Also Watch
Read this
By: Web Team

ஜெர்மனி பயணத்தின் போது, கையெழுத்தாகியுள்ள 26 ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு 7 ஆயிரத்து 20 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜெர்மானிய நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களால் தமிழ்நாட்டிற்கு மொத்தமாக 15,000 வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறி உள்ளார்.
ஜெர்மனியில், முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இந்தியாவிலேயே 2ஆவது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு தான். பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி பெற்ற மாநிலம், அதிகளவில் தொழிற்சாலைகள் உள்ள மாநிலம் தமிழகம்.
உலகின் முன்னணி தொழில் வல்லரசுகளில் ஒன்றாக ஜெர்மனி விளங்குகிறது. நவீன உற்பத்தி, துல்லிய பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மோட்டார் வாகன தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஜெர்மனி வலிமையோடு உள்ளது.
ஐரோப்பியாவின் முதுகெலும்பாக ஜெர்மனி உள்ளது. இங்கு முதலீடுகளை ஈர்க்க வந்ததற்காக பெருமை அடைகிறேன்.

ஜெர்மனியின் பண்பாடு, தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியன என்னை வெகுவாக ஈர்த்துள்ளது. 60க்கும் மேற்பட்ட ஜெர்மனி நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை நிறுவ தமிழகத்தை தேர்ந்தெடுத்து உள்ளன.
ஜெர்மனி, தமிழகம் இடையே பொருளாதாரத்தில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஜெர்மனி எப்படி ஐரோப்பிய யூனியனின் முக்கியத் தொழில் துறை நாடாக இருக்கிறதோ, அதேபோல இந்திய ஒன்றியத்தில் தொழில்துறையின் இதயத் துடிப்பாக தமிழகம் இருக்கிறது.

சொல்லப்போனால், இந்தியாவின் ஜெர்மனி தமிழகம் தான்.
வெறும் முதலீட்டுக்காக மட்டும் இங்கு நான் வரவில்லை. ஜெர்மனி- தமிழகம் ஆகிய 2 பொருளாதார நாடுகளுக்கு இடையே பாலம் அமைக்க வந்திருக்கிறேன்.
தமிழகத்தை வியாபார சந்தையாக மட்டும் பார்க்க மாட்டீர்கள். உங்களுடன் இருந்து உங்கள் வெற்றியை கொண்டாடுகிற பங்குதாரர்களாக பார்ப்பீர்கள்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதனை தொடர்ந்து, சமூக வலைதளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
ஜெர்மனி வருகையின் போது தமிழகத்திற்கு மொத்தம் 7 ஆயிரத்து 20 கோடி ரூபாய் மதிப்பிலான 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதனால் 15,000 வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். ஜெர்மனி முதலீட்டாளர் மாநாட்டில், 3,819 கோடி ரூபாய் மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவை 9,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும். உலகளாவிய தலைவர்கள் தங்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தமிழகத்தை தேர்ந்து எடுத்து உள்ளனர்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.