Also Watch
Read this
By: Web Team

தவெக தலைவர் விஜய் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு 23 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஏற்று தவெக பிரச்சாரம் திருச்சியில், சனிக்கிழமையன்று செப்.13ஆம் தேதி நடைபெற உள்ளது.
கட்டுப்பாடுகளின் விவரம்;
1. திருச்சியில் பிரச்சாரம் செய்யும் இடம், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வணிகப் பகுதி என்பதால், காலை 10.35 மணி முதல் 11 மணி வரை நடக்கும் பரப்புரைக்கு கட்சியினர் காலை 9.35 மணிக்குள் வர வேண்டும்.
2. தவெக தலைவர் விஜய் எந்தப் பகுதியிலும் ரோடு ஷோ, வரவேற்பு நிகழ்ச்சி நடத்தக் கூடாது.
3. விஜய்யின் வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படாது.
4. முன்னும் பின்னும் தவெகவினர் ஊர்வலமாக வரக் கூடாது. பட்டாசு வெடிக்க அனுமதியில்லை. எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் வைத்திருக்க கூடாது. இசைக்குழு பயன்படுத்தக் கூடாது.
5. பரப்புரையின் போது வரக் கூடிய வாகனங்களுக்கு உண்டான பார்க்கிங் வசதிகளை தாங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
6. காவல்துறை அனுமதிக்கும் வழித்தடத்தில் மட்டுமே பரப்புரைக்கு வருபவர்கள் வர வேண்டும்.

7. கர்ப்பிணிகள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் வருவதை தவிர்த்திட வேண்டும்.
8. விஜய் பரப்புரையின் போது கலந்து கொள்ளும் எவரும் கம்பு, குச்சி, பிற ஆயுதங்கள் எதையும் வைத்திருத்தல் கூடாது.
9. பொது மக்களுக்கும், சட்டம்-ஒழுங்கிற்கும் இடையூறு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
10. மருத்துவ வசதி, குடிநீர், முதல் உதவி சாதனங்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு சாதனங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
11. காவல்துறைக்கு உதவியாக தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
12. பிறர்மனம் புண்படும் வகையிலோ, பிற ஜாதி, மதத்தினரை புண்படுத்தும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது.
13. பெட்டி வடிவ ஒலிபெருக்கியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ குழாயை கட்டாயம் பயன்படுத்தக் கூடாது.
14. மாவட்ட வாரியாக யார் தலைமையில் எத்தனை வாகனங்களில், எத்தனை தொண்டர்கள் வருவார்கள் என்ற விவரமும், தலைமை தாங்கி அழைத்து வரும் பிரதிநிதிகள் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களும் முன்னதாகவே அளிக்கப்பட வேண்டும்.
15. பொது சொத்துக்கோ, தனியார் சொத்துக்கோ, சேதம் ஏற்படுத்தக் கூடாது. சேதம் ஏற்படுத்தினால், சூழ்நிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டம், ஒழுங்கு நிலை நிறுத்தப்படும்.

16. அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்கு கம்பங்கள், மின் மாற்றிகள், வாகனங்கள், கொடிக் கம்பங்கள், சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மீது ஏறிக் கொண்டு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
17. பரப்புரை முடிந்தவுடன் அமைதியான முறையில் கலைந்து செல்ல வேண்டும்.
18. பிளக்ஸ் பேனர், அலங்கார வளைவு, கொடி கட்டப்பட்ட கம்பி ஆகியன உரிய அனுமதி பெறாமல் வைக்க கூடாது.
19. பரப்புரையில் அனைவரும் காவல்துறை விதிகளுக்கு உட்பட்டே நடந்து கொள்ள வேண்டும்.
20. பொது மக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள், குழந்தைகள், முதியோர், நோயாளிகளின் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும்.
21. பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், நடந்து கொள்ள வேண்டும். ஆம்புலன்ஸ் சென்று வர எவ்வித தடங்கலும் ஏற்படுத்தக் கூடாது.

22. மேலே கூறப்பட்டுள்ள அனைத்து விதிமுறை மற்றும் காவல் அதிகாரிகளால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுரைகளையும் பின்பற்றி நடப்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
23. நிபந்தனைகளில் எவையேனும் மீறப்படும் பட்சத்தில் பரப்புரையை இடையிலேயே நிறுத்துவதற்கு காவல்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது
இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை ஏற்று, திருச்சி பிரச்சாரத்திற்கு தவெக தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.
நாளை சுற்றுப்பயணம்..இன்றே விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு| VijayCampaign | Vijay Trichy | TvkVijay