Also Watch
Read this
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் சட்டவிரோத மணல் குவாரிகள் செயல்பட தடை கோரிய வழக்கு விசாரணையின்போது, வேடிக்கை பார்க்க முடியாது என நீதிபதிகள் கூறி உள்ளனர்.
மணல் குவாரிகள் விவகாரம்
காவிரி நீர்வள பாதுகாப்பு சங்கம் சார்பாக, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறி இருப்பதாவது;
மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், அரசு புறம்போக்கு நிலங்களிலும், கண்மாய் பகுதியிலும் எவ்வித அனுமதியும் இன்றி, சட்ட விரோத மணல் குவாரி நடைபெற்று வருகிறது. 30 அடிக்கும் மேலாக மண் தோண்டப்பட்டு உள்ளதால், நிலத்தடி நீர் மட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அழகர்மலை வனப் பகுதியில் இருந்து வரும் நீர் வரத்துப் பாதைகள், ஓடைகள் முற்றிலும் அழிக்கப்பட்டு உள்ளன. இதனால் விவசாயப் பயன்பாட்டிற்கு வரும் நீர், முற்றிலும் தடைபட்டு உள்ளது, தினமும் 250க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் கடத்தப்படுகிறது.

அதிகாரிகள் துணையுடன்...
கனிம வளக் கொள்ளை, உள்ளூர் வருவாய்த் துறை மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளின் துணையுடன் நடைபெறுகிறது. இதற்காக போலி அனுமதிச் சீட்டு பயன்படுத்தப்படுகிறது, இந்த போலி சீட்டுகளை பயன்படுத்தி அதிக அளவில் மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர். மேலூர் மற்றும் மேலூரை சுற்றியுள்ள திருவாதவூர், இடையபட்டி, கிடாரிப்பட்டி, பொய்கை கரைப்பட்டி, இலஞ்சிபட்டி, சத்திரப்பட்டி போன்ற பகுதிகளில் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் கடத்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக இந்த சட்டவிரோத குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும். மணல் திருட்டு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். முறைகேடாக மண் அள்ளியவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த கனிம வள அதிகாரிகள் மீதும் குற்றவியல் மற்றும் துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

வீடியோ, புகைப்பட ஆதாரங்கள்
இந்த மனு, நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த ஒரு வார காலமாக இந்த பகுதிகளில் அதிக அளவில் மணல் திருடப்பட்டு வருகிறது என்பதற்கான புகைப்படங்களையும் வீடியோ ஆதாரங்களையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.
நீதிபதிகள் உத்தரவு
இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது;
இவ்வளவு கனரக லாரிகள் மற்றும் மணல் அள்ளும் ஜேசிபி இயந்திரங்கள் காணப்படுகிறது. எவ்வாறு இந்த அளவுக்கு மணல் திருட்டு அனுமதிக்கப்படுகிறது? மனுதாரர்கள் தரப்பில் ட்ரோன் மூலம் அளவீடு செய்து வீடியோ பதிவும் செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் மணல் திருட்டு நடைபெற்றதற்கான ஆவணங்கள் உள்ளன. காவல் துறையிடம் புகார் செய்தால் வருவாய் துறையிடம் புகார் செய்யுங்கள் என கூறுவது இருவரிடமும் புகார் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது போன்றவை தான் தொடர்கதையாகி வருகிறது. மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது இதுவரை எவ்வித குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த பகுதிகளில் எவ்வித மணல் குவாரிகளும் செயல்படக் கூடாது. மணல் அள்ளும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எவ்வித குவாரிகளும் செயல்படக் கூடாது.

வேடிக்கை பார்க்க முடியாது...
இனியும், நீதிமன்றம் இதுபோன்று இயற்கை வளங்கள் திருடப்படுவதை கண்மூடிக் கொண்டு வேடிக்கை பார்க்காது. மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும். மாவட்ட ஆட்சியர், கனிம வளத் துறை, காவல் துறையினர் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றியது குறித்த அறிக்கையை வரும் 30ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். இடைப்பட்ட காலங்களில் மணல் திருட்டு நடைபெறுவதாக தெரிய வந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட நேரிடும்.
இவ்வாறு உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.