்தி உள்ளான். இதனை பார்த்த அங்குள்ள மக்கள் சின்னசாமியை சுற்றி வளைத்து பிடித்து புரட்டி எடுத்தனர். அதோடு, போலீசாருக்கும் தகவல் அளித்தார்.

சிறையில் இளைஞன்...
அடுத்த சிலநிமிடங்களில் அங்கு வந்த போலீசார் இளம்பெண்ணை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு, பொதுமக்களிடம் அடிவாங்கி ரத்தம் சொட்ட சொட்ட நின்று கொண்டிருந்த சின்னசாமியையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இதனிடையே, கத்திக்குத்தில் காயம் ஆழமாக இருந்ததால் இளம்பெண் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். விருப்பமில்லாத பெண்ணை துரத்தி துரத்தி காதலித்தது மட்டுமல்லாமல் கொலை செய்யும் அளவிற்கு மிருகமாக மாறிய இளைஞன், தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான்.