Also Watch
Read this
By: Manigandan Raja

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து, சேயூர் அருகே ஒச்சாம்பாளையம் பகுதியில் காலம் காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தடுத்தது தொடர்பாக இருதரப்பினரிடையை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையில், ஒரு தரப்பைச் சேர்ந்த விவசாயிகள் ரவிச்சந்திரன் மற்றும் ரத்தினசாமி ஆகிய இருவர் மீது மற்றொரு தரப்பினர் கடந்த ஒரு மாதம் முன்பு அளித்த பொய்யான புகார் மீது சேயூர் போலீசார் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு புகார் பெற்று 15 தினங்கள் கடந்து வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும்,
போலீசாரின் இந்த செயலை கண்டித்தும், உண்மைக்கு மாறாக உள்நோக்கத்துடன் போடப்பட்ட இவ்வழக்கைத் திரும்பபப் பெறக் கோரியும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக இருநூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு சேவூர் காவல்துறைக்கு எதிராக கண்டன கோஷ முழக்கத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேயூர் கைகாட்டி ரவுண்டான பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஈஸ்வரன், கிராமிய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சம்பத், வேட்டுவபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் கணேசன் ஆகியோர் கண்டனவுரையாற்றினர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தீரன்சின்னமலை இளைஞர் பேரவையினர், பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பட்டத்தில் பங்கேற்றனர்.