Also Watch
Read this
என்.எல்.சி. நிறுவனத்தின் சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக கடலூர் மாவட்டம் தென்குத்து கிராமத்தில் நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில், ஒரு செண்ட் நிலம் கூட கொடுக்க முடியாது என, கிராம மக்கள் உறுதியாக நிற்கின்றனர். கடலூரில் கொஞ்ச நஞ்சம் உள்ள விவசாயத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டு, மக்கள் வாழ்ந்ததற்கான சுவடே தெரியாத அளவுக்கு கடலூரை அழிக்கப் பார்ப்பதாக மக்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

மண்ணை பொன்னாக நினைத்து...
கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலமாகவும், வயலும் வயல் சார்ந்த மருத நிலமாகவும் உள்ள கடலூரை, பாலைவனமாக மாற்றும் வேலை தான் இந்த NLC சுரங்க விரிவாக்கம் என கிராம மக்கள் கொதித்துள்ளனர். மண்ணை பொன்னாக நினைத்து வாழ்ந்து வரும் மக்களை விரட்டியடித்து விட்டு மின்சாரம் தயாரிப்பது, வளர்ச்சியாக பார்க்க முடியாது, வீக்கமாக தான் பார்க்க முடியும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

பல ஆயிரம் ஏக்கர் நிலங்களையும்...
மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் மையம் கடலூர், நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்தின் பணி என்பது திறந்தவெளி சுரங்கங்களை அமைத்து நிலக்கரியை வெட்டியெடுத்து மின்சாரத்தை தயாரிப்பதே. நெய்வேலியில் மட்டும் நான்கு பழுப்பு நிலக்கரி சுரங்கங்களும், பல்வேறு அனல் மின் நிலையங்களும் செயல்பட்டு வரும் நிலையில், சுரங்கங்களை விரிவாக்கம் செய்து, கூடுதலாக நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கான வேலையில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தின் அழிவுக்கு...

தொடர் போராட்டங்கள்
இதற்காக உண்ணாவிரதம், சாலை மறியல், கடையடைப்பு போராட்டங்களை தொடுத்தும், மாவட்ட ஆட்சியர் முதல் பல்வேறு அதிகாரிகள் வரையிலும் மனுக்களை வழங்கியும் தென்குத்து கிராம மக்கள் தங்களது உரிமையை விட்டுக் கொடுக்காமல் இருக்கின்றனர்.

இந்த கிராமத்தில் நிலம் எடுப்பதற்கான முதல் அறிவிப்பு கடந்த 2016ஆம் ஆண்டே அரசு வெளியிட்டு இருந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக மறைமுகமாக மிரட்டி பார்ப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர்.

பாலைவனமாக மாற்ற விடாமல்...
குடியிருப்புக்கு அருகில் 50 மீட்டர் தொலைவிலேயே இந்த நிலக்கரி சுரங்கம் உள்ளதால் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தினந்தோறும் தங்களால் வாழ முடியாது என்கின்றனர் இந்த தென்குத்து கிராம மக்கள். தென்குத்து கிராமத்தில் வசிக்கும் பூர்வகுடிகளான தாங்கள் நிலம் வாங்குவதற்கும், விற்பதற்குமான பத்திரப்பதிவை நிறுத்தி வைத்துள்ள அரசாங்கம், என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரிவோருக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் பத்திரப்பதிவை செய்வதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். நிலக்கரி எடுத்து தென்குத்து கிராமத்தை பாலைவனமாக மாற்ற விடாமல், விவசாயத்தை தழைக்க வைக்க வேண்டுமென மக்கள் மாநில அரசை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved