Also Watch
Read this
திருப்பத்தூரில், திருட்டு பணத்தில் கெத்தாக ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்த இளைஞன் திருடச் சென்ற இடத்தில் வசமாக சிக்கியதோடு போலீசாரிடமே வினோத விளக்கம் அளித்தது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. பெயர் போட்ட டீ.சர்ட் அணிந்து வந்து சிக்கிய இளைஞனின் சோக கதை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ஆன்-லைன் கேம், கோடிகளில் இழப்பு
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த வேடியப்பன் வட்டம் பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் சந்தோஷ். டிகிரி முடித்தும் வேலைக்கு செல்லாமல் ஊரை சுற்றி வந்ததோடு, செல்போன் மூலம் ஆன்லைன் கேம் விளையாடி சுமார் ஒன்றரை கோடி ரூபாய் இழந்ததாக கூறப்படுகிறது. பல பேரிடம் கடனை வாங்கி பணத்தை இழந்த சந்தோஷ், இதனை அடைக்க திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது போலீசாரின் வலையில் சிக்கிய போது அம்பலமானது.

சிசிடிவி கேமராவில்...
கம்பிட்டான் வட்டம் பகுதியை சேர்ந்த ஜெயசுதா என்பவர் வீட்டில் சந்தோஷ் திருட முயன்ற போது, இதனை வெளிநாட்டில் இருந்தபடியே சிசிடிவி கேமராவில் பார்த்த அவருடைய கணவர், உடனே காவல்துறைக்கு தகவல் அளித்தார். அப்போது சந்தோஷ் அணிந்திருந்த டி.சர்டில் பெயர் மற்றும் வீரப்பன் புகைப்படம் இருந்த நிலையில், அதனை குறிப்பிட்டுள்ளார்.

ஏதோ தனது சொந்த வீட்டிற்கு வருவது போலவே பைக்கில் வேகமாக வந்து யுடர்ன் அடித்த சந்தோஷ், சர்வ சாதாரணமாக வீட்டின் கதவு அருகே சென்று சாவியை தேடிய காட்சி, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. வடிவேல் ஒரு படத்தில் தலையில் இருக்கிற ’கொண்டையை மறந்துட்டேனே’ என்பது போல பெயர் போட்ட டி.சர்ட் அணிந்து வந்ததோடு சிசிடிவி கேமரா இருக்கிறதா? என்பதை கவனிக்காமல் வந்து வசமாக சிக்கினான்.

வினோத விளக்கம்
பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு சிக்காமல் இருந்து வந்தது தெரியவந்தது. குறிப்பாக வீட்டை பூட்டி சாவியை அங்கேயே வைத்துவிட்டு செல்லும் வீடுகளை குறிவைத்து திருடி வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ள சந்தோஷ், போலீசாரை திசை திருப்பவே சாவி உள்ள வீடுகளில் மட்டுமே திருடி வந்ததாக வினோத விளக்கம் கொடுத்துள்ளார். 
ரீல்ஸ் வீடியோ மோகம்
மேலும், குடும்பத்தில் உள்ளவர்கள் மீது சந்தேகத்தை கிளப்பும் வகையில் பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை முழுமையாக எடுக்காமல் பாதியை மட்டுமே எடுத்து சென்றதாகவும், அந்த பணத்தில் நண்பர்களுடன் ஜாலியாக ஊரை சுற்றி வந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டதையும் ஒப்பு கொண்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தோஷிடம் இருந்து 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய், 9 சவரன் நகை, 190 கிராம் வெள்ளி, பைக், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருடிய பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த ரீல்ஸ் பறவையின் இறக்கையை உடைத்து போலீசார் சிறைப் பறவையாக அடைத்து வைத்துள்ளனர்.