Also Watch
Read this
ஒவ்வொரு ஆண்டும் மே 31ஆம் தேதி உலகப் புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ஆண்டு தோறும் 80 லட்சம் பேர்
’மனிதர்களுக்கான அடிப்படை தேவை உணவுதான், புகையிலை அல்ல' என்ற முழக்கங்களைத் தாண்டி, இன்று உலகை அச்சுறுத்தும் மிக முக்கியமான பொதுச் சுகாதாரச் சவாலாகப் புகையிலை உருவெடுத்துள்ளது. உலகளவில் ஏற்படும் மரணங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த காரணியாக இது இருந்தாலும், புகையிலை நிறுவனங்களின் நவீன யுக்திகள் இளைஞர்களை மாய வலையில் சிக்க வைக்கின்றன. புகையிலை பயன்பாட்டால் ஆண்டுதோறும் 80 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பதாக கூறுகிறது உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அதிகாரப்பூர்வமான தரவுகள். இதில் மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால், புகையிலை பழக்கமே இல்லாத சுமார் 12 லட்சம் முதல் 13 லட்சம் பேர், மற்றவர்கள் வெளியிடும் புகையினால் தங்கள் இன்னுயிரை இழக்கின்றனர்.

ஆரோக்கியம் கேள்விக்குறி
தற்போது உலகளவில் சுமார் 120 கோடி பேர் புகையிலை பயன்படுத்துவதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இருக்கின்றன. புகையிலை நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, 'Bright Products, Dark Intentions' என்ற 2025ஆம் ஆண்டின் கருப்பொருளுக்கிணங்க, கண்ணைக் கவரும் வண்ணங்களில் புகையிலை பொருட்களைச் சந்தைப்படுத்துகின்றன. குறிப்பாக, 13 முதல் 15 வயதுக்குட்பட்ட 4 கோடிக்கும் அதிகமான சிறுவர்கள் ஏற்கெனவே ஏதேனும் ஒரு வடிவத்தில் புகையிலையைப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் எதிர்காலச் சந்ததியினரின் ஆரோக்கியத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
உலகளவில் 2ஆவது இடம்
புகையிலை உற்பத்தி மற்றும் நுகர்வில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது . இந்தியாவில் மட்டும் புகையிலையினால் ஆண்டுதோறும் சுமார் 13.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதாவது நாளொன்றுக்குச் சராசரியாக 3,700 உயிர்கள் புகையிலை பயன்பாடு காரணமாக பறி போகின்றன. இந்தியப் பெரியவர்களில் சுமார் 28.6% பேர் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். தேசிய புற்றுநோய் பதிவேட்டுத் திட்டத்தின் (ICMR) தரவுகளின்படி, இந்தியாவில் பதிவாகும் மொத்த புற்றுநோய் பாதிப்புகளில் 27% புகையிலை பயன்பாட்டினால் மட்டுமே ஏற்படுகின்றன. நுரையீரல், வாய், தொண்டை, இரைப்பை மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய்களுக்குப் புகையிலையே முதன்மைக் காரணியாக அமைகிறது. குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் இந்த பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது கவலையளிக்கும் அம்சமாக மாறியிருக்கிறது.

தமிழ்நாட்டின் நிலை?
தென்னிந்தியாவிலேயே தமிழகம் புற்றுநோய் பாதிப்பில் முதன்மையான மாநிலமாகத் திகழ்கிறது. 2024ஆம் ஆண்டில் தமிழகத்தில் 98,386 புதிய புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு 25% அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பெரியவர்களில் 10.2% பேர் புகையிலை பயன்படுத்துகின்றனர். இதில் வேதனையான தகவல் என்னவென்றால், கிராமப்புறங்களில் ஆண்களிடையே புகையிலை பயன்பாடு 23.3% ஆக உள்ளது. சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு மட்டும் ஆண்டுதோறும் சுமார் 5,000 புதிய நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மூன்றாம் அல்லது நான்காம் கட்டத்திலேயே புற்றுநோயைக் கண்டறிகின்றனர். இந்த தாமதம் சிகிச்சையின் வெற்றியைக் குறைப்பதாக கூறப்படுகிறது.
இ-சிகரெட் ஒரு சவால்
புகையிலை நிறுவனங்கள் இப்போது தங்கள் யுக்தியை மாற்றி சாதாரண சிகரெட்டுகளுக்கு மாற்றாக, 'இ-சிகரெட்' மற்றும் 'நிக்கோட்டின் பைகள்' (Nicotine pouches) போன்ற நவீனப் பொருட்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கின்றன. இவை பாதிப்பில்லாதவை என்ற மாய பிம்பத்தை உருவாக்கினாலும், இவை சிகரெட்டுகளை விடத் தீவிர அடிமைத்தனத்தை உண்டாக்கக் கூடியவை என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்தியாவில் இ-சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் (PECA 2019), மறைமுகச் சந்தைப்படுத்துதல் இன்றும் ஒரு சவாலாகவே உள்ளது என்கின்றனர் சுகாதாரத் துறை வல்லுநர்கள்.

