கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே S.I.R பணிகளில் ஈடுபட்டு வந்த கிராம நிர்வாக உதவியாளர் பணிச்சுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு தயாராகி கொண்டிருக்கிறது. அதே வேளையில் S.I.R என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. என்ன தான் தேர்தலின் ஒரு அங்கமாக S.I.R பணிகள் இருந்தாலும், உரிய கால அவகாசமும், பயிற்சியும் தரப்படாமல் அரசு ஊழியர்களை நெருக்கடியில் தள்ளி தேர்தல் ஆணையம் அவசரகதியில் இந்த நடைமுறையை தீவிரப்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டு இன்னமும் மேலோங்கி தான் உள்ளது. அதற்கு உதாரணமாக ஒரு உயிரும் பறிபோயிருப்பது தான் வேதனையின் உச்சம்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சிவனார்த்தங்கள் கிராம உதவியாளராக சந்தப்பேட்டையை சேர்ந்த ஜாஹிதா பேகம் பணியாற்றி வந்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஜாஹிதாவும் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. தான் பணி செய்யும் சிவனார்த்தங்கள் கிராமத்தில் 800 வாக்காளர்களுக்கான படிவம் தரப்பட்டுள்ள நிலையில், 80க்கும் குறைவான படிவங்களை மட்டுமே விநியோகித்து பூர்த்தி செய்து திரும்ப பெற்றதாக சொல்லப்படுகிறது.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்கி 15 நாட்களை கடந்து விட்டதாலும், இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதாலும் ஜாஹிதா பேகத்தை எச்சரித்து, மொத்த படிவத்தையும் பூர்த்தி செய்து திரும்ப பெற வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கெடு விதித்து அழுத்தம் தந்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகள் மட்டுமின்றி சில அரசியல் கட்சிகளை சேர்ந்த புள்ளிகளும் டார்ச்சர் செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கொடுத்த நெருக்கடியால் என்ன செய்வதன்று புலம்பிக் கொண்டிருந்த ஜாஹிதா பேகம், வேறுவழியே இன்றி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. பணி நெருக்கடியால் பெண் ஊழியர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சக ஊழியர்களின் நெஞ்சை உலுக்கியது. மதியம் வரை பணி புரிந்த ஜாகிதா இப்படி உயிரற்ற சடலமாய் இருப்பதை கண்டு சக ஊழியர்கள் மருத்துவமனையில் கண்ணீர் விட்டு அழுதனர்.ஜாஹிதாவின் கணவரோ, குடும்பத்தின் ஆணிவேரே அழிந்து விட்டதாக கூறி கதறுகிறார். அரசுக்கு இனி என்ன கோரிக்கை வைத்தால் என்ன? போன உசுரு வந்துருமா? என ஆதங்கம் கலந்த சோகத்தில் அழுது புலம்பியது காண்போரை கவலையில் ஆழ்த்தியது.ஜாஹிதா பேகம் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணையை துவக்கி இருக்கும் நிலையில், கோட்டாட்சியரும் வட்டாட்சியரும் நேரில் சென்று ஜாஹிதா உடலுக்கு மரியாதை செலுத்தி குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்து சென்றனர்.சொல்ல முடியாத வேதனைகளையும் மன உளைச்சலையும் வெளிக்காட்டாமல் உள்ளுக்குள் வைத்தே புழுங்கி கொண்டிருக்கும் இன்னும் எத்தனையோ பணியாளர்கள், பல்லை கடித்துக் கொண்டு SIR பணிகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அடுத்து ஒரு உயிர் போவதற்குள் கால அவகாசத்தையும், உரிய பயிற்சியையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதையும் பாருங்கள் - போலீஸ் வேலையில் தில்லுமுல்லு - சிதைக்கும் சிண்டிகேட் கும்பல் யார்? | PoliceExam | ForgeryNews