news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news DVAC இயக்குநர் பதவி பறிப்பு, ஏடிஜிபி அருண் மாற்றத்தின் பகீர் பின்னணி
tv

Also Watch

tv

Read this

DVAC இயக்குநர் பதவி பறிப்பு, ஏடிஜிபி அருண் மாற்றத்தின் பகீர் பின்னணி

தவெக தலைமை அதிருப்தி?

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த ஏடிஜிபி ஏ.அருண், அப்பதவியில் இருந்து அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். திமுக ஆட்சிக் காலத்தில் செல்வாக்குமிக்க நபராக வலம்வந்த அவரை, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவிக்கு நியமித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அருணின் திடீர் மாற்றத்திற்கான காரணங்கள் என்ன?

அரசியல் சர்ச்சை
புதிய அரசு பொறுப்பேற்றதும், தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை அதிகாரம் மிக்க பதவியில் பணியமர்த்துவதும், முந்தைய ஆட்சியில் கோலோச்சிய அதிகாரிகளை டம்மி போஸ்டிங்கிற்கு இடமாற்றம் செய்வதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால், ஒரு சில அதிகாரிகளின் நியமனம் மற்றும் இடமாற்றம் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவது உண்டு.
அந்த வகையில், புதிதாக ஆட்சிக்கு வந்த தவெக அரசில், கூடுதல் டிஜிபியான ஏ.அருணின் நியமனம் அரசியலில் பேசுபொருளான நிலையில், அவரது இடமாற்றமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காத்திருப்பு பட்டியலுக்கு இடமாற்றம்
கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தின் போது, சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ஏ.டி.ஜி.பி. அருண் மீது அரசியல் கட்சிகள் புகார் கூறிய நிலையில், அவரை கட்டாய காத்திருப்புக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தது இந்திய தேர்தல் ஆணையம். தேர்தல் முடிந்து, தமிழகத்தில், தவெக தலைவரான விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு, நிர்வாக வசதிக்காக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உள்பட பல்வேறு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தவெக அரசு அதிரடி நடவடிக்கை
அந்த வகையில், கட்டாய காத்திருப்பில் இருந்த கூடுதல் டி.ஜி.பி.யான ஏ.அருணை, ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமித்து கடந்த மே 25 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது தமிழ்நாடு அரசு. காவல்துறையில் மிக முக்கிய பதவியாக பார்க்கப்படும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்புக்கு, கடந்த திமுக ஆட்சியில் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்ததாக கருதப்பட்ட ஏடிஜிபி அருணை நியமித்தது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.

DVAC இயக்குநராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு
சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தபோது, அருணின் சட்ட நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பலர் சமூக ஊடகங்களில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரது நியமனத்திற்கு அரசியல் சாயமும் பூசப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், மாநிலம் முழுவதும் உள்ள சார்-பதிவாளர் அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் திடீர் ரெய்டு நடத்தி, கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை கைப்பற்றி அதிரடி காட்டினார் ஏடிஜிபி அருண்.

சோதனை குறித்த தகவல் முன்கூட்டியே கசிவு?
அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை முறைகேடு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது லஞ்ச ஒழிப்புத்துறை. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் எ.வ.வேலுவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், மருத்துவ சிகிச்சையை காரணம் காட்டி, சிங்கப்பூருக்கு அவர் பறந்து சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது, லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்த தகவல் எ.வ.வேலு தரப்புக்கு முன்கூட்டியே கசிய விடப்பட்டதாகவும், அதன் பின்னணியில் ஏடிஜிபி அருணின் கைங்கர்யம் இருப்பதாகவும் பேசப்பட்டது.

தவெக தலைமை அதிருப்தி?
இதற்கிடையே, ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த விவகாரம், நீதிமன்ற சம்மன்களை வழங்குவதற்காக சென்ற நீதிமன்ற ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருக்க வைத்த விவகாரம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் விமலா பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் உயர் நீதிமன்றத்தின் விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டதும், அருண் மீது தமிழ்நாடு அரசு அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

யாருக்கும் சிபாரிசு செய்யவில்லை- திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவனின் பரிந்துரை பேரிலேயே லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக அருண் நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உலவிவந்த நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சியில் பேசிய திருமா, காவல்துறை அதிகாரிகள் யாருக்கும் தாம் சிபாரிசு செய்யவில்லை என்று வெளிப்படையாக ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார் திருமா.

ஏ.டி.ஜி.பி. அருண் இடமாற்றம்
இந்த நிலையில், ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரான ஏடிஜிபி அருணை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், அருணுக்கு பதிலாக லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. சி.மகேஸ்வரி கூடுதலாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி மாற்றம், காரணம்
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பில் வெறும் 50 நாட்களே இருந்த அருணை, செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரியில் உள்ள காவலர் பயிற்சிப்பள்ளி இயக்குநராக நியமித்து உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. 

தொடர்ந்து எழுந்த நீதிமன்ற விமர்சனங்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் முறைகேடு தொடர்பான வழக்குகளில் ஏடிஜிபி அருண் கையாண்ட விதத்தில் தவெக அரசின் தலைமைக்கு ஏற்பட்ட அதிருப்தியே, இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

Related Link

"திமுககாரன் ஓடவும் மாட்டான், ஒளியவும் மாட்டான்" ஏர்போர்ட்டில் இறங்கியதும் எ.வ.வேலு அதிரடி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல் அரையிறுதி சுற்றில் பிரான்ஸ் - ஸ்பெயின் பலப்பரீட்சை

5
17 mins agoshare
பிஃபா உலகக் கோப்பை சாம்பியன் ரேசில் முந்துவது யார்?








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau