Also Watch
Read this
By: Fyrose Banu

மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் பட்டா வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் டென்ட் அமைத்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடருவோம் என அறிவித்துள்ளனர். 
இலவச வீட்டுமனை பட்டா கோரி மனு
வள்ளாலகரம் சேந்தங்குடி பகுதி மக்கள் இலவச வீட்டுமனை பட்டா கோரி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஆண்டு மனு அளித்திருந்தனர். அம்மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்த நிலையில், அப்பகுதியை ரூ.70,000 செலவு செய்து அடர்ந்திருந்த காடுகளை திருத்தி சுத்தம் செய்துள்ளனர். 
பட்டா வழங்க நடவடிக்கை இல்லை
ஆனால், 6 மாதங்களை கடந்தும் பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், அதே பகுதியில் ரயில்வே மேம்பாலத்துக்கு கீழ் வசித்த மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. தங்களுக்கு பட்டா வழங்கிவிட்டு, அதன்பிறகு மற்றவர்களுக்கு வழங்குங்கள் என்று அப்பகுதி மக்கள் கேட்டும் உரிய பதில் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மீண்டும் மனு அளித்த அப்பகுதி மக்கள், தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக அந்த இடத்தில் தங்களுக்கு பட்டா வழங்கப்படாவிட்டால், போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர். 
கடும் வெயிலில் காத்திருப்பு போராட்டம்
இந்நிலையில், நேற்று போராட்டம் நடத்த தயாரான மக்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வட்டாட்சியரை சந்தித்து தீர்வு காண அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து. அப்பகுதி மக்கள் வட்டாட்சியரை சந்தித்தபோது, அவர் மக்களின் கோரிக்கையை கேட்காமல் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று தாங்கள் சுத்தம் செய்து வைத்துள்ள இடத்தில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், டென்ட் அமைத்து இன்று காத்திருப்புப் போராட்த்தை தொடங்கியுள்ளனர். தகவலறிந்து அங்கு போலீசார் வந்த நிலையில், வருவாய்த்துறையினரும் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வராததால், தங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை அதே இடத்தில் காத்திருப்புப் போராட்டத்தை தொடர உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved