Also Watch
Read this
உலக அரசியலில் எப்போதுமே எதிரும் புதிருமாக இருக்கும் அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல், தற்போது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.
பகிரங்க எச்சரிக்கை
வழக்கமாக ஒரு நாட்டின் தலைவர் மறைந்தால் அடுத்த தலைவரைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், இங்கே தன் உயிருக்கு ஆபத்து வந்தால், அடுத்த நொடியே எதிரி நாட்டை எப்படிப் பந்தாட வேண்டும் என்று முன்கூட்டியே ஸ்கிரிப்ட் எழுதி வைத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். "என்னை நீங்கள் தொட்டால், வரலாற்றில் இதுவரை பார்க்காத அளவுக்கு உங்கள் மீது குண்டுமழை பொழியும்" என ஈரான் நாட்டிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார் டிரம்ப்.

தனக்கு ஏதேனும் நேர்ந்தால்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தன்னை ஈரான் தரப்பில், படுகொலை செய்ய முயன்றால், அதற்குப் பதிலடியாக அந்த நாட்டின் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான ராணுவ தாக்குதலை நடத்த ரகசிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நியூயார்க் போஸ்ட் நாளிதழுக்கு டிரம்ப் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில், ஈரான் நாட்டின் கொலைப் பட்டியலில் தான் நீண்ட காலமாக முதலிடத்தில் இருப்பதாகவும், ஒருவேளை தனக்கு ஏதேனும் நேர்ந்தால், ஈரான் நாடு இதுவரை கண்டிராத வகையில், அந்த நாட்டை முற்றிலுமாக குண்டுவீசி அழிக்க வேண்டும் என்று, தனது அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளதாகவும் ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.

’என்னை மிஸ் செய்வீர்கள்’
சமீபத்தில், டிரம்ப்பை கொலை செய்ய ஈரான் புதிய சதித்திட்டம் தீட்டியிருப்பதாக இஸ்ரேல் உளவுத்துறை அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதனை டிரம்ப் மறுத்துள்ளார். இஸ்ரேல் புதிய தகவல் எதையும் தரவில்லை. ஈரான் தன்னை பல ஆண்டுகளாகவே கொல்லத் துடிக்கிறது, இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல என்று டிரம்ப் கூறியுள்ளார். மேலும், தனது வழக்கமான பாணியில், ’ஒருவேளை நான் இறந்துவிட்டால் நீங்கள் என்னை மிஸ் செய்வீர்கள்’ என்று நம்புகிறேன் என நகைச்சுவையாகவும் பேசியுள்ளார்.

ஈரானின் சதி?
அங்காராவில் நடந்த நேட்டோ மாநாட்டிற்குப் பிறகும் இதே கருத்தை வலியுறுத்திய டிரம்ப், ஈரான் நாட்டின் அச்சுறுத்தல்களுக்கு தான் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை என்றும், ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை அமெரிக்கா கண்டிப்பாக அனுமதிக்காது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதில் இருந்தே, டிரம்ப்பை பழி வாங்க ஈரான் துடித்து வருகிறது. கடந்த 2024ல் பட்லரில் நடந்த பிரச்சாரத்தின் போது, டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலின் பின்னணியிலும் ஈரானின் சதி இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் முன்னர் குறிப்பிட்டிருந்தனர்.

தொடரும் பதற்றம்
தற்போது, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தன் 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தாலும், இரு நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டது என்பதை ஈரான் நினைவில் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார். தன்னைத் தாக்க நினைத்தால் ஈரானை உலக வரைபடத்தில் இல்லாத அளவுக்கு அழித்து விடுவேன் என்ற டிரம்ப்பின் இந்த அதிரடிப் பேச்சு, உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.