Also Watch
Read this
2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்காக தொழிலதிபரிடம் நிலத்தை லீசுக்கு எடுத்து அதனை ஆக்கிரமிக்க முயன்ற வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது வழக்கு பாய்ந்துள்ளது. ஒருநாள்விட்டு ஒருநாள் என்ற கணக்கில் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களே வழக்கில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதனை எப்படி சமாளிப்பது? அடுத்து யார் சிக்கப் கிறார்களோ? என திமுக தலைமை கடுங்குழப்பத்தில் இருக்கிறதாம்.

திமுக முன்னாள் அமைச்சர்கள்...
செந்தில் பாலாஜி, எ.வ.வேலு, கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் என திமுக மாஜி அமைச்சர்களின் வழக்கு வரிசையில் தற்போது த.மோ.அன்பரசனும் இணைந்துள்ளது அறிவாலயத்திற்கு தான் பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.
PCM Sons என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் சோமசுந்தரம் என்பவருக்கு சொந்தமான 5,500 சதுர அடி நிலம் சென்னை ஆலந்தூர் ஜோதி தியேட்டர் அருகில் உள்ளது. இந்த இடத்தை, கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது பணிமனை அமைப்பதற்காக திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசனின் உதவியாளர் ஜெய்சங்கர் என்பவர் வாடகைக்கு தருமாறு கேட்டுள்ளார். தற்காலிக வாடகை ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் எனவும் தேர்தல் வேலைகள் முடிந்தபிறகு நிலத்தை ஒப்படைத்து விடுவதாகவும் ஜெய்சங்கரும், அவருடன் வந்த பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் என்பவரும் கூறி உள்ளார்.

பணத்தை கண்ணில் காட்டவில்லை
இதனை நம்பிய தொழிலதிபர் ராஜேசும் நிலத்தை கொடுத்துள்ளார். ஆனால், தேர்தல் முடிந்தும் தா.மோ.அன்பரசன் தரப்பில் இருந்து வாடகை பணமும் வரவில்லை, நிலத்தையும் ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து ஜெய்சங்கரிடம் ராஜேஷ் கேட்டபோது, லீஸ் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம், தேர்தலை தொடர்ந்து பல்வேறு பணிகளுக்காக நிலம் தேவைப்படுவதாக கூறி உள்ளார். அதனையும் நம்பி தொழிலதிபர் சரி என தலையாட்டி உள்ளார். அதன்பிறகு, தவறான தகவல்கள், போலி முகவரி மூலம் அந்த லீஸ் ஒப்பந்தத்தை தா.மோ.அன்பரசன் தரப்பினர் முடித்ததாக தெரிகிறது. உஷாராக ஒப்பந்தம் போட்டார்களே தவிர அதற்கான பணத்தை கண்ணில் காட்டவில்லை என கூறப்படுகிறது.

புகார், வழக்குப்பதிவு
இதனால் பொறுமையிழந்த ராஜேஷ், இடத்தை காலி செய்து கொள்ளுங்கள் என ஜெய்சங்கரிடம் கூறி உள்ளார். ஆனால், இடத்தை காலி செய்யாத த.மோ.அன்பரசன் தரப்பு அதனை முழுமையாக ஆக்கிரமிக்கவும் முயன்றதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாது, கடந்த ஜூன் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு தா.மோ.அன்பரசன், ராஜேஷை நேரில் வரவழைத்து, ஒருவார காலத்திற்குள் நிலத்தை தன்னிடம் ஒப்படைக்கும்படி தொழிலதிபரை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கடந்த மாதம் 29ஆம் தேதி முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அதன்பிறகு வழக்குப்பதிவு செய்து பரங்கிமலை போலீசார் விசாரணையில் இறங்கியபோது ராஜேஷின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, தா.மோ.அன்பரசன், அவரது உதவியாளர் ஜெய்சங்கர், பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திமுக தலைமை கோபம்
தவெக எம்எல்ஏக்களிடம் குதிரைபேரம் நடத்திய வழக்கில் செந்தில் பாலாஜி, ஊரக வளர்ச்சித்துறையில் வேலைவாய்ப்பு முறைகேட்டில் ஈடுபட்டதாக கே.என்.நேரு, முதலமைச்சர் குறித்து தகாத வார்த்தைகளில் பேசிய அவதூறு வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கில் எ.வ.வேலு என கடந்த சில நாட்களாக திமுக முன்னாள் அமைச்சர்களே காவல்துறையின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது த.மோ.அன்பரசனும் நிலத்தை அபகரித்தது தொடர்பான வழக்கில் சிக்கி உள்ளது திமுக தலைமையை கோபத்திற்கு ஆளாக்கி உள்ளதாம். ஆளுங்கட்சியை விமர்சனம் செய்து வீழ்த்தலாம் என நினைத்தால் சொந்த கட்சியில் உள்ளவர்களின் வழக்குகளுக்கே நேரத்தை செலவழிப்பதா? என திமுக தலைமை கடுப்பில் உள்ள நிலையில் அடுத்த வழக்கில் எந்த மாஜி அமைச்சர் சிக்கப்போகிறாரோ? என்ற பதற்றத்திலும் உள்ளதாம்.