Also Watch
Read this
Posted on: Feb 23, 2026 11:18 AM
By: Manigandan Raja
சேலம் மாவட்டம், சின்ன திருப்பதியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனின் அண்ணன் மகன் தன் மீது கொதித்த பாலை ஊற்றி கொடுமைப்படுத்தியதாக அவரது மனைவி பகீரை கிளப்பியுள்ளார். அமைச்சர் ராஜேந்திரன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுப்பதாக மனைவி குற்றம்சாட்டியுள்ள நிலையில், தேர்தல் சமயத்தில் பணத்தை பறிக்கும் முயற்சியில் அமைச்சர் பெயரை இழுத்துவிடுவதாக கணவன் சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
* குழந்தையை அழைத்து வர சென்றபோது ஏற்பட்ட தகராறு
* தேவியின் மீது கொதித்த பாலை ஊற்றிய மாமியார், கணவன்
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பல் மருத்துவர் தேவி. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனின் உடன் பிறந்த அண்ணனின் மகன் சண்முகத்துக்கும், தேவிக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், மூத்த மகன் தேவியுடனும், இரண்டாவது மகன் சண்முகத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், 4 வயதான இரண்டாவது மகனை அழைத்து வர கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்றிருந்த தேவியுடன், அவரது கணவரும், மாமியாரும் தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது, கொதித்துக் கொண்டிருந்த பாலை எடுத்து தேவியின் மீது அவரது மாமியார் ஊற்றியதில் மார்பு, கை என வெந்து போனதாகவும் சொல்லப்படுகிறது.
* "அமைச்சர் ராஜேந்திரன் மருமகன் வேறொரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை"
* "காவல்நிலையத்தில் புகார் அளித்தும் அமைச்சர் ராஜேந்திரன் தலையீடு"
இதுதொடர்பாக அம்பேத்கா் மக்கள் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேவி, கடந்த ஆண்டு தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கவிடாமல் அமைச்சர் ராஜேந்திரன் முட்டுக்கட்டை போடுவதாக பகீர் குற்றச்சாட்டை முன் வைத்ததோடு, இத்தனை பிரச்சனைக்கும் காரணம் அமைச்சரின் மருமகன் தான் என, திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளார். அமைச்சர் ராஜேந்திரன் மருமகன் வேறொரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை குறித்து தட்டிக்கேட்டதன் பேரிலேயே தனது கணவனுடன் பிரிவினை ஏற்பட்டதாக தேவி குற்றம்சாட்டியுள்ளார். காவல்நிலையத்தில் புகார் அளித்தும் அமைச்சர் ராஜேந்திரன் தலையிட்டு பதிவு செய்த FIRஐ கூட தள்ளுபடி செய்ததாக கூறியுள்ளார். மாறாக மாமியாரையும், கணவனை தாக்கியதாக தன் மீதே வழக்கை திசை திருப்பி விட்டதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
* "பணம் பறிக்கும் முயற்சியில் சிலருடன் சேர்ந்து கொண்டு அவதூறு"
* வீடும், ஒரு கோடி ரூபாயும் கேட்டதாக கணவன் குற்றச்சாட்டு
தேர்தல் சமயத்தில் பணம் பறிக்கும் முயற்சியில், தனது மனைவி சிலருடன் சேர்ந்து கொண்டு தங்கள் மீது அவதூறை பரப்புவதாக சண்முகம் புகார்களை அடுக்கினார். விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போதே தன்னிடம் வீடும், ஒரு கோடி ரூபாயும் மனைவில் செட்டில்மெண்ட் கேட்டதாகவும் ஆடியோவை போட்டுக்காட்டினார்.
கொதித்துக்கொண்டிருந்த பால் ஊற்றிய விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சண்முகம், தன்னையும், தனது தாயையும் சுத்தியலால் தாக்கி விட்டு, குழந்தையை அழைத்து செல்ல முற்பட்ட போது ஏற்பட்ட தகராறில் தேவி மீது பால் கொட்டிவிட்டதாகத் தெரிவித்தார். தன் மீதும், தாயின் மீதும் கூட பால் சிந்தியதாகவும் சண்முகம் மேலும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved