Also Watch
Read this
கரூர் மாநகராட்சி கூட்டத்தில் முதல்வர் விஜய் படத்துக்கு அருகில் திமுக தலைவர் ஸ்டாலின் படத்தை திமுகவை சேர்ந்த மண்டல தலைவர் மாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாநகராட்சி கூட்டம்
தமிழகத்தில் தவெக ஆட்சியமைத்த பிறகு நடைபெறும் கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் முதல் கூட்டம் இன்று ஜூன் 08ஆம் தேதி நடைபெற்றது. மேயர், துணை மேயர், ஆணையர் இருக்கைக்கு பின்னால், முதல்வர் படம் வைப்பது மரபாக இருந்து வருகிறது. தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் படம் சுவரில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கரூர் மாநகராட்சியின் மேயர், துணை மேயர் மற்றும் பெரும்பாலான கவுன்சிலர்கள் எதிர்க்கட்சியான திமுகவை சேர்ந்தவர்களாக இருப்பதால், திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் படத்தை 1ஆவது வார்டு மண்டல தலைவர் சக்திவேல் முதல்வர் விஜய் படத்துக்கு அருகில், மாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இபிஎஸ், காமராஜர் படங்களால்...
தொடர்ந்து, மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தொடங்கியது. மேயர் திருக்குறள் வாசித்து கூட்டத்தை தொடங்கினார். அப்போது மாநகராட்சி கூட்டரங்கில் ஏற்கெனவே, திமுக தலைவர் ஸ்டாலின் படத்தை வைத்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி படத்தை அதிமுக கவுன்சிலர்களும், காமராஜர் படத்தை காங்கிரஸ் கவுன்சிலரும் எடுத்துக் கொண்டு வந்து வைக்கச் சொன்னதால் கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பெரும்பான்மை திமுக...
குறிப்பாக, கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டு கவுன்சிலர்களில் பெரும்பான்மை கவுன்சிலர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை வைத்ததாக பேசினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் பேசியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.