டிட்வா புயல் வலுவிழந்தாலும், சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனர்.சென்னையில் அதிவேக காற்றுடன் இடை விடாமல் கனமழை பெய்து, கடலும் ஆக்ரோஷமாக காணப்பட்டதால், மெரினா கடற்கரைக்கு செல்ல பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கடற்கரைக்கு செல்லும் வழிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தொடர் கனமழையால், சென்னை பெரம்பூர் கணேசபுரம் சாலையில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். கழிவுநீரும் மழைநீருடன் கலந்து ஓடியதால் துர்நாற்றம் வீசியது. சென்னை அண்ணா சாலை, புதுப்பேட்டை, திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், தி.நகர், மேற்கு மாம்பலம், விருகம்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடை விடாமல் கனமழை வெளுத்து வாங்கியது. எதிரே வந்த வாகனங்கள் தெரியாத நிலையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி வாகன ஓட்டிகள் பயணித்தனர்.சென்னை, தேனாம்பேட்டையில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்ட நிலையில், விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்திலேயே வாகனங்களை இயக்கினர். மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்திலும் மழைநீர் தேங்கியது. மழைநீரை மோட்டார் மூலம் அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர். சென்னை, புதுப்பேட்டையில் கழிவுநீருடன் கலந்து மழைநீர் சூழ்ந்தது. முழங்கால் அளவுக்கு குளம் போல் தேங்கியதால் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமம் அடைந்தனர். சென்னை, அசோக் நகர் அம்பேத்கர் சாலையில் மழைநீர் தேங்கியதால் வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்தன.