Also Watch
Read this
தமிழ்நாட்டில், ஐந்து ஆண்டுகள் தவெக ஆட்சி தொடர விசிக தலைவர் திருமாவளவன் விருப்பம் தெரிவித்து உள்ளார். இடையூறு இல்லாமல் தவெக அரசு இயங்குவதற்கு துணை நிற்போம் என்றும் உறுதி அளித்தார்.

ஐந்து ஆண்டுகள் ஆட்சி தொடரும்...
இதுகுறித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது;
தவெக அரசுக்கு ஆதரவு நல்கும் அத்தனை கட்சிகளும் வாக்கு மாற வாய்ப்பு இல்லை. விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு அளித்த வாக்குறுதிகளை கட்டாயம் காப்பாற்றும். அனைத்துக் கட்சிகளுக்கும் முன்னதாக, காங்கிரஸ் கட்சி ஆதரவு மட்டும் கொடுக்காமல், கூட்டணியிலும் இணைகிறோம் என்று அறிவித்து உறவை உறுதிப்படுத்தி உள்ளனர். ஐந்து ஆண்டுகள் வரை இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்று, இடதுசாரிகள் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றன. இதே நிலைப்பாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கொண்டு உள்ளது. இந்த ஆட்சி, ஐந்து ஆண்டுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இயங்கும் என்று, நான் நம்புகிறேன்.

தவெக கூட்டத்தில்...
தவெக சார்பில் நடைபெறும் கூட்டணி கட்சிகள் கூட்டத்துக்கு எங்களை அழைத்து உள்ளனர். அந்தக் கூட்டத்தில் எங்கள் கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் பொதுச்செயலாளர் ஆகியோர் பங்கேற்க உள்ளோம்.

எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏன்?
அதிமுக எம்எல்ஏக்கள் ஏன் ராஜினாமா செய்கிறார்கள்? என்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அதிமுகவுக்குள் என்ன பிரச்சினை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகும் நிலை ஏற்பட்டு உள்ளது என்றால், அதிமுகவுக்குள் நிலவும் உட்கட்சி முரண் என்ன? என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். ஆனால், யூகங்களின் அடிப்படையில் விவாதங்களின் திசை வழிப் போக்கையே மாற்றும் வேலையையே செய்து கொண்டிருக்கிறார்.

ஆறு எம்எல்ஏக்கள் இதுவரை பதவி விலகி இருக்கின்றனர் என்றால், அதிமுகவுக்குள் நிலவும் மிக முக்கியமான பிரச்சினை இது. இதனை தீவிரமாக விவாதிக்க வேண்டும். இதுகுறித்து அதிமுகவினரிடம் தான் கேட்க வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.