Also Watch
Read this
திமுக கூட்டணியில் இருந்தபோது அந்த கட்சியை தன்னைமீறி யாரும் தொட முடியாது என வீரவசனம் பேசிவந்த வைகோ, தற்போது தவெகவிற்கும் வரிந்துகட்டி சப்போர்ட் செய்து வருவதோடு, திருமாவின் பேச்சுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம் எனவும் தனது டிரேட்மார்க் சிரிப்போடு கலாய்த்து தள்ளி உள்ளார். எந்த கூட்டணியில் இருந்தாலும் அவர்களை தாஜா செய்வதில் வைகோ, ஜெகஜால கில்லாடி எனக்கூறி வரும் அரசியல் விமர்சகர்கள் தவெகவிற்கும் எதிர்காலத்தில் கம்பி நீட்டாமல் இருந்தால் சரி எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மறக்க முடியுமா?
திமுக கூட்டணியில் இருந்தபோது, வைகோ பேசிய பேச்சை எல்லாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. திமுகவை தொட வேண்டும் என்றால் அதற்கு முன்னால் என்னை தொட வேண்டும் என்று, அவ்வளவு உருத்தாக பல மேடைகளில் பேசி உள்ளார் வைகோ. அதனைகேட்டு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே ’அடடா, என்ன மனுஷன்யா?’ என புளகாங்கிதம் அடைந்ததுண்டு. அப்படிப்பேசிய வைகோ, தற்போது திமுகவைவிட்டு வெளியேறியதும் முகதாட்சண்யமா கிலோ எவ்வளவு? என்பதுபோல் வெளு வெளு என வெளுத்து வருகிறார்.

கேடயமாக வந்து நிற்பேன்
கடந்த காலங்களில் திமுகவிற்கு வைத்த அதே டெம்ப்லேட்டையே தவெகவிற்கும் மாற்றி, ஆளும் அரசுக்கு ஒரு ஆபத்து என்றால் கேடயமாக வந்து நிற்பேன் என ஓவராக பொங்குகிறார். மொத்தத்தில் அங்கீகரிக்கப்படாத தவெக கொள்கை பரப்பு செயலாளராகவே பம்பரமாக சுழன்று வருகிறார் வைகோ. திமுகவில் இருந்தபோது அவர்களின் நெஞ்சை வைகோ எப்படி குளிர வைத்தாரோ, அதே பார்மெட்டிலேயே தவெகவின் மனதையும் குளிர வைத்து வரும் நிலையில் எதிர்காலத்தில் விசிலுக்கும் வராமல் இருந்தால் சரி எனப்பேசி வருகிறார்களாம் அரசியல் விமர்சகர்கள்.

திருமாவளவன் உடன்...
அதேபோல், வாய் நிறைய அண்ணன் என அழைக்கும் திருமாவிடம்கூட சமீபத்தில் கோபித்துக்கொண்டார் வைகோ. அதிமுக ஆட்சிக்காலத்தில் கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை மதிமுகவினரால் உடைக்கப்பட்டது. அப்போது காவல் துறையினருக்கும், மதிமுகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கலவர சூழல் உருவானது. அந்தநேரத்தில், சங்கரன்கோவில் சென்றிருந்த திருமாவளவன் கலிங்கப்பட்டிக்கு ஓடிசென்று வைகோவுடன் போராட்ட களத்தில் உறுதுணையாக நின்றார். அப்போது இருந்தே ஆருயிர் தம்பி என திருமாவை அழைத்து வைகோ மனம் நெகிழ வைத்தார். அப்படி இருந்த அவர், திமுக கூட்டணியில் திருமாவுக்கு 8 இடங்களை ஒதுக்கி மதிமுகவிற்கு 4 இடங்களை ஒதுக்கியதும் ஆண் சந்திரமுகியாகவே மாறினார் வைகோ. அதிலும், உதயசூரியன் சின்னத்தில்தான் மதிமுக போட்டியிட வேண்டும் என திமுக அறிவித்ததும் கடுங்கோபமானார்.

மதிமுக vs விசிக
ஆனால், தும்பை விட்டுவிட்டு வாலை பிடித்ததுபோல் தொகுதிகளை ஒதுக்கிய திமுக தலைமையை விட்டுவிட்டு சம்மந்தமே இல்லாமல் விசிகவிடம் சினத்தை காட்டினார் வைகோ. அதன் வெளிப்பாடுதான் சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அவர், அமைப்பே இல்லாத கட்சிக்கு 8 தொகுதிகளா? என்ற கேள்வியை எழுப்பினார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் பேசிய வைகோவின் பேச்சு அப்படியே உல்டாவாக இருந்தது.

உங்களுக்கு வந்தால் ரத்தம்?
’நான் தற்போது தவெக கூட்டணியில் இருக்கிறேன், இந்த ஆட்சியில் குறைகள் தெரிந்தால் தொடர்புடைய அமைச்சரிடம் பேசுவேன் அல்லது முதல்வரை தொடர்புகொண்டு பேசுவேன், சாலையில் பேச மாட்டேன்’ எனக்கூறினார். இவரது இந்த பேச்சை கேட்ட விசிகவினர் உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? என ஒருபுறம் கேள்வி எழுப்பி வந்தாலும் தவெகவினர் யாரு சாமி நீங்க? இவ்வளவு நாளா எங்க இருந்தீங்க? இதற்கு முன்பே எங்களோடு இருந்திருந்தால் எங்களை ஒருவர் விரல் நீட்டி பேசி இருக்க முடியுமா? என உணர்ச்சி வசத்தில் கண்ணை கசக்கி கொண்டிருக்கிறார்களாம்.

’நோபல் பரிசே தரலாம்’
இதுஒருபுறமிருக்க, கோவில்பட்டியில் வைத்து வைகோவிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், தவெக அமைச்சரவையில் இருந்துகொண்டு திமுகவுடன் நட்புறவில் இருப்பதாக திருமா பேசி வருகிறாரே அதுகுறித்த உங்கள் பதில் என்ன என கேள்வி எழுப்பினர். அதற்கு, வழக்கம்போல தனது டிரேட்மார்க் சிரிப்பை உதிர்த்த வைகோ திருமாவின் பேச்சுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம் என கலாய்த்துள்ளார். வெறும் ஒரு வார்த்தையில் கலாய்த்திருந்தாலும் அதன் வீரியம் அதிகம் என விசிகவினர் கூறிவரும் நிலையில் அண்ணன் வைகோவிற்கு வயதாகிவிட்டது, அதனால் அவர் பேச்சை பெரிதுபடுத்த வேண்டாம் என கட்சியினருக்கு திருமா உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

திருமாவளவன் பதில்
இதனிடையே, நோபல் பரிசு கொடுக்கலாம் என கிண்டலடித்தது குறித்து திருமாவிடம் கேள்வி எழுப்பியபோது, அண்ணன் வைகோவின் பரிந்துரைக்கு நன்றி, நோபல் பரிசு கிடைத்தால் அவருக்குதான் நன்றி சொல்வேன் என பதில் கலாய் கொடுத்துள்ளார். இந்த அரசியல் நகைச்சுவை, நையாண்டி எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், எந்த கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறோமோ அந்த கட்சிக்கு மானாவாரியாக முகஸ்துதி செய்வதில் வைகோவை அடித்துக் கொள்ள முடியுமா?

இதே நிலை வரலாம்...
அதுவும்கூட இல்லாவிட்டால் இத்தனை ஆண்டுகள் அரசியல் களத்தில் இருந்துதான் என்ன பலன்? எனக்கூறும் அரசியல் விமர்சகர்கள் தவெக கூட்டணியில் இருக்கும்வரை பிரச்சனையில்லை, ஒருவேளை எக்ஸிட் ஆனால் தவெகவிற்கும் எதிர்காலத்தில் இதே நிலை வரலாம் எனவும் கூறி வருகின்றனர்.