news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பஞ்சாக பறந்து ஓடிய லாட்டரி கும்பல், சாவகாசமாக வந்த காவல்துறை
tv

Also Watch

tv

Read this

பஞ்சாக பறந்து ஓடிய லாட்டரி கும்பல், சாவகாசமாக வந்த காவல்துறை

பழையபட சினிமா கிளைமாக்ஸ்

5

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலத்தில், சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்த கும்பலும், அதனை வாங்க வந்த வாடிக்கையாளர்களும் நியூஸ் தமிழ் செய்தியாளரை கண்டு நாலாபுறமும் பஞ்சாக பறந்து ஓடிய நிலையில், தகவல் தெரிந்தும்கூட ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு சாவகாசமாக வந்த போலீசார், கடமைக்கு சில பொருட்களை மட்டும் கைப்பற்றி சென்றது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர் தகவல் அளித்தவுடனேயே விருட்டென வந்திருந்தால் லாட்டரி கும்பல் கூண்டோடு சிக்கியிருக்கும் எனக்கூறும் மக்கள், காவல்துறை சப்போர்டோடுதான் இந்த லாட்டரி விற்பனையே நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

லாட்டரி விற்பனை...
சேலம் மாநகர், கிச்சிப்பாளையம் நாராயணா நகர் பகுதியில் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளிகள், ஏழைகளை குறிவைத்து சட்டவிரோதமாக ஒரு கும்பல் லாட்டரி விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் காவல்துறை கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் நியூஸ் தமிழ் செய்தியாளர் வினோத்தை தொடர்புகொண்டு லாட்டரி விற்பனை குறித்து கூறி உள்ளனர். இதனை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு போன் செய்த செய்தியாளர், பொதுமக்கள் பேசியது குறித்து தகவல் சொன்னதோடு, தான் நேரில் செய்தி சேகரிக்க செல்வதாகவும், நீங்களும் அங்கு வருமாறும் கூறி உள்ளார்.

ஓட்டம் பிடித்த லாட்டரி கும்பல்
அடுத்து, லாட்டரி விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டிற்குள் வாடிக்கையாளர் போன்று சென்றார் செய்தியாளர். அவரை கவனிக்காத லாட்டரி கும்பலும், வாடிக்கையாளர்களும் நம்பரை எழுதுவது, லக்கி நம்பரை பார்ப்பது என அவரவர் வேலைகளில் மூழ்கி இருந்தனர். இதனிடையே கேமராமேன் ஒருபுறம் வீடியோ எடுக்க, செய்தியாளரும் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அப்போதுதான், வந்திருப்பது செய்திக்குழு என்பதையே உணர்ந்த லாட்டரி கும்பல், கையில் சில பிளாஸ்டிக் டப்பாக்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். அதேபோல், பரிசு கிடைக்கும் என்ற ஆர்வத்தில் வந்திருந்த வாடிக்கையாளர்களும் பஞ்சாக பறக்க ஆரம்பித்தனர். ஆனாலும், செய்தியாளர் ஓடி ஓடி வீடியோ எடுத்தார்.

மல்லுக்கட்டிய முதியவர்
இதைக்கண்டு டென்ஷன் ஆன ஒரு முதியவர், கேமராவை ஆப் செய்யுமாறு செய்தியாளரை மிரட்டி யோவ் என ஒருமையில் எகிறியதோடு வார்த்தையிலும் கடுமை காட்டினார். அப்போது, உங்கள் வீட்டுக்கு வந்தோமா? வீடியோ எடுத்தோமா? என செய்தியாளர் லாக் ஆக்க, பேசாமல் போங்க சார், என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என திமிர் பேச்சு பேசினார் முதியவர். அவருக்கு வேலையே லாட்டரி வாங்க புதியவர்கள் வருகிறார்களா? அவர்கள் உள்ளூர்தானா? என்பதை கண்காணிப்பதுதானாம். மொத்தத்தில் லாட்டரி கும்பலுக்கு ஆல் இன் ஆல் அவர்தான் என சொல்லப்படுகிறது.

காலி செய்த வாடிக்கையாளர்கள்
இதனிடையே, தனது உள்ளங்கையால் முகத்தை மறைத்து கேமராவில் பதிவாகாமல் இருப்பதற்காக புதுவித தற்காப்பு கலையை கையில் எடுத்த ஒருவரை மடக்கி பிடித்து லாட்டரி விற்பனை குறித்து செய்தியாளர் கேள்வி கேட்க, நானே இன்று தான் வந்துள்ளேன், லாட்டரி விற்பவர்களை விட்டுவிட்டு என்னை ஏன் டார்கெட் செய்கிறீர்கள்? என அப்பாவிபோன்று அவர் கேள்வி எழுப்பினார். அதேபோல், லாட்டரி வாங்க வந்த முருகன் என்பவர், நானும் எப்போதாவது வருவேன், 50 ரூபாய் முதல் 13 ஆயிரம் வரை பரிசு விழுந்துள்ளது, ஆனால் யார் விற்பனை செய்கிறார் என்றெல்லாம் தெரியாது எனக்கூறிவிட்டு இடத்தை காலி செய்தார்.

எங்கே காவல்துறை?
செய்தியாளர் வந்து கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகுதான் 2 காவலர்கள் ஆடி அசைந்து ஸ்பாட்டுக்கே வந்தார்கள். வந்தவுடன் லாட்டரி சீட்டுகள், பணம், சில பொருட்கள் ஆகியவற்றை போர்வையில் சுற்றி எடுத்துக்கொண்டு போன போலீசார் லாட்டரி கும்பலை பிடிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. அதுகுறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்துவதிலும்கூட வீரியம்காட்டவில்லை. லாட்டரி விற்கும் இடத்தை செய்தியாளரே மோப்பம் பிடித்து நேரில் சென்று இத்தனை விஷயங்களை வெளியில் கொண்டு வரும்போது, லோக்கலில் உள்ள போலீசாருக்கு எப்படி எதுவுமே தெரியாமல் இருக்கும் என்பதுதான் மிகப்பேரிய சந்தேகமே.

காவல்துறை ஒத்துழைப்பு?
மெயின் ரோட்டில் இருந்து வெறும் 50 மீட்டர் தூரத்திலேயே வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்து, அதில் டேபிள், சேர், ஃபேன், குடிதண்ணீர், கூடவே வியாபாரம் செழிக்க சாமி புகைப்படம் என பக்கா செட்டப்போடு லாட்டரி விற்பனையை படுஜோராக நடத்தி வரும் கும்பல் குறித்து லேசாககூட விஷயம் கசியாமலா இருந்திருக்கும்? அப்படியானால் காவல்துறை சப்போர்ட்டுடன் தான் விற்பனை நடைபெறுகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.

நடவடிக்கை எடுப்பார்களா?
அதேபோல், பொதுமக்கள் புகாருக்குமேல் புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சட்டவிரோத லாட்டரி விற்பனை குறித்து நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. அப்போதே கடமைக்கு நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் தற்போது அதேபோன்று நடவடிக்கை எடுக்காமல் லாட்டரி கும்பலை கூண்டோடு பிடித்து சிறையில் தள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோள்.

Related Link
திமுக TO தவெக, தொடரும் வைகோவின் பசப்பு பேச்சு

திமுக TO தவெக, தொடரும் வைகோவின் பசப்பு பேச்சு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காலிறுதிக்கு முன்னேறிய அணிகள், இறுதிக்கட்டத்தை நோக்கி கால்பந்து போட்டி

10
49 mins agoshare
இறுதிக்கட்டத்தை நோக்கி கால்பந்து போட்டிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau