Also Watch
Read this
இந்தியா முழுவதும் 1500 முக்கிய இடங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, விபரீத விளையாட்டு விளையாடிய நெல்லையை சேர்ந்த அமெரிக்க சாஃப்ட்வேர் இன்ஜினியரை சென்னை ஏர்போர்டில் அதிகாரிகள் கைது செய்தனர். அடையாளத்தை மறைக்கும் ஆனியன் ரூட்டர் உள்ளிட்ட டெக்னாலஜி மூலம் 3 ஆண்டுகளாக அலறவிட்ட நபர், தற்போது காக்கிகளிடம் சிக்கியது எப்படி? அவரை கண்டுபிடிக்க காவல்துறை மேற்கொண்ட உத்திகள் என்ன?
தொடர் வெடிகுண்டு மிரட்டல், போலி...
கடந்த 2023 முதல் 2025 வரை இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்கள், பிரபல கல்வி நிறுவனங்கள், அரசியல் பிரமுகர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள், சினிமா பிரபலங்கள், மூத்த காவல் அதிகாரிகளின் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக மின்னஞ்சல் மூலம் அடிக்கடி மிரட்டல் வந்தது. மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளுடன் ஒவ்வொரு இடங்களுக்கும் வெடிகுண்டு நிபுணர்கள் அரக்க பறக்க ஓடியும் வெடிகுண்டுகளை மட்டும் கைப்பற்றியதே இல்லை. அதன் பிறகு தான், அது போலி வெடிகுண்டு மிரட்டல் என்பதே தெரியவந்தது. கிட்டத்தட்ட ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட இடங்களில் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஒரே நபர்தான் என்பது மட்டும் போலீசாருக்கு பொறி தட்டியது. ஆனாலும், டார்க் வெப் (Dark Web) மற்றும் Virtual Private Network என அழைக்கப்படும் VPN தொழில்நுட்பங்கள் மூலம் மிரட்டல் வந்திருந்ததால் மர்மநபரை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.

ஒரு வெங்காயத்தைப் போல...
வழக்கமாக .com அல்லது .org என்றுதான் மின்னஞ்சல் முகவரி முடியும். ஆனால், டார்க் வெப் (Dark Web) .onion என குறியீட்டுடன் முடிவடையும், இதன் மூலம் நெட்வொர்க் பயனர்களின் லொகேஷன் மற்றும் அவர்களின் தரவுகளை கண்டறிய இயலாது. ஒரு வெங்காயத்தில் எப்படி பல அடுக்குகள் உள்ளதோ அது போன்று தான் அடையாளமும் மறைக்கப்பட்டிருக்கும். இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்த மிரட்டல்நபர், ஒருமுறை சிறு மறதியால் தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் இருந்து தவறுதலாக அதிகாரிகளுக்கு பதிலளித்து மாட்டிக் கொண்டார்.

தனிப்பட்ட முகவரியால்...
எந்த ஒரு குற்றத்திற்கும் நிச்சயம் ஏதாவது ஒரு ஆதாரம் இருந்தே தீரும் என காவல்துறையினர் ஆழமாக நம்புவதுண்டு. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை என்பது போல தனது தனிப்பட்ட முகவரி மூலம் வசமாக சிக்கிய நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 6 மாதங்கள் அவரது நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு, லுக் அவுட் நோட்டீசும் (LOC) பிறப்பிக்கப்பட்டது.

டெக்னாலஜியால் அலற விட்டவர்...
இந்நிலையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சரத் சுப்பிரமணியன் சங்கர் என்பவர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பதும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டினில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் அவர் பணியாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றை பட்டனை தட்டிக் கொண்டு, இருந்த இடத்திலேயே இருந்தபடி இந்தியாவையே டெக்னாலஜி மூலம் அலறவிட்டதும் அவர்தான் என்பதும் உறுதியானது.

சென்னை விமான நிலையத்தில்...
அதன்பிறகு, சரத் சுப்பிரமணியன் சங்கரை வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு விரட்டும் வேலையை லுக் அவுட் நோட்டீஸே செய்தது. அதனால், வேறு வழியின்றி பெட்டி படுக்கைகளுடன் எதிஹாட் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை ஏர்போர்ட்டிற்கு வந்தார் போலி வெடிகுண்டு மிரட்டல் டெக்னாலஜிமேன் சரத். அங்கு ஏற்கெனவே தயார் நிலையில் இருந்த அதிகாரிகள், டெக்னாலஜி மூலமா எங்களுக்கா பாடம் எடுக்கிறாய்? நாங்கள் எடுக்கிறோம் சிறையில் சிறப்பான பாடம் என்பதுபோல் அங்கேயே விலங்கால் லாக் செய்தனர்.