news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 50 ஆண்டை கடந்தும் ஓயாத இசை, இசைஞானியின் இசை ராஜாங்கம்
tv

Also Watch

tv

Read this

50 ஆண்டை கடந்தும் ஓயாத இசை, இசைஞானியின் இசை ராஜாங்கம்

அதிசயம் நிகழ்த்திய ’அன்னக்கிளி’

29

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்து இசை ராஜாங்கம் நடத்தி வரும் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, திரையிசை பாடல்களில் பல புதுமைகளை புகுத்தி, இசை ரசிகர்களை மெய் மறக்கச் செய்தவரின், சாதனைக்கு வித்திட்டது அன்னக்கிளி திரைப்பட பாடல்கள் தான். திரையிசை உலகில் திருப்புமுனையை ஏற்படுத்திய அன்னக்கிளி திரைப்படம் வெளியான நாளில், அப்படத்தின் பாடல்களின் நினைவுகளை தற்போது திரும்பி பார்ப்போம்.

முதல் திரைப்படம் அன்னக்கிளி
1976 மே 14 ஆம் தேதி. தமிழ்த் திரையுலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கிய நாள். அறிமுக இசையமைப்பாளர், தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருந்த இந்தி திரையிசை பாடல்களுக்கு, தம்முடைய ஒற்றை திரைப்படத்தின் மூலம் அணை போட்டவர். முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்து மேஜிக் செய்தவர். அன்று தொடங்கிய பயணம் அரை நூற்றாண்டு கடந்து, இன்றுவரை இசை ராஜாங்கம் நடத்திவரும் இசைஞானி இளையராஜாவின் முதல் திரைப்படமான அன்னக்கிளி.

இந்தி பாடல்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்திருந்த காலம்
1976ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி கருப்பு வெள்ளை திரைப்படமாக வெளியான அன்னக்கிளி, தமிழ்நாடு மட்டுமல்லாமல் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என கடல் கடந்து வாழ்ந்து வந்த தமிழர்களையும் சுண்டியிழுக்க முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் அப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. 1960களில் இந்தி திணிப்பை எதிர்த்து களம் கண்டு, அதில் வெற்றியும் கண்ட தமிழர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திய காலகட்டத்தில், கலை, கலாச்சாரம் என்ற போர்வையில் திரைப்பட பாடல் வழியாக தமிழ்நாட்டை ஹிந்தி ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

இந்தி பாடல்களை ஓரம்கட்டிய அன்னக்கிளி பட பாடல்கள்
வடநாட்டு இசைக் கலைஞர்களான ஆர்.டி.பர்மன், நௌஷத் அலி, பியாரிலால் போன்றவர்களின் ஹிந்தி பாடல்கள் தமிழ்நாட்டின் மூளை முடுக்கெல்லாம் எதிரொலித்துக் கொண்டிருந்தன. தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் கூட பாமரர்களும் ஹிந்திப் பாடல்களை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஒட்டுமொத்த பாலிவுட் உலகமும் தமிழ்நாட்டை திரும்பி பார்த்து அதிசயித்து நின்றது என்றால் அது, அன்னக்கிளி திரைப்படத்தின் பாடல்களால் தான்.

மெய்மறந்த தமிழர்கள்
அன்றைய காலகட்டத்தில் ஆல் இந்தியா ரேடியோ, இலங்கை வானொலியில் அன்னக்கிளி திரைப்படத்தில் இருந்து இளையராஜா இசையில் எஸ்.ஜானகி குரலில் இதோ பாடல் ஒலிக்கிறது என்றால், அப்பாடல் முடியும் வரை ரேடியோ பெட்டி அருகே சிலையாய் உறைந்து நின்றவர்கள் ஏராளம். அப்போது பெரும்பாலான மக்களுக்கு இளையராஜா எப்படி இருப்பார் என்றே தெரியாது. அவர்கள் உணர்ந்ததெல்லாம் ஆழ்மனதில் ஊடுருவி ரத்த நாளங்களில் கலந்துவிட்ட அவரது ராகங்களும், பாடல்களின் இனிமையும் தான்.

