Also Watch
Read this
கோட்டை வட்டாரத்தை அதிரவைத்த குதிரை பேரப் புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. தினமும் காலை, மாலை என இரு வேளையும் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் விதித்த கறாரான செக், இடைத்தேர்தல் களத்தில் செந்தில் பாலாஜியை முடக்குமா? நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள் என்ன?

தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம்
கோட்டை வட்டாரத்தையே கிடுகிடுக்க வைத்திருக்கும் குதிரை பேர விவகாரம், சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுகளால் அடுத்த கட்ட க்ளைமாக்ஸை நோக்கி நகர்ந்திருக்கிறது.
தவெக ஆட்சியை வீழ்த்துவதற்காக, எதிர்க்கட்சி தரப்பில் மிக ரகசியமாக ஆபரேஷன் தவெக என்ற அசைன்மெண்ட் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து, அதன் மூலம் ஆளும் தவெக அரசின் பெரும்பான்மையை குலைக்க, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை வளைக்க முயன்றதாக பரபரப்பு புகார் கிளம்பியது.

இந்த விவகாரத்தில், செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்குமார் மீது காவல்துறை எஃப்.ஐ.ஆர் போட, எங்கே காக்கி பட்டாளம் கதவை தட்டிவிடுமோ? என்ற பதற்றத்தில் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

அனல் பறந்த வாதம்
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது தான், நீதிமன்றமே விவாத களமாக மாறியது. செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இளங்கோ, வாதங்களை அடுக்கினார். குதிரை பேரம் பேசியதாக சொல்லப்படும் தொலைபேசி உரையாடல்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சம்பவம் நடந்து 2 நாட்களுக்கு பிறகுதான் புகாரே கொடுக்கப்பட்டிருக்கிறது. சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தால் அரசு கவிழ்ந்துவிடாது. அரசை கவிழ்க்க சதி என்று கூறுவதெல்லாம் வெறும் யூகத்தின் அடிப்படையிலானது என்று பொரிந்து தள்ளினார். கரூர் சம்பவத்தை மையமாக வைத்து, வரவிருக்கும் இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜி கட்சிக்காக பணியாற்றுவதை தடுத்து, அவரை முடக்குவதற்காகவே திட்டமிட்டுப் போடப்பட்ட வழக்கு இது என்றும் வாதிட்டார்.

எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும்?
இதனைத் தொடர்ந்து, அசோக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசன், செந்தில் பாலாஜி மீது எப்போதெல்லாம் வழக்குப்பதிவு செய்யப்படுகிறதோ, அப்போதெல்லாம் அசோக்குமாரையும் அதில் வலுக்கட்டாயமாக சேர்த்து விடுகிறார்கள். சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு 108 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். வெறும் 59 இடங்களை மட்டுமே வைத்துள்ள திமுக எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும்? இந்த 35 கோடி ரூபாய் குதிரை பேரம் என்பது அப்பட்டமான பொய் என்று லாஜிக்கை தட்டினார்.

ஆதாரத்தை காட்டிய அரசு வழக்கறிஞர்
மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், தனது கையில் இருந்த ரகசிய ஃபைலை பிரித்தபோதுதான், நீதிமன்றமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது. குற்றம் சாட்டப்பட்ட புள்ளிகள் ஜூன் 25,26,27 ஆகிய தேதிகளில் கிண்டியில் உள்ள ஒரு விஐபி ஹோட்டலில் ரகசியமாக சந்தித்துப் பேசியதற்கான ஆரம்பகட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக கூறினார்.

சிங்கப்பூருக்கு எஸ்கேப்
அசோக்குமார், குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்கள் இருந்த லொகேஷனில் 40க்கும் மேற்பட்ட முறை இருந்துள்ளதாகவும், இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், இந்த சதியில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியப் புள்ளி சிங்கப்பூருக்கு எஸ்கேப் ஆகிவிட்டதாகவும், அங்கிருந்தபடியே ரிமோட் ஆக்சஸ் மூலம் இந்த வழக்கின் மிக முக்கிய வீடியோ ஆதாரங்களை டெலீட் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இதன் பின்னணியில் கோடிக்கணக்கான ஹவாலா பணம் விளையாடியிருப்பதாகவும், விசாரணை பெங்களூரு வரை நீள்கிறது எனவும் அடுக்கினார்.

நிபந்தனை முன் ஜாமின்
இருதரப்பு வாதங்களையும் அக்குவேறு ஆணிவேறாக கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன் இறுதியாக செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். இருவரும் தினமும் காலை, மாலை என இரு வேளையும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கறாரான நிபந்தனையை விதித்துள்ளார் நீதிபதி.

அடுத்து என்ன?
முன்ஜாமின் கிடைத்துவிட்டாலும், தினமும் இருவேளை போலீஸ் ஸ்டேஷன் ஏறி இறங்க வேண்டும் என்ற நிபந்தனை, வரவிருக்கும் இடைத்தேர்தல் களத்தில் செந்தில் பாலாஜிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டைதான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். கட்சிக்காக முழு நேரமாக வியூகம் அமைக்க முடியாமல், தினமும் இரண்டு வேளை ஸ்டேஷனுக்கு அலைய வைப்பதன் மூலம் செந்தில் பாலாஜியின் வேகம் முடக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம், காக்கிகள் தரப்பு சொன்ன சிங்கப்பூர் கனெக்சன், அழிக்கப்பட்ட வீடியோ டேட்டாக்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த வழக்கின் போக்கை தலைகீழாக மாற்றலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

செந்தில் பாலாஜி இன்று ஆஜர் இல்லை
தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதி புகாரில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காலை, மாலை ஆஜராகி கையெழுத்திட உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்து உள்ளது. ஆனால், இன்று ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் அசோக் குமார் ஆஜராகவில்லை. செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கான ஜாமின்தாரர்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படாததால் நேரில் ஆஜராகவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. நாளை முதல் இருவரும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.