நோய் இருப்பது தெரியாமல்...
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், அவற்றை பயன்படுத்துபவரை எப்படி அடிமையாக்கி, நோயாளியாக மாக்குகிறது என்பதையும், அதில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக விளக்கியுள்ளார் ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டீன் கண்ணன். மருத்துவமனைக்கு நாள்தோறும் வரும் சுமார் ஆயிரம் பேர்களில் 100 பேராவது சிகரெட், பீடி, குட்கா உள்ளிட்ட பழக்கத்திற்கு அடிமையானவர்களாக இருப்பதாகவும், அவர்களில் 30 பேர் புற்று நோய் அறிகுறிகளுடனும், 10 பேர் புற்றுநோய் பாதித்தவர்களாகவும் உள்ளதாக அவர் கூறியுள்ளார். அந்த பத்து பேரிலும் பலருக்கு தங்களுக்கு நோய் பாதிப்பு இருப்பது தெரியாமலேயே மருத்துவமனைக்கு வரும் நிலையில், அவர்களை காப்பாற்ற முடியாமலே போய்விடும் நிலை உள்ளது என்ற அதிர்ச்சி தகவலையும் கண்ணன் தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் தானே...
டீன் ஏஜ் இளைஞர்கள் சிகரெட் பிடிப்பதை ஸ்டைல் என நினைத்து எப்போதாவது ஒரு நாள் தானே ஆரம்பிக்கும் நிலையில், சிகரெட்டில் உள்ள நிக்கோடின் படிப்படியாக அவர்களை அதற்கு அடிமையாக்கி விடுவதுடன், சிகரட்டில் உள்ள டார் (Tar) என்ற கருமையான கழிவுப் பொருள் உடலுக்குள் சென்று நுரையீரலில் படிந்து உயிருக்கே உலை வைக்கிறது. சிகரெட் புகைத்தவுடன் உடலுக்கு ஏற்படும் புத்துணர்ச்சி என்பது நமது உடலில் இருந்து நிக்கோடினின் பாதிப்பு உடலுக்குள் போகும்போது, படிப்படியாக குறைந்து மந்தமாக்குவதுடன், இன்னொரு சிகரெட் புகைக்கலாம் என்ற மனநிலை ஏற்பட்டு, சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டால் கூட சிகரெட் ஒன்றுதான் தீர்வு என்ற நிலைக்கு தள்ளப்படுவோம்.

மன உறுதி மட்டுமே...
உடலிலேயே தங்கிவிடும் டார் (Tar), புற்றுநோயை உண்டாக்கக் கூடிய கார்சினோஜன் (Carcinogen) கெமிக்கலை உருவாக்கி முதலில் வாய்ப்பகுதியில் அதற்கான அறிகுறியை காட்டும். வாயில் வெள்ளை படலம் ஒன்று ஏற்பட்டு, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வாயே திறக்க முடியாத அளவுக்கு சதைகள் எல்லாம் நாராக மாறி இறுகுவது புற்றுநோயின் முதல் நிலையாகும்.
நோய் பாதித்த பிறகு, கவுன்சிலிங் கொடுத்தாலும் சிகரெட்டின் அளவை மட்டுமே குறைப்பவர்கள், அதில் இருந்து முற்றிலும் விடுபட முடியாமல் தவிப்பதாகவும், சிகரெட் பழக்கத்தை விடுவதற்கு மன உறுதி ஒன்று மட்டுமே போதும் என்றும் கண்ணன் தெரிவித்துள்ளார்.
சமூக மாற்றம்
ஒருமுறை புற்றுநோய் பாதித்துவிட்டால் படிப்படியாக அதிகரித்து வாழ்வதை விட சாவதே மேல் என்ற அளவுக்கு கொடுமையான நிலைக்கு தள்ளப்படுவதுடன், அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படும் நிலையில் இருந்து தப்பிக்க ஒரே தீர்வு சிகரெட் பழக்கத்தை முற்றிலும் கைவிடுவது மட்டும் தான் என வலியுறுத்துகிறார் டாக்டர் கண்ணன். புகையிலைப் பழக்கத்தைக் கைவிடுவது என்பது ஒரு தனிமனித முடிவாக மட்டுமல்லாமல், ஒரு சமூக மாற்றமாக மாற வேண்டும் என்ற முழக்கம் எழுந்துள்ள நிலையில், புகையிலை பழக்கத்தைக் கைவிட விரும்புவோர் தேசிய புகையிலை விலகல் உதவி எண்ணான 1800-11-2356-ஐத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

இந்த ஆண்டின் உறுதிமொழி
சட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும் (COTPA 2003), புகையிலை நிறுவனங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களுக்கு மயங்காமல் இருப்பதும், ஆரம்பக் கட்டத்திலேயே புற்றுநோயைக் கண்டறிவதும் மட்டுமே நம் உயிரைக் காக்கும். ஆபத்தானது என்றாலும் ஈர்க்கப்படுவதை தவிர்த்து புகையிலையற்ற சமுதாயத்தைப் படைப்போம்' என்பதே இந்த ஆண்டின் உறுதிமொழியாக இருக்கட்டும்.