Also Watch
Read this
வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை 45 ரூபாய் 50 காசுகள் அதிகரித்து உள்ளது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 3 ஆயிரத்து 283 ரூபாயாக அதிகரித்து உள்ளது.
ஜூன் ஒன்றாம் தேதி முதல்...
இன்று, ஜூன் முதல் தேதியில், இந்தியாவில் சிலிண்டர் விலை அதிகரித்து உள்ளது. மக்களுக்கு அதிகாலையிலேயே அதிர்ச்சி தரும் வகையில் முக்கியமான அறிவிப்பு வெளியானது. இந்தியா முழுவதும் வணிக எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு சமையல் எரிவாயுவை நம்பி இருக்கும் உணவகம், ஹோட்டல், கேட்டரிங் நிறுவனம், ஆயிரக்கணக்கான சிறு வணிக உரிமையாளர்கள் மீதான சுமையை அதிகரித்து உள்ளது.

விலை நிலவரம்
டெல்லி
19 கிலோ எடை கொண்ட வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை 42 ரூபாய் உயர்த்தப்பட்டு, அதன் சில்லறை விலை ரூ.3,113.50 ஆக உள்ளது.
மேற்கு வங்கத்தில்
இந்த விலை உயர்வு அதிகமாக இருக்கிறது. இங்கு ஒரு சிலிண்டரின் விலை 53.50 ரூபாய் அதிகரித்து ரூ.3,255.50 ஆக உள்ளது.
அடுத்தடுத்து விலை அதிகரிப்பு
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே வணிக எல்பிஜி சிலிண்டர் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வருவதால், இந்த சமீபத்திய விலை உயர்வு வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை வெறும் ரூ.1,691.50 ஆக இருந்தது. தற்போது அதன் விலை ரூ.3,113.50 ஆக உயர்ந்து உள்ளது. பிப்ரவரி மாதம் சிலிண்டர் விலை 49 ரூபாய் அதிகரித்தது. தொடர்ந்து மார்ச் மாதத்தில் மேலும் 115 ரூபாய் உயர்த்தப்பட்டது. ஏப்ரல் மாதத்தில், ஒரே அடியாக ரூ.993 உயர்ந்தது. மே மாதத்திலும் உயர்வை கண்டது.

ஐந்து மாதங்களில் 2 மடங்காக...
தற்போது, ஜூன் மாதத்திலும் மற்றொரு விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. இதன் விளைவாக, வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை, ஐந்து மாதங்களில் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்தது. நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் சிலிண்டர் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
மும்பையில்
19 கிலோ சிலிண்டரின் விலை தற்போது ரூ.3,024.50
சென்னையில்
வணிக சிலிண்டர் விலை ரூ.3,283

சர்வதேச பொருளாதார நெருக்கடி
வணிக எல்பிஜி சிலிண்டர் விலையில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வுக்கு, உலகளாவிய எரிசக்தி விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள சிக்கலே காரணம். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்கள், ஈரான் நெருக்கடி மற்றும் வளைகுடாப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பிரச்சினை ஆகியவை எரிசக்தி விநியோகத்தை கடுமையாகப் பாதித்துள்ளன. இது உலகளவில் எல்பிஜி விலை உயர்வுக்கு வழிவகுத்து உள்ளது. வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை மாற்றமின்றி இருப்பதால் இது குடும்பங்களின் பட்ஜெட்டுக்கு ஓரளவு நிம்மதி அளித்து உள்ளது.