கிராமிய இசையை மீட்டெடுத்த இளையராஜா
அன்னக்கிளியில் இடம்பெற்ற சுத்த சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும்... என்ற பாடல் ஒவ்வொரு கிராமத்து கீத்து வீட்டையும் பொளந்து கட்டி கொண்டு எதிரொலித்தது. கல்யாண வீடுகளில் சொந்த பந்தங்களை எல்லாம் துள்ளி குதித்து ஆட்டம் போட வைத்தது. உலக்கையில் நெல்குத்தும் "உஸ் உஸ்" என்ற ஓசையும், முல்லை வெள்ளிபோல அன்னமும், வெள்ளி நூலாக இடியாப்பமும், பஞ்சு பஞ்சாக பணியாரமும் என அத்தனை கிராமத்து உணவுகளும் இப்பாடல் வழியாக மூக்கை துளைத்தன.

மெய்மறந்த இசை ரசிகர்கள்
அன்னக்கிளியே உன்ன தேடுதே... என்ற எஸ்.ஜானகியின் பாடல்தான் இத்திரைப்படத்தின் ஹைலைட்டே. பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் ஜானகியின் ஹம்மிங்கை கேட்டு, அப்படியே மெய்மறந்து கேட்ட ரசிகர்களும் உண்டு. ஒரு பெண்ணின் ஏக்கம், தவிப்பு, நினைவுகள், நீளும் தனிமை என அத்தனை உணர்வுகளையும் ஒரே பாடலில் எதிரொலித்திருப்பார் எஸ்.ஜானகி.
மச்சானை பார்த்தீங்களா... என்ற துள்ளல் இசை பாடலின் தொடக்கத்தில் வரும் "லாலி லாலிலோ" என்ற ஹம்மிங். எஸ்.ஜானகி பாட ஆரம்பிக்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்த்திடும். புல்லாங்குழல், தபேலாவிற்கு நடுவில், நம்மிடம் இருந்து மறக்கடிக்கப்பட்ட தமிழர்களின் ஆதி இசைக் கருவியான பறையை நுழைத்து புரட்சி செய்திருப்பார் இளையராஜா.

பி.சுசீலாவின் சோக பாடல்
தீண்டத்தகாத இசைக் கருவியாக அதுவரை பார்க்கப்பட்ட பறையை, துள்ளல் பாட்டில் ஒலிக்கவிட்டு இசையில் புரட்சி செய்திருப்பார் இந்த பண்ணைபுரத்து ராஜா. சொந்தமில்லை, பந்தமில்லை என்று பி.சுசிலாவின் சோக பாடல், பலரது இதயங்களில் தேங்கியிருந்த கண்ணீரை வெளிக்கொண்டு வந்தது.

தமிழர்களின் உணர்வில் இரண்டற கலந்த இளையராஜா
இப்படி ஏதாவது ஒரு உணர்வுடன் இளையராஜாவின் ஏதாவது ஒரு பாடலுடன் தொடர்புடையதாகவே நம் பந்தம் நீடித்து வருகிறது. எத்தனையோ தருணங்களில், எத்தனையோ மனித மனங்களின் காயங்களுக்கு இளையராஜாவின் பாடல்கள் மருந்தாகின. இந்த இசை மருந்து காலங்கள் கடந்தும் அருமருந்தாக, இசை விருந்தாக இவ்வுலகில் உலா வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இசைஞானி இளையராஜாவுக்கு நியூஸ் தமிழின் வாழ்த்துக்கள்
கிராமிய இசை முதல் சிம்பொனி வரை தடம் பதித்து இசையுலகின் முடிசூடா மன்னனாக 50 ஆண்டுகளைக் கடந்து வலம் வரும் இசைஞானிக்கு வாழ்த்து தெரிவிப்பதில் நியூஸ் தமிழ் தொலைக்காட்சி மகிழ்ச்சி அடைகிறது.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக செய்தியாளர் முகவை பாலா.

Related Link
ஜனநாயக கடமையாற்றிய இசைஞானி

ஜனநாயக கடமையாற்றிய இசைஞானி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போராட்டம் வாபஸ் என சி.ஜே.பி. அறிவிப்பு

9
14 hrs 58 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau