Also Watch
Read this

கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்கா - ஈரான் இடையே இன்று மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று, அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மறுப்பு
இரண்டு வாரங்களுக்கு முன்பு, இரு நாடுகளுக்கு இடையே முதற்கட்ட அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அதனை மீறி கடந்த வாரம் இரு நாடுகளும் மீண்டும் தாக்குதலை தொடங்கின. இந்த நிலையில், ஈரான் கேட்டுக் கொண்டதை அடுத்து, இன்று கத்தாரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அமெரிக்காவுடன் தற்போது எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபட போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, காசாவில் மக்கள் குடியிருக்கும் கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 வயது சிறுவன் உள்பட மூவர் கொல்லப்பட்டனர். பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தனது தாயை சந்திப்பதற்காக அவர் வசிக்கும் கூடாரத்திற்கு 8 வயது சிறுவன் சென்ற போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் சிறுவனின் தாய் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் போராட்டக் குழுவை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் 6 பேர் பலி
ஜெர்மனியின் ஸ்டாட் (Stade) நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். அங்குள்ள இளைஞர் மையத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் 6 பேர் குண்டு பாய்ந்து பலியான நிலையில், பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் இரண்டு இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வான்வழி தாக்குதலில் 29 தீவிரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தான் மீது, பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 29 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. பாகிஸ்தானின் கராச்சியில் கடந்த 28ஆம் தேதி தெஹ்ரி இ தலிபான் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 4 பேர் உயிரிழந்தனர். 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் வான்வழி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆப்கானிஸ்தானின் பக்தியா, கனுர் ஆகிய பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பயங்கரவாதிகள் 29 